இயேசுவின் திருப்பெயரில் செயல்படுவது சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பாஸ்கா எண்கிழமை –சனி
புனித மாற்கு – நற்செய்தியாளர்-விழா
1 பேதுரு  5: 5b-14.
 மாற்கு 16: 15-20


இயேசுவின் திருப்பெயரில் செயல்படுவது சீடத்துவம்! 
 
முதல் வாசகம்.

இவ்வாசகப் பகுதியில்,  பேதுரு கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான பண்புகளையும் சோதனைகளில் நிலைத்திருக்கும் மனப்பாங்கையும் எடுத்துரைக்கிறார். கடவுள் எப்போதும், அகந்தையுள்ளவர்களுக்கு எதிராகத் தாழ்மையுள்ளவர்களுக்கு அவர் தம் அருளை பொழிகிறார் என்றும், அலகையானது, “கர்ஜிக்கும் சிங்கம் போல” யாரைக் விழுங்கலாம் என்று தேடிக்கொண்டிருக்கிறான் என்றும், இவ்வுலகில்  சிறிது காலம் துன்புற்றாலும், கடவுள் நம்மை நிலைநிறுத்தி, பலப்படுத்தி, திடப்படுத்துவார் என்கிறார் பேதுரு. நாம் நிலைவாழ்வுக்குரியவர்கள் எனும் பேருண்மையை நினைவூட்டி போதிக்கிறார்.

நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில்,  உயிர்த்தெழுந்த இயேசு தமது சீர்களுக்கு கொடுத்த இறுதி கட்டளை, அதன் வாக்குறுதிகள், மற்றும் அப்போஸ்தலர் பணியின் தொடக்கம் பற்றி சொல்லப்படுகிறது. மீட்பின் செய்தி சிலருக்கு மட்டுமானதல்ல, அனைவருக்கும் உரியது. எனவே நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ள சீடர்கள் மறைப்பணியாளர்களாக  உலகுக்கு அனுப்பப்படுகிறார்கள்.
அவர்கள், இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.

சிந்தனைக்கு.

இன்று திருஅவை நற்செய்தியாளர் புனித மாற்குவின் விழாவைக் கொண்டாடுகிறது. புனித  மாற்கு கி.பி. 60-க்கும் 70-க்கும் இடையில் தனது நற்செய்திப் பதிவை எழுதினார். மத்தேயு மற்றும் லூக்காவைப் போல அவர் ஒரு திருத்தூதர் அல்ல, ஆனால் அவர் பேதுருவுக்கு நெருக்கமானவராக இருந்தார். அவருடைய எளிமையான மற்றும் நேரடியான நற்செய்திப் பதிவு, மற்ற நற்செய்தியாளர்களுக்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக இருந்தது. ஏறுனில், மாற்கு நற்செய்தியே முதன் முதலில் எழுதப்பட்ட நற்செய்தி. மாற்குவின் இயேசு சித்தரிப்பு மிகவும் மனிதத்தன்மை வாய்ந்தது. மேலும்,  “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். (மாற்கு 16:15) என்பதற்கு அது நமக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது.

மாற்கு பற்றி நாம் அறிந்தது யாதெனில், அவர், தனது உறவினரான பர்னபாவுடனும் பவுலுடனும் தொடக்க மறைத்தூதுப் பயணத்தில் சென்றார், ஆனால் அப்பயணம் முடிவடைவதற்கு முன்பே அவர்களை விட்டுப் பிரிந்து சென்றார். இது பவுலுடன் அவருக்குக் கடுமையான கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியது. இந்த முரண்பாடு இருந்தபோதிலும், மாற்கும் பவுலும் சமாதானம் அடைந்தனர். பின்னர் பவுல், தான் சிறையில் இருந்தபோது மாற்குவைத் தனது உடன் ஊழியராகவும், உதவியான தோழராகவும் குறிப்பிட்டார் (கொலோ 4:10–11; 2 தீமோ 4:11).

மாற்கு பேதுருவுடனும் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார்; பேதுரு அவரை அன்புடன் “மாற்கு, என் மகனே” என்று அழைத்தார் (1 பேதுரு 5:13). பிற்கால மரபுகளின்படி, மாற்கு எகிப்தில் உள்ள அலெக்சாண்திரியாவின் முதல் ஆயரானார் என்றும், அங்கு அவர் நற்செய்தியைப் போதித்தார் என்றும் கூறப்படுகிறது. மறைத்தூதுப் பணிக்காக அவர் அங்கு மறைசாட்சியாக  மரித்ததாகவும், கற்களின் மீது இழுத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

புனித மாற்குவைப் போலவே, நம் ஒவ்வொருவரும் நற்செய்தி பணிக்கான பணியாளராக  அழைக்கப்பட்டுள்ளோம். நாம் இயேசுவின் பெயரில் செயல்படும்போது அவருடைய வாக்குறுதிகள் உண்மையாகவே நம் வழியாகவும் நிறைவேறும் .  

இறைவேண்டல்.
   
புனித மாற்குவே, கிறிஸ்துவின் மீது நீர் கொண்டிருந்த பற்றுதலின் மூலம், எண்ணற்ற மக்கள் உங்கள் மறையுரையால் இயேசுவில் நம்பிக்கை  கொண்டதோடு, தூய ஆவியாரின் ஏவுதலால் நீர் படைத்த நற்செய்தியால் நாங்கள் வளம்பெறுகிறோம்.  உம்மை ஒரு கருவியாகக் கொண்ட ஆண்டவருக்கு நன்றி. ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்

+6 0122285452