மரங்களே பூமியின் கொடை | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil

மனிதர்களின்றி மரங்கள் வாழும் - ஆனால் மரங்களின்றி மனிதர்களால் வாழ இயலாது.

2100ஆம் ஆண்டில் அதாவது இன்னும் 82 வருடங்களில் புவியின் வெப்பம் 3 டிகிரி செல்சியஸ்வரை உயரும் என்றும், அதன் விளைவாகக் கடலின் நீர்மட்டம் உயரும், கடுமையான வறட்சி நிலவும், விளைச்சல் குறையும், இது போன்ற விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் எச்சரிக்கை விடுக்கின்றனர். 
இந்நிலையில் புதுச்சேரியை அடுத்துள்ள பனித்திட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களான முகுந்தன், மகாவிஸ்னி, சுவேதா, பரணிதரணி, ஹரிணி ஆகியோர் புவியின் வெப்பத்தைக் குறைக்கக்கூடிய மரங்களைக் கண்டெடுக்கும் ஆய்வுத் திட்டத்தை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மரங்களைக் கொண்டே பூமிக்குக் குடை பிடிக்கலாம் என்ற உண்மையை இம்மாணவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வுத் திட்டம் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரியில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 25வது தேசிய சிறார் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தை வழிநடத்திய ஆசிரியர் ஜான்சி லாவண்யா 'தி இந்து' நாளிதழில் இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார். "வளரும் தலைமுறைக்கு இந்தப் புவியை அதன் இயற்கைத் தன்மை கெடாமல் பாதுகாக்கச் சொல்லித் தருவது அவசியமாகிறது. இதன்படி புவியின் வெப்பத்தைப் பெருமளவுக் குறைக்கக்கூடிய மரங்களைக் கண்டெடுக்கும் ஆய்வைப் பனித்திட்டுக் கிராமத்தில் மேற்கொண்டோம். 

அதிக எண்ணிக்கையில் உள்ள மரங்கள் மற்றும் அதிக நிழல் தரும் மரங்களைத் தேர்வு செய்து, அந்த மரங்களின் கீழ் நிலத்தின் வெப்பநிலை மற்றும் காற்றின் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் போன்றவற்றைப் பதிவு செய்தோம். இதேபோன்று திறந்தவெளியில் நிலத்தின் வெப்பம் காற்றின் வெப்பநிலை ஈரப்பதம் ஆகியவற்றையும் பதிவுசெய்து இரண்டையும் ஒப்பிட்டோம். எந்தெந்த மரங்கள், தாவரங்கள், பூச்சிகள் போன்ற உயிரினங்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை அளிக்கின்றன என்பதை அறிய flora (தாவர வாழ்வியல் சூழலை அறிவது) மற்றும் Fauna (பூச்சியினங்கள் வாழ்வியல் சூழலை அறிவது) முறையில் இந்த ஆய்வை மேற்கொண்டோம்.
 
இந்த ஆய்வின் முடிவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த, புவியின் வெப்பத்தைப் பெரிதும் குறைக்கக்கூடிய மரங்களாக ஆலமரம், அரச மரம், மாமரம், வேப்பமரம், மகிழ மரம், பூவரச மரம் போன்றவை கண்டறியப்பட்டன, இந்த ஐந்து மாணவர்களும் இதுரை 125க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இவர்களுடன் அதே கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வலர் சிவசக்கரவர்த்தியும் இணைந்துள்ளார் என்றார் ஆசிரியர் ஜான்சி லாவண்யா.