திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் ஏழாம் நாள் நிகழ்வுகள் ! | Veritas Tamil
ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை அன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் லுவாண்டாவின் கிலாம்பாவில் திருப்பலி நிறைவேற்றியபின், லுவாண்டாவின் பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் முக்சிமாவுக்கு சென்றார். “மாமா முக்சிமா” திருத்தலத்தில் செபமாலை செபித்துவிட்டு, முக்சிமாவிலிருந்து லுவாண்டாவிற்குச் செல்கிறார். லுவாண்டா விமான நிலையத்தில் வரவேற்புப்பெற்று தனது இன்றைய நாளுக்கான பயணத்தை நிறைவு செய்கிறார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் ஏழாம் நாளை இன்று ஏப்ரல் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தொடங்கினார் .
காலை 10 மணிக்கு கிலாம்பாவில் திருப்பலி நிறைவேற்றுகிறார். கிலாம்பா (Kilamba or Nova Cidade de Kilamba) என்பது அங்கோலாவின் தலைநகரமான லுவாண்டா அருகே அமைந்துள்ள ஒரு திட்டமிட்ட நவீன நகரமாகும். 27 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, மக்களுக்கு வீடுகளை வழங்க உருவாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான "புதிய நகரம்" ஆகும். இது சீன நிறுவனங்களால் 3.5 5 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், பள்ளிகள், சாலைகள் ஆகியவற்றுடன் ஒரு முழுமையான நகரமாக வடிவமைக்கப்பட்டது.
இங்கு நகர வளர்ச்சியுடன் குடும்பங்கள் அதிகமாக குடியேறியதால் புதிய தலைமுறை நகரம் எனவும், இளைஞர்கள் அதிகமாக இருப்பதால் திருஅவையின் எதிர்காலம் எனவும், வெறுமையிலிருந்து வளர்ந்த நகரம் என்பதால் நம்பிக்கையின் சின்னம் எனவும் அழைக்கப்படுகிறது. இதனால்இ கிலாம்பா “புதிய வாழ்க்கை – புதிய நம்பிக்கை – புதிய சமுதாயம்” என்பதைக் காட்டும் இடமாக பார்க்கப்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட அந்த நாட்டில், கிலாம்பா நகரம் "மறுவாழ்வு மற்றும் அமைதியின்" அடையாளமாகத் திகழ்கிறது. "நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் அமைதி" என்ற செய்தியை உலகிற்குச் சொல்ல திருத்தந்தை இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என கருதுகிறார்கள்.
கிலம்பாவில் திருப்பலி நிறைவேற்றியபின், பிற்பகல் மணி 3.45 க்கு லுவாண்டா பிப்ரவரி 4 சர்வதேச விமான நிலையத்திலிருந்து கெலிகாப்டரில் முக்சிமாவுக்குச் செல்கிறார்.
மாமா முக்சிமா (Mama Muxima) என்பது அங்கோலாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கத்தோலிக்க திருத்தலமாகும். இது ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய கத்தோலிக்க புனிதத் திருத்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அங்கோலா கத்தோலிக்கர்களுக்கு, மாமா முக்சிமா என்பது வெறும் ஆலயம் மட்டுமல்ல; அது அவர்களின் ஆன்மா மற்றும் கலாச்சாரத்தின் மையப்புள்ளி.
'முக்சிமா' லுவாண்டாவிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் குவான்சா (Kwanza) நதிக்கரையில் அமைந்துள்ளது. அங்கோலாவின் கிம்புண்டு (Kimbundu) மொழியில் "இருதயம்" (Heart) என்று பொருள்படும். எனவே, மாமா முக்சிமா என்றால் "இதயத்தின் அன்னை" அல்லது “எங்கள் இதய அன்னை” (Our Lady of the Heart) என பொருள்படும்.
1589-ஆம் ஆண்டு போர்ச்சுகீசியர்களால் முக்சிமா கிராமத்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. 1599-ஆம் ஆண்டில் அன்னை மரியாளின் பெயரில் ஒரு சிறிய தேவாலயம் அங்கு நிறுவப்பட்டது. அடிமைத்தனத்தின் காலத்தில், அங்கோலாவிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டபோது, அவர்கள் இந்த அன்னையிடம் தங்களை அர்ப்பணித்துச் சென்றனர். இதனால், இது அங்கோலா மக்களின் சுதந்திரம் மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக மாறியது.
1930-களில் இது அங்கோலாவின் 'தேசிய திருத்தலமாக' (National Shrine) இது அறிவிக்கப்பட்டது. மாமா முக்சிமா பல அற்புதங்களுக்குப் பெயர் பெற்றது. கண்பார்வை அற்றவர்கள் பார்வை பெறுவது, தீராத நோய்கள் குணமாவது போன்ற பல அற்புதங்கள் இங்கு நடப்பதாக நம்பப்படுகிறது. நீண்ட காலம் குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கு வந்து அன்னையிடம் வேண்டினால், அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதாகப் பல சான்றுகள் உள்ளன. போர்க் காலங்களில் மக்கள் இந்தத் தலத்தை ஒரு புகலிடமாகவும், தங்களைக் காக்கும் இடமாகவும் கருதுகின்றனர். இதனால், மக்கள் “அம்மா எங்களை காத்துக் கொள்கிறார்” என்ற ஆழமான நம்பிக்கையுடன் வருகிறார்கள்.
மாமா முக்சிமா திருத்தலத்தில் செபமாலை செபித்து, ஆப்ரிக்கா மக்களுக்காக உருக்கமாக மன்றாடியபின், மாலை மணி 5:45 க்கு முக்சிமாவிலிருந்து மீண்டும் லுவாண்டாவிற்கு கெலிகாப்டரில் புறப்படுகிறார்.
மாலை மணி 6:15 க்கு லுவாண்டா விமான நிலையம் வந்துசேர்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு கொடுக்கப்படுகிறது.