சேவையில் மகிழ்ச்சி | அருட்பணி. ஜெ.ஞானசேகரன் | Veritas Tamil
இரக்கம் நிறைந்த மனிதர்களால்தான் இவ்வையகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஆலங்குடி கணேசன், இவரை 515 கணேசன் என்றுதான் பலரும் அழைப்பார்கள். சொல்லற்கரிய வகையில் இச்சமூகத்திற்கு என்ன சேவை புரிந்தார் என்று கேட்கத் தோன்றலாம். இவர் கடந்த 44 ஆண்டுகளில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான ஆதரவற்ற இறந்த உடல்களை அடக்கம் செய்திருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் அதிகமாக கருவுற்றிருந்த பெண்களுக்கு உதவி செய்துள்ளார். இதுதான் இவரது தொழிலா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. 62 வயதான ஆலங்குடி கணேசன் ஓடு வேயப்பட்ட சிறிய வாடகை வீட்டில்தான் வசித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு ஐந்து மகள்கள். நான்கு பேருக்குத் திருமணமாகி விட்டது. ஒரு மகள் இன்னும் படித்துக்கொண்டிருக்கிறார்.
பழைய இரும்புக் கம்பிகள், பொருள்களை வாங்கி விற்று வியாபாரம் செய்து வந்தவர் இவர். 42 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்துபோன தமது கணவரின் உடலை எடுத்துச் செல்ல வழியில்லாமல் ஒரு பெண் ஆலங்குடி அரசு மருத்துவமனை முன்பாக அழுதுகொண்டிருந்தார். அக்காலத்தில், இரண்டே இரண்டு வாடகை கார்கள்தான் இருந்தன. யாரும் பிணத்தைக் காரில் ஏற்றிச் செல்ல மாட்டார்கள். ஏனென்றால், இறந்த உடலை ஏற்றிய வாகனத்தில் வேறு யாரும் ஏற மாட்டார்கள். ஆம்புலன்சும் அந்தக் காலத்தில் இல்லை.
"கை வண்டியில் அந்தப் பெண் இறந்த தமது கணவரின் உடலை இழுத்துச் சென்றதைப் பார்த்தேன். அந்தப் பொழுதே,இரும்பு வியாபாரத்துக்காக என்னிடம் வைத்திருந்த பதினேழாயிரம் ரூபாயை வைத்து ஒரு பழைய கார் வாங்கினேன். அப்போது தொலைபேசி வசதிகள் எல்லாம் கிடையாது. மருத்துவமனையிலிருந்தோ, காவல் துறையினரிடமிருந்தோ தகவல் வந்தால், கடையைப் போட்டுவிட்டு, அந்த இடத்திற்குச் சென்று இறந்தவரின் உடலை வாங்கி பொறுப்பாளரிடம் ஒப்படைத்து விடுவேன். பெரிதாகக் காசு வாங்குவது இல்லை. ஏதாவது தந்தால் வாங்கிக்கொள்வேன். ஆதரவற்ற உடல்களுக்கு நானே உறவாகி, அந்த உடலை எரித்து அவர்களுக்குரிய இறுதிச் சடங்கை நிறைவேற்றுவேன். முதல் முதலாக நான் வாங்கிய காரின் எண்ணான 515 என் புனைப்பெயராக மாறிவிட்டது. 'நீ உன் மனசுக்குப் பிடிச்சதச் செஞ்சிட்டு இருய்யா' என்று மனைவி என்னை உற்சாகப்படுத்துவார்" என்று உணர்வுபூர்வமாகக் கூறுகிறார் 515 ஆலங்குடி கணேசன்.
எழுத்து
அருட்பணி. ஜெ.ஞானசேகரன்.