புனித அன்னாள் பெருவிழாவுக்கு மாநில பாரம்பரிய அங்கீகாரம் | Veritas Tamil
மலேசியாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள புக்கிட் மெர்டாஜாமில் அமைந்துள்ள புனித அன்னாள் சிறுபேராலயத்தில் (Minor Basilica of St. Anne) ஆண்டுதோறும் ஜூலை மாதம் நடைபெறும் புனித அன்னாள் பெருவிழா, பினாங்கு மாநில பாரம்பரியச் சட்டம் 2011-இன் கீழ், மாநிலத்தின் பாதுகாக்கப்படும் அருவப் பண்பாட்டு பாரம்பரியங்களில் ஒன்றாக அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெற்றுள்ளது.
மே 9 அன்று குபாங் செமாங் பகுதியில் நடைபெற்ற பினாங்கு மாநில பாரம்பரிய அறிவிப்பு விழாவில், மாநில முதலமைச்சர் சௌ கொன் யியோ (Chow Kon Yeow) இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அங்கீகாரத்தின் மூலம், புனித அன்னாள் பெருவிழா பினாங்கு மாநிலத்தின் பாதுகாக்கப்படும் பண்பாட்டு மரபுகளில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதுடன், மாநிலத்தின் சமய மற்றும் பண்பாட்டு வாழ்வில் அதன் நீண்டகால பங்களிப்பும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் நடைபெறும் இந்தப் பெருவிழா, மலேசியாவின் மிகப்பெரிய கத்தோலிக்க திருப்பயணமாகவும், தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவ திருப்பயணங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. மலேசியா மட்டுமல்லாமல், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான திருப்பயணிகள் இதில் பங்கேற்கின்றனர்.
பல மொழிகளில் திருப்பலிகள், மெழுகுவர்த்தி பவனி, ஜெபமாலை வழிபாடு மற்றும் புனித அன்னாளை மையமாகக் கொண்ட பக்தி நிகழ்வுகள் இந்தப் பெருவிழாவின் முக்கிய அம்சங்களாகும்.
ரேடியோ வேரித்தாஸ் ஆசியாவுக்கு அளித்த பேட்டியில் திருத்தொண்டர் லாசரஸ் அந்தோணி அவர்கள், இந்த அங்கீகாரத்திற்காக பினாங்கு மாநில அரசுக்கு நன்றி தெரிவித்தார். "இது வெறும் ஆண்டுதோறும் நடைபெறும் சமய விழா மட்டுமல்ல; தலைமுறைகளாகக் கடத்தப்பட்டு, பக்தி, ஒற்றுமை மற்றும் பினாங்கின் பண்பாட்டு அடையாளத்தை வலுப்படுத்தும் உயிருள்ள பாரம்பரியம்" என்று அவர் கூறினார்.
புனித அன்னாள் ஆலயத்தின் வரலாறு 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பாட்டு காவான் பகுதியில் பரவிய நோயிலிருந்து தப்பிய சீன மற்றும் இந்திய கத்தோலிக்கர்கள் புக்கிட் மெர்டாஜாமில் குடியேறி, அன்னாள் மலையடிவாரத்தில் ஜெபம் செய்யத் தொடங்கியதே இவ்வாலயத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. பின்னர் 1865ஆம் ஆண்டு இரண்டாவது ஆலயமும், 1888ஆம் ஆண்டு அருள்பணி எப். பி. சோரின் அவர்களால் பழைய ஆலயமும் கட்டப்பட்டன. தற்போது பயன்பாட்டில் உள்ள புதிய பேராலயம், பெருந்திரளான திருப்பயணிகளை கருத்தில் கொண்டு 2002ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த ஆலயத்திற்கு சிறுபேராலயம் (Minor Basilica) என்ற சிறப்புப் பட்டத்தை வழங்கினார். இந்த அங்கீகாரத்தைப் பெற்ற மலேசியாவின் முதல் ஆலயம் இதுவாகும்.