தீர்ப்பில் அல்ல, மன்னிப்பில் வாழ்வு வளம்பெறும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

10 ஜூலை 2025
பொதுக்காலம் 14 ஆம் வாரம் – வியாழன்
தொடக்க நூல் 44: 18-21, 23-29; 45: 1-5
மத்தேயு 10: 7-15
தீர்ப்பில் அல்ல, மன்னிப்பில் வாழ்வு வளம்பெறும்!
முதல் வாசகம்.
நேற்றைய யோசேப்பின் கதை இன்றும் தொடர்கிறது. எகிப்தில் மட்டுமல்லாமல், சுற்றிலும் உள்ள நாடுகளில் உணவுக்குக் கடும்பஞ்சம் நிலவியபோது கானான் நாட்டில் வாழ்ந்து வந்த யாக்கோபு, தன் கடைசி மகனான பெஞ்சமினைத் தவிர்த்து மற்ற பத்துப் புதல்வர்களையும் எகிப்து நாட்டிற்குத் தானியம் வாங்க அனுப்பி வைத்தார் என்பது நாம் அறிந்த ஒன்று.
யோசேப்பு (தன் தம்பி) பெஞ்சமினை கூட்டி வரும்படி பணிக்கவே, அவர்கள் தங்கள் தந்தையோடு இருக்கும் பெஞ்சமினைக் கூட்டிக்கொண்டு வருவதற்காக கானான் நாட்டிற்குச் சென்றுவிட்டு, அவரைக் கூட்டிக்கொண்டு வராமல் வெறுமென திரும்பி வந்தார்கள்.
யோசேப்பு தன் சகோதரர்களுக்கு தன்னை வெளிப்படுத்துகிறார். அவர்கள் தன்னை அடிமைத்தனத்திற்கு விற்றதற்காக அவர்கள் மீது கோபப்படவில்லை என்று அவர் விளக்குகிறார். அது கடவுளின் திட்டம் என்கிறார். இந்தச் செயலில் கடவுளின் அருளை அவர் அங்கீகரிக்கிறார், ஏனென்றால் யோசேப்பு எகிப்துக்கு அழைத்துச் செல்லப்படாவிட்டால், யாக்கோபின்/இஸ்ரயேலின் குழந்தைகள் கடும் பஞ்சத்தின் விளைவுகளை அனுபவித்திருப்பார்கள் என்பதோடு, யோசேப்பு, “உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்” என்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு பன்னிரு "திருத்தூதர்களை" அனுப்புகிறார். அவர்கள் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் மற்றும் கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அவர்கள் கூடுதல் பொருட்கள், பணம் அல்லது பயண உபகரணங்களை எடுத்துச் செல்லக்கூடாது என்று பணிக்கிறார். அவ்வாறே, அவர்களும் செல்கிறார்கள்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியை பலமுறை நாம் வாசித்திருப்போம். திருப்பலி மறையுரையில் விளக்கம் பெற்றிருப்போம். இயேசு தம் திருத்தூதர்களை அனுப்பும்போது தெளிவான வழிமுறைகளைப் பின்பற்ற கட்டளை பிறப்பிக்கிறார். அவற்றில், நோயுற்றவர்களைக் குணப்படுத்துதல், இறந்தவர்களை உயர்ப்பித்தல் , தொழுநோயாளிகளைச் சுத்தப்படுத்துதல் மற்றும் பிசாசுகளைத் துரத்துதல். அத்தோடு வழிபயணத்தின்போது எப்படி செல்ல வேண்டும் என்பனவாகும். சுருங்கச் சொன்னால், ஆண்டவரையும் அவருடைய வல்லமையையும் நம்பிப் பணி வாழ்வுக்குப் பயணித்தல் இன்றியமையாததாகும்.
முதல் வாசகத்தில், தன்னை தீர்த்துக்கட்ட நினைத்த சகோதரர்களைச் சமயம் பார்த்து, பழிதீர்க்க யோசேப்பு அவரிடமிருந்த படை பலத்தைக்கொண்டு அவர்களை எளிதாகக் கொன்றிருக்கலாம். மாறாக, அவர் கொண்டிருந்த பதவி, கடவுளின் கொடை என அவர் உணர்ந்ததால், சகோதரர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிறார். அவரை ஒரு ‘பொருளாக’ பிறருக்கு விற்றார்கள் சகோதரர்கள். வினையை விதைத்தவர் உள்ளத்தில் அன்பை விதைத்தார் யோசேப்பு. மன்னிப்பு எனும் கடவுளின் கொடையை யோசேப்பு பெரிதெனக் கொண்டார்.
அவ்வாறே, கலிலேயாப் பகுதியில் நூற்றுக்கணக்கானோர் இருந்த போதிலும், திருத்தூதுப் பணிக்கான இயேசுவின் அழைப்பானது திருத்தூதர்கள் பெற்ற கொடை என்பதை இயேசு உணரச் செய்கிறார். ஆம், நாம் பெற்றிருக்கும் அனைத்தும் கடவுளின் கொடை என உணர்ந்தோமானால், அவற்றை நம்பியே நம்மால் வாழ முடியும். இதை தம் திருத்தூதர்களுக்கு செயல்முறையில் இயேசு எடுத்துரைக்கிறார். குறைவிலும் கிறிஸ்தவர்களான நம்மால் நிறைவாக வாழ முடியும்.
ஒரு காலத்தில் மறைபரப்புக்காக தாய் நாட்டை விட்டு வந்த பிரான்ஸ் நாட்டு அருள்பணியாளர்கள் உடன் எதையும் கொண்டு வரவில்லை. உயிர்த்த ஆண்டவரில் கொண்ட நம்பிக்கையே அவர்களின் மிகப் பெரிய ஆற்றலாக இருந்தது. அவர்கள் சாதித்தார்கள். அழைப்பை கொடையாகப் பார்ப்பவர் மட்டும்தான் தன் வாழ்வைக் கொடையாகக் கொடுக்க முடியும். உலகப் பற்றையும் பொருளாசையையும் துறப்பவர்களால் மட்டுமே நல்ல சீடர்களாக விளங்க முடியும் என்பது இயேசுவின் போதனையாக உள்ளது.
கிறிஸ்து நம்மை பூமியில் நற்செய்தி பணிக்கு அழைக்கிறார். அவர் நம்மிடம் ஒப்படைத்த வேலையைச் செய்ய நம் அனைவருக்கும் வெவ்வேறு திறன்களை, கொடைகளை அவர் அளித்துள்ளார். அவற்றில் சிலவற்றையேனும் பயன்படுத்தினால் நமத பணி சிறக்கும். அவர் நம் ஒவ்வொருவருக்குமே வாழ்வு என்கிற மிகப்பெரிய கொடையை அளித்துள்ளார். ஆகவே, முதல் வாசகத்தில் கண்ட யோசேப்புவைப்போல், நாம் கொடையாகப் பெற்ற இந்த வாழ்வை, கடவுளின் அழைப்புக்கேற்ற வாழ்வாக வாழ வேண்டும். வஞ்சம் தீர்த்துக் கொள்ள முற்படுவோர் வஞ்சிக்கப்படுவர்.
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (குறள் 314)
நமக்குத் தீங்கு செய்தாரைத் தண்டிக்கும் முறையாவது, தீமை செய்தவர் வெட்கப்படும் அளவுக்கு அவருக்கு நன்மையைச் செய்வதுடன் அவர் செய்த தீமையயும் மறந்து வாழ்வது சிறப்பாகும். எனவேதான் இயேசு, ‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்’ (லூக்கா 6:37) என்கிறார்.
இறைவேண்டல்.
‘பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்’ என்றுரைத்த ஆண்டவரே, பிறர் குற்றத்தை மன்னித்து ஏற்கும் மனப்பக்குவத்தை எனக்கு அளிப்பீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
