உணவு வங்கி | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
சென்னையைச் சார்ந்த 23 வயது நிரம்பிய சினேகா மோகன்தாஸ் என்பவர் சமூக அக்கறையும், பின்தங்கி உள்ளவர்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் உதவிட வேண்டும் என்ற இயல்பான ஆர்வமும் கொண்டவர். இந்த இளம்பெண் உணவு வங்கி தொடங்கி பல நூறு பேரின் வயிற்றுப்பசியை ஆற்றி வருகிறார்.
சென்னையிலும் பல இடங்களிலும் மூன்றுவேளை உணவுக்கு வழியின்றி இன்றும் பலர் துன்பப்பட்டுவரும் நிலையை மாற்றுவதற்கு இந்த இளம்பெண் சிந்தித்ததற்குப் பலன்தான் 'உணவு வங்கி'. இந்த வங்கிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், தங்களது வீடுகளில் இருப்போருக்குச் சமையல் செய்கையில் கொஞ்சம் கூடுதலாகச் சமைத்துவிட வேண்டும். பின்னர் சினேகாவை முகநூல் அல்லது வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு விபரங்கள் தெரிவித்தால் போதும்
உணவு வங்கியின் ஆர்வலர்கள் நேரில் சென்று உணவைப் பாக்கெட் செய்து எடுத்துக்கொண்டு, சாலைகளில் உணவின்றி வாடுவோர்க்கு வழங்கி, அவர்களின் பசியைப் போக்குகின்றார்கள்.
தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 55 உணவுப் பொட்டலங்களை வழங்கிய இவர்கள் தற்போது சென்னை முழுக்க நாள் ஒன்றுக்கு 1,200 உணவுப் பொட்டலங்களை வழங்கி வருகிறார்கள். சில ஆண்டுகளில் சாலைகளில் வாழ்வோர் யாரும் மூன்று வேளை உணவின்றி வாடும் நிலை இல்லாமல், உணவுண்டு, வயிறு நிறைந்து, பட்டினியை வென்ற மனிதர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதே சினேகாவின் கனவாக இருக்கின்றது.
சினேகாவைப் போன்று ஒவ்வொருவருக்கும் இந்தக் கனவு இருந்தால் நாட்டில் பசியால் ஒருவருமே மடியமாட்டார்கள்.
எழுத்து
ஜெ.ஞானசேகரன்