உள ஒன்றிப்பினால் உறவை வெல்க! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil

உள ஒன்றிப்பினால் உறவை வெல்க!

கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல. (1100)

கண்ணும் கண்ணும் ஒன்றாய் இணைந்து விட்டால், வாய்ச்சொற்கள் எத்தகைய பயனும் இல்லாதவையாகி விடும்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. படம் எடுத்ததால் அது பாம்பு எனப்பட்டது. படம் பா...பாம்...பாம்பு...

அது ஓர் ஓலைக் குடிசை, அங்கே ஓர் இளம் தாய். தவழ்ந்து விளையாடும் அளவில் ஒரு கைக்குழந்தை. அவ்வீட்டுத் தலைவர் கையாள் வேலைக்கு வெளியூர் சென்று விட்டார். வீட்டைத் தூய்மைப்படுத்தும் வேலையில் விளக்குமாறு விறுவிறுப்பானது. சுவர் ஓரத்தில் ஒரு நீளமான கம்பு.

இது எப்படி இங்கே? கையால் எடுக்கப் போனாள் அப்பெண். அதற்குள் அது நெளிந்து கொண்டே நகர்ந்தது. குடிசைக்குள் பாம்பு என்று அறிந்து பதற்றம் கொண்டாள். மகளின் அழுகுரல் மேலும் கலக்கமடையச் செய்தது.

அடுத்த நாள் காலையில் கண்விழித்து முகம் கழுவி அமர்ந்து கொண்டே அடுப்பு பற்றவைத்தாள். நேற்றைய நிகழ்ச்சி நினைவில் நிழலாடியது. 'என்ன செய்வது? 'பாம்பு' என்று அலறினால் பலரும் ஓடி வந்து பாம்பை அடித்துக்கொன்று விடுவர்.

உயிர்களிடத்தில் அன்பு அத்தாய்க்கு அதிகம் இருந்தது. இருப்பினும் பாம்பு நடமாடும் குடிசைக்குள் கைக்குழந்தையோடு எப்படி உறங்குவது? கவலை மனத்தைக் கவ்விக் கொண்டது.

பொழுது விடிந்தது. பாயில் குழந்தை. தண்ணீர் எடுப்பதற்குச் சென்றாள் தாய். திரும்பி வந்தாள். இரத்தம் உறைந்தார்ப்போல் நின்றாள். தன் பச்சிளம் குழந்தை, பாய்க்கருகில் கிடந்த பாம்பைத் தொட்டுத் தடவிச் சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.

இடுப்பில் இருந்த குடம் 'டங்'கென கீழே விழுந்தது. 'ஓ'வெனக் கத்தினாள். தரையில் ஏற்பட்ட அதிர்வால், தனக்குத் தீங்கு நேரிடும் என்ற உணர்வால் படம் எடுத்தது பாம்பு.

வாய் அடைத்துப் போய் நின்ற தாய் கையெடுத்துக் கும்பிட்டாள். 'போய் விடு... என் குழந்தையை ஒன்றும் செய்து விடாதே...' என்று அமைந்த குரலில் கெஞ்சினாள். பாம்பின் படம் குழந்தைக்கு வியப்பு. தாயின் முகம் குழந்தைக்கு கலக்கம். அதற்குள் சத்தம் கேட்ட பக்கத்து வீட்டார் ஓடி வந்தனர். பாம்பு விரைவாகச் சென்றுவிட்டது.

தயவுசெய்து பாம்பை அடித்துக் கொன்று விடாதீர்கள்... காட்டு அதிகாரிகளிடம் சொல்லி, அதைப் பிடித்துப் போகச் சொல்லுங்கள் என்றாள் அத்தாய். அவள் விருப்பப்படியே காட்டு ஊழியர்கள் விரைந்து வந்தனர். பாம்பைப் பிடித்துக் கொண்டு காட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டனர்.

பாம்பு இருக்கும் குடிசையில் மாந்தர் வாழ இயலாது. குடிசையில் பாம்பு இருக்கிறது என்ற உணர்வே அச்சத்தை மிகுதியாக்கி விடும். எனவே, அது அப்புறப்படுத்தப்பட்டுத்தான் ஆக வேண்டும்.

ஆயினும், அதனொடும் குழந்தை தொட்டு சிரித்து, மகிழ்ந்திருக்க முடியும். கள்ளம் கபடம் இல்லா நெஞ்சோடுகண்களில் அன்போடு பழகினால் எம்மொழிச் சொற்களும் தேவையில்லை தானே.

ஆனால், அதேவேளையில் நல்ல பாம்பின் கெட்ட நச்சுத்தன்மையை விடவும் தீதான அணுஉலைகள், நச்சு ஆலைகள் போன்றவையும் உலகமயம். சாதியம் முதலியவையும் 'நான். எனது ' என்னும் தன்னல உணர்வும் ஒதுக்கித் தள்ளப்பட வேண்டியவையே. குழந்தையைக் காப்பாற்றும் தாயின் செயலுக்கு இணையான கடமையைச் செய்யக் களம் இறங்குவோம்

எழுத்து
அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன்