வெளிவேடம் அற்றதே சீடத்துவம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 9 ஆம் வாரம் – சனி
2 திமொ 4: 1-8
மாற்கு 12: 38-44
வெளிவேடம் அற்றதே சீடத்துவம்!
முதல் வாசகம்
இவ்வாசகப் பகுதியில், புனித பவுல், இறைவனுக்கும் கிறிஸ்து இயேசுவுக்கும் முன்பாக திமொத்தேயுவை உறுதியாக அறிவுறுத்துகிறார். அவர், “இறைவார்த்தையை அறிவிக்கவும், ஏற்ற நேரத்திலும் ஏற்ற நேரமல்லாத போதிலும் தயாராய் இருக்கவும், பொறுமையுடனும் போதனையுடனும் மக்களைத் திருத்தி, கண்டித்து, ஊக்கப்படுத்தவும் வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
மக்கள் உண்மையான போதனையை ஏற்காமல், தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ற போதகர்களைத் தேடிக்கொண்டு, உண்மையிலிருந்து விலகும் காலம் வரும் என்றும் அவர் எச்சரிக்கிறார். எனவே திமொத்தேயு விழிப்புடன் இருந்து, துன்பங்களைத் தாங்கி, நற்செய்திப் பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்.
பின்னர் பவுல் தனது வாழ்க்கையைப் பற்றி சாட்சியமளிக்கிறார்: “நான் நல்ல போராட்டத்தைப் போராடி முடித்தேன்; ஓட்டத்தை நிறைவு செய்தேன்; நம்ப்பிக்கையை காத்துக் கொண்டேன்” என்று கூறுகிறார். இதனால் நீதியின் வெற்றிமாலை அவருக்காகக் காத்திருக்கிறது; அது அவருக்கே மட்டும் அல்ல, ஆண்டவரின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் அனைவருக்கும் வழங்கப்படும் என உறுதியளிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியில், இயேசு, மறைநூல் அறிஞர்களின் வெளிவேடத்தையும் தற்பெருமையையும் குறித்து மக்களை எச்சரிக்கிறார். அவர்கள் நீண்ட ஆடைகளை அணிந்து மக்கள் மத்தியில் மதிப்பும் புகழும் பெற விரும்புகின்றனர். ஆனால், ஆண் துணையற்ற கைம்பெண்களின் சொத்துக்களைச் சுரண்டிக்கொண்டு நீண்ட இறைவேண்டல்களைச் செய்வதால், அவர்கள் கடுமையான தீர்ப்புக்கு உள்ளாவார்கள் என்று இயேசு கூறுகிறார்.
அதன் பின், காணிக்கைப் பெட்டியின் அருகில் அமர்ந்திருந்த இயேசு, மக்கள் காணிக்கை செலுத்துவதை கவனிக்கிறார். பல செல்வந்தர்கள் அதிகமாக காணிக்கை செலுத்தினர். ஆனால், ஒரு ஏழை கைம்பெண் இரு சிறிய நாணயங்களை மட்டுமே செலுத்தினாள். அதைக் கண்ட இயேசு, “இந்த ஏழை கைம்பெண் மற்ற அனைவரையும் விட அதிகமாகக் கொடுத்தாள்; ஏனெனில் அவர்கள் தங்களுடைய மிகுதியிலிருந்து கொடுத்தார்கள், ஆனால் இவள் தன் வறுமையிலிருந்து தன்னிடம் இருந்த அனைத்தையும், தன் வாழ்வாதாரத்தையே கொடுத்தாள்” என்று போற்றுகிறார்.
சிந்தனைக்கு.
இறைவன் காணிக்கையின் அளவை அல்ல, அதற்குப் பின்னுள்ள மனநிலையையும் தியாக உணர்வையும் பார்க்கிறார். உண்மையான பக்தி வெளிப்புற பெருமையில் அல்ல, முழு நம்பிக்கையுடனும் தாராள மனதுடனும் இறைவனுக்குக் கொடுப்பதிலேயே உள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இறை நம்பிக்கை என்பது வெளிப்புற ஆடம்பரத்தில் வெளிப்படுவதல்ல.
நமது அன்றாட நம்பிக்கை வாழ்வில் நாம் எவ்வளவு தாராள குணம் கொண்டவர்? இது ஒரு சவாலான கேள்வி, ஆயினும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. நமது தாராள குணம், கடவுளின் எல்லையற்ற தாராள குணத்தைப் பிரதிபலிக்கிறதா? சுயநலம் மற்றும் பேராசையுடன் போராடி, வறுமை, பற்றின்மை, மற்றும் அன்பு ஆகியவற்றுக்கான நற்செய்தியின் அழைப்பின்படி வாழத் தவறியுள்ளோமா? இன்று இத்தகைய தாராள குணம் பற்றி சிந்திக்க அழைக்கிறார் ஆண்டவர். அவர் வெகு தூதர்தில் இல்லை. நமது செயல்கள் ஒவ்வொருன்றையும் கண்காணிப்பவராக அருகில் அமர்ந்துள்ளார்.
மறைநூல் அறிஞர்கள் தங்களைப் பற்றி உயர்வாக எண்ணியிருக்கலாம், மேலும் வெளித்தோற்றத்தில் ஒருவரையொருவர் மெச்ச முயன்றனர். அவர்கள் நோன்பிருந்தனர், தாங்கள் புரிந்துகொண்டபடி சட்டத்தை மிகக் கவனமாகப் பின்பற்றினர், பொது இடங்களில் நீண்ட இறைவேண்டல்களில் ஈடுபட்டனர். மேலும் தங்களை உயர்வாக மதிக்கும் ஒரு சமயக் கலாச்சாரத்தை வளர்த்தெடுத்தனர். ஆயினும், இயேசு அவர்களைக் கடுமையாகக் கண்டித்தது அன்பின் காரணமாகவே இருந்தது. நமது சிடத்துவ வாழ்வில் அன்பிற்கே முதலிடம்.
இயேசு, ஆலயக் காணிக்கை பெட்டியில் இரு சிறு நாணயங்களைப் போட்ட ஒரு ஏழை கைம்பெண்ண சுட்டிக்காட்டினார். அவர் இல்லாதவள், இருப்பதில் கொடுத்தாள். அதுவே சிறந்த பகிர்வு.
இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், திமொத்தேயுவிடம் மிக முக்கியமான ஒரு அறிவுரையை வழங்குகிறார்: "இறைவார்த்தையைப் பறைசாற்று; காலம் ஏற்றதாயிருந்தாலும் இல்லாவிட்டாலும் அதில் உறுதியாய் இரு" (2 திமொ 4:2). தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் பவுல், தாம் நல்ல போராட்டத்தைப் போராடி, ஓட்டத்தை முடித்து, நம்பிக்கையைக் காத்ததாக சாட்சியமளிக்கிறார். அவருடைய வாழ்வு முழுவதும் இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
கூர்ந்து கவனித்தால், இரு வாசகங்களும் ஒரே செய்தியை நமக்குக் கூறுகின்றன:
இறைவன் நமது வெளிப்புற தோற்றத்தையோ, புகழையோ பார்ப்பதில்லை; நமது இதயத்தின் உண்மையையும் அர்ப்பணிப்பையும் பார்க்கிறார் என்தாகும். பவுல் தமது வாழ்க்கையை முழுமையாக இறைவனுக்காக அர்ப்பணித்தார். கைம்பெண் தன்னிடம் இருந்த அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்தாள். இருவரும் தங்கள் வாழ்க்கையால், "அனைத்தும் இறைவனுக்கே என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
இன்றைய உலகம் வெற்றி, செல்வம், புகழ் ஆகியவற்றையே மேன்மையாகக்கருதுகிறு. ஆனால் இயேசு நமக்கு நினைவூட்டுவது என்னவெனில், இறைவனின் பார்வையில் பெரியவர் அவர் அல்ல; தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்படைப்பவரே பெரியவர்’ என்பதாகும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, இறைவார்த்தையைத் துணிவுடன் அறிவித்து, நம்பிக்கையில் நிலைத்திருந்து, வாழ்க்கைப் போராட்டத்தை உண்மையுடன் நிறைவு செய்ய எனக்குத் துணைபுரிவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452