உரிமையைக் கேட்க! | ஆர்கே. சாமி | Veritas Tamil

25 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 16ஆம் வாரம் – வெள்ளி
புனித யாக்கோபு – திருத்தூதர் -விழா

2 கொரி 4: 7-15
மத்தேயு  20: 20-28

 
கடமையைச் செய்வோம் உரிமையைக் கேட்க!
 
முதல் வாசகம்.
 
முதல் வாசகத்தில், புனித பவுல் ஆண்டவராகிய இயேசுவைப் பின்பற்றுபவர்களை மண் பானைகள் என்று விவரிக்கிறார்.    அவர்கள் தெய்வீகச் செல்வமான   கடவுளின் வல்லமையை சுமந்து செல்கிறார்கள், இதனால் நம்முடையது அல்ல, அவருடைய ஆற்றல் தெளிவாகத் தெரிகிறது. துன்பம், துன்புறுத்தல் மற்றும் தாக்கப்படுவது போன்ற துன்பங்கள் இருந்தபோதிலும், நாம் நசுக்கப்படுவதில்லை, கைவிடப்படுவதில்லை அல்லது அழிக்கப்படுவதில்லை. நம் உடலில் இயேசுவின் மரணத்தை அனுபவிக்கிறோம், இதனால் அவருடைய வாழ்க்கை நம்மிலும் வெளிப்படும் என்கிறார் பவுல்.

அடுத்து,  இந்த மண் பண்டங்களான எளிய மக்களில், ஆண்டவராகிய இயேசு தாமே இருக்கிறார் என்றும்  கடவுள் இந்த எளிய, மண் பாத்திரங்களைப் பயன்படுத்தி, எல்லா   நாடுகளிலும் உள்ள அனைத்து மக்களுடனும், மிகவும் விலைமதிப்புள்ள  கொடையாகிய கிறிஸ்துவை   பகிர்ந்து கொள்கிறார் என்று குறிப்பிட்டு எழுதுகிறார் பவுல்,

நற்செய்தி.

இன்றைய மத்தேயு நற்செய்தியில், யாக்கோபு மற்றும் யோவானின் தாய்   இயேசுவிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறாள்.    இருவரில் ஒருவன் இயேசுவின்    அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்ய வேண்டும்  என்று அவள் விரும்புகிறாள். 

இயேசு மறுமொழியாக, ‘நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?” என்று கேட்டதோடு, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்” என்றார். இதைக்கோட்டபோது, மற்ற பத்து பேரும் யாக்கோபு மற்றும் யோவான் மீது கோபம் கொள்கின்றனர். இயேசுவோர், அவரகள் உலகத் தலைவர்களைச் சுட்டிக்காட்டி,  அவர்களிடையே அப்படி இருக்கக்கூடாது என்றும், அவர்களில்  பெரியவராக இருக்க விரும்புகிறவர் அவர்கள மத்தியில் தொண்டராய் இருக்கட்டும் என்றும். அவர்களுள்   முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் அவர்பளுக்குப் பணியாளராக இருக்கட்டும் என்று அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

 இன்று திருத்தூதரான புனித யாக்கோபுவின் திருநாளை திருஅவை கொண்டாட பணித்துள்ளது.  இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் இயேசுவுக்கு மிக நெருக்கமான முதல் வட்டத்தில் இருந்த பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூன்று திருத்தூதர்களில்  ஒருவர் இவர். இயேசுவுக்கு உறவினர். செபதேயுவின் மூத்த மகன். 'என்னைப் பின்பற்றி வாருங்கள்!' என்று சொன்னவுடன், வலைகளையும், படகுகளையும், தந்தையையும் விட்டுவிட்டுப் பின்சொன்றவர். அத்தோடு, இவர் இயேசு யாயிரின் மகளை உயிர்ப்பிக்கும்போது அருகில் இருந்தவர்,  மேலும் இயேசுவின் இரத்தவியர்வையின்போது கெத்சமேனித் தோட்டத்தில் உடனிருந்தவர்களில்  ஒருவர்.  

விண்ணகத்தில், இயேசுவுக்கு வலப்புறம் அல்லது இடப்புறம் அமர விரும்பியவர். இந்த நிகழ்வைத்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசித்தோம்.  

'நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்க முடியுமா?' என்று இயேசு கேட்க, 'முடியும்' என்று சொன்னதோடு குடித்தும் காட்டியவர் அதாவது இயேசுவுக்காகத் துன்பங்களை ஏற்றவர். 

ஸ்பெயின், போர்ச்சுகல், மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மிகவும் அதிகமாகப் போற்றப்படுபவராக விளங்குகிறார்,  எருசலேம் திருஅவையின் முதல் ஆயாராக நியமனம் பெற்றவர். இவரது காலத்தில்தான் முதல் எருசலேம் சங்கம் (கிபி 49-ல்)  எருசலேமில் கூடியது. அச்சங்கத்தில் பவுல் அடிகள் முன்வைத்த புறவினத்தார் விருத்தசேதனம் செய்ய வேண்டுமா என்ற கேள்வியை  மிக அழகாகக் கையாண்டு தீர்வு கண்டவர்.

இவர்   திருஅவைக்கு ஒரு திருமுகமும் எழுதினார். அந்தத் திருமடலில் இருந்துதான் 'நோயிற்பூசுதல்' என்னும் அருளடையாளம் பிறக்கின்றது. (யாக் 5:14) 'நம்பிக்கையும் செயலும் ஒன்றிணைந்து செல்ல வேண்டும்,' 'துன்பத்தின் வழியாக மட்டுமே வாழ்வு' என்ற கருத்துக்களை முன்வைப்பதும் இவரே.

 இவர் இறந்தபின், எருசலேமிருந்து இவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு இஸ்பானிய நாட்டில் உள்ள 'கம்போஸ்தெலா' என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது என்பது வரலாறு.
நற்செய்தியில் தமது மகன்களுக்காகப் பரிந்து பேசும் தாயைப் பார்த்தோம். இயேசுவோ, அந்த கவலை வேண்டாம். அதைத் தந்தை கவனித்துகொள்வார் என்று பதில் கூறுகிறார். ஆக வேண்டியது என்னவென்றால், இயேசுவோடு நற்செய்திக்காக அவர்கள் துன்புறத் தயாராக இருக்க வேண்டும் என்பதாகும். ‘கடமையைச் செய் உரிமையைக் கேள்’ என்பது போல் இயேசுவின் பதில் அமைகிறது. முதலிடம் தேடுவோருக்கு அல்ல, பணி வாழ்வில் நேர்மையாக ஈடுபடுவோருக்கு உரிய இடம் கிடைக்கும். 
 
இறைவேண்டல்; 

 'துன்பத்தின் வழியாக மட்டுமே வாழ்வு' என்பதைச் சுட்டிக்காட்டிய ஆண்டவரே, பட்டம், பதவி எனும் பேராசை என்னை அண்டாதிருக்க உதவுவீராக, ஆமென்.

  


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452