திருவிவிலியத்தை பிரெய்லி முறையில் வாசித்த கண்பார்வையற்ற பெண்மணி ! | Veritas Tamil
இராமநாதபுரம் திருத்தலப் பேராலயத்தில் நெகிழ்ச்சி:
உயிர்ப்புப் பெருவிழா திருப்பலியில் திருவிவிலியத்தை பிரெய்லி முறையில் வாசித்த கண்பார்வையற்ற பெண்மணி
சிவகங்கை மறைமாவட்டம், இராமநாதபுரம் புனித சூசையப்பர் திருத்தலப் பேராலயத்தில் நடைபெற்ற பாஸ்கா விழிப்பு வழிபாட்டின் போது, கண்பார்வையற்ற பெண்மணி ஒருவர் திருவிவிலிய வாசகத்தை வாசித்தது அங்கிருந்த இறைமக்களை வியப்பிலும் பக்தியிலும் ஆழ்த்தியது.
உயிர்ப்புப் பெருவிழா விழிப்பு திருப்பலியின் போது, அந்தப் பங்கின் உறுப்பினரும் கண்பார்வையற்றவருமான கிறிஸ்டி ராணி, பிரெய்லி (Braille) முறையைப் பயன்படுத்தி மூன்றாவது மறைநூல் வாசகத்தை வாசித்தார். அவர் வாசக பீடத்தை நோக்கி நடந்து சென்றபோது, பேராலயம் முழுவதும் அமைதி நிலவியது. அங்கிருந்த அனைவரும் மிகுந்த கவனத்துடனும் பக்தியுடனும் அந்த வாசகத்தைக் கேட்டனர்.
ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்திற்கு முன்பாக வாசிக்க கிறிஸ்டி ராணி தயங்கினாலும், அவரது கணவரின் ஊக்கம் அதனைச் சாத்தியமாக்கியது. "இது ஒரு சிறந்த வாய்ப்பு. கண்பார்வைக் குறைபாட்டை ஒரு பெரிய தடையாக நினைத்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு, மனத்தடைகளை உடைத்து முன்வருவதற்கு இது ஒரு முன்மாதிரியாகவும் விழிப்புணர்வாகவும் அமையும்," என்று கூறி அவர் மனைவியை உற்சாகப்படுத்தினார்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "பங்குத்தந்தை அளித்த அந்த விவிலியப் பகுதியை நாங்கள் மனப்பாடம் செய்து கூட சொல்லியிருக்க முடியும். ஆனால், நாங்கள் இந்த நிலையை அடைய உதவிய பிரெய்லி முறைக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாகவும், மற்றவர்களுக்கு ஒரு வலிமையான விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே அந்த முறையிலேயே எழுதி வாசித்தோம்," என்றனர்.
இந்த விழிப்பு வழிபாட்டுத் திருப்பலியைத் தலைமை தாங்கி நடத்திய ஆனந்தா கல்லூரியின் செயலர் அருட்பணி செபாஸ்டின் தனது மறையுரையில், "இதுவே உண்மையான உயிர்ப்பு; இதுவே உயிர்ப்பின் சாட்சிய வாழ்வு," என்று இந்த நிகழ்வைப் போற்றிப் பேசினார்.
கிறிஸ்டி ராணியின் கணவர் மோட்ச பிரகாசமும் கண்பார்வையற்றவர் ஆவார். இவர்கள் இருவரும் தமிழக அரசின் சிறப்பு நியமனத்தின் கீழ் ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். முழு விவிலியமும் பிரெய்லி வடிவில் இவர்களிடம் இல்லாதபோதிலும், ஆலயப் பணிகளில் தங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொள்வதோடு, வாசிக்கச் சொல்லும் குறிப்பிட்ட பகுதிகளை பிரெய்லி முறைக்குத் தாங்களாகவே மாற்றி எழுதிப் பயன்படுத்துகின்றனர்.
இது குறித்து இராமநாதபுரம் வட்டார முதன்மைப் பணியாளரும் பங்குத்தந்தையுமான அருட்பணி சிங்கராயர் கூறுகையில், "பங்குத்தந்தை என்ற முறையில் விசுவாசிகளின் இல்லங்களைச் சந்தித்தபோது, பங்கில் பல மாற்றுத்திறனாளிகள் இருப்பதை அறிந்தேன். அவர்களைச் சிறிய குழுக்களாக ஒருங்கிணைத்து, திருச்சபையின் முக்கிய உறுப்பினர்களாகச் செயல்பட வழிவகை செய்துள்ளோம். இதில் திரு. மோட்ச பிரகாசம் - திருமதி கிறிஸ்டி ராணி குடும்பத்தினர் மிக முக்கியமான மற்றும் துடிப்பான ஒரு குடும்பமாகத் திகழ்கின்றனர்," என்றார்.
மேலும், இவர்களது இல்லம் ஆலயத்திலிருந்து ஐந்து கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருந்தாலும், இவர்கள் வழக்கமாகத் திருப்பலியில் கலந்துகொண்டு இறைப்பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து வருவதாகவும் பங்குத்தந்தை குறிப்பிட்டார்.