புனித அன்னாள் பேராலயத் திருவிழாவுக்கு பாரம்பரிய அங்கீகாரம் | Veritas Tamil

மலேசியாவின் புக்கிட் மெர்தாஜாமில் உள்ள புனித அன்னாள் பேராலயத் திருவிழாவுக்கு மாநில பாரம்பரிய அங்கீகாரம்.

மலேசியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள புக்கிட் மெர்தாஜாமிலுள்ள புனித அன்னாள் சிறுபேராலயத்தில் (Minor Basilica of St Anne) ஆண்டுதோறும் நடைபெறும் புனித அன்னாள் திருவிழா, பெனாங் மாநில பாரம்பரியச் சட்டம் 2011 (Penang State Heritage Enactment 2011) கீழ் அதிகாரப்பூர்வமாக பெனாங் மாநில பாரம்பரியச் சொத்தாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, மே 9 ஆம் தேதி குபாங் செமாங் பகுதியில் உள்ள கம்புங் மெங்குவாங் தித்தியில், பெனாங் மாநில பாரம்பரிய ஆணையர் அலுவலகம் ஏற்பாடு செய்த மாநில பாரம்பரிய அறிவிப்பு விழாவில் வெளியிடப்பட்டது.

இந்த விழாவிற்கு பெனாங் மாநில முதலமைச்சர் சௌ கோன் யியோ (Chow Kon Yeow) தலைமை தாங்கினார்.

இந்த அங்கீகாரத்தின் மூலம், புனித அன்னாள் திருவிழா பெனாங் மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு பாரம்பரிய மரபுகளில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. மேலும், மாநிலத்தின் சமய மற்றும் பண்பாட்டு வாழ்வில் இந்த திருவிழா வகித்துவரும் முக்கிய பங்கும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் புக்கிட் மெர்தாஜாமிலுள்ள புனித அன்னாள் சிறுபேராலயத்தில் நடைபெறும் இந்த திருவிழா, மலேசியாவின் மிகப்பெரிய கத்தோலிக்கக் கூடுகையாகவும், தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய கிறிஸ்தவத் திருப்பயணங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும் பார்வையாளர்களும் ஒன்பது நாள் திருப்பலி (Novena) மற்றும் திருவிழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க புக்கிட் மெர்தாஜாமிற்கு வருகை தருகின்றனர். மலேசியா மட்டுமல்லாமல், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் பிற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் திரளாக வருகை புரிகின்றனர்.

இந்தக் கொண்டாட்டத்தில் பல மொழிகளில் திருப்பலிகள், மெழுகுவர்த்தி ஊர்வலங்கள், செபமாலை செபங்கள் மற்றும் கன்னி மரியாவின் தாயாரான புனித அன்னாளை மையமாகக் கொண்ட பல்வேறு பக்தி முயற்சிகள் இடம்பெறுகின்றன.

பெனாங் மாநில பாரம்பரியச் சட்டம் 2011-இன் கீழ், பாரம்பரிய அங்கீகாரம் என்பது கட்டிடங்கள் மற்றும் வரலாற்றுத் தளங்களுக்கு மட்டுமல்லாமல், மாநிலத்தின் அடையாளத்திற்கும் வரலாற்று வளர்ச்சிக்கும் முக்கியமான பண்பாட்டு வெளிப்பாடுகள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கும் வழங்கப்படலாம்.

இந்த அங்கீகாரம் குறித்து ரேடியோ வெரித்தாஸ் ஆசியாவிடம் பேசிய அருள்பணியாளர் உதவியாளர் (Deacon) லாசரஸ் அந்தோணி, பெனாங் மாநில அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

“இந்தத் திருவிழா வெறும் ஆண்டு தோறும் நடைபெறும் சமய நிகழ்வு மட்டுமல்ல. இது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் உயிரோட்டமிக்க ஒரு மரபாகும். இது இறைபக்தியை ஊக்குவிக்கிறது, ஒற்றுமையை வளர்க்கிறது மற்றும் பெனாங் மாநிலத்தின் பண்பாட்டு அடையாளத்தை வளப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

புனித அன்னாள் ஆலயத்தின் வரலாறு 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. பாட்டு காவான் (Batu Kawan) பகுதியில் ஏற்பட்ட தொற்றுநோய்களிலிருந்து தப்பிய சீன மற்றும் இந்திய கத்தோலிக்க குடியேறிகள் புக்கிட் மெர்தாஜாமில் குடியேறியதாக நம்பப்படுகிறது. அவர்கள் புனித அன்னாள் மலை அடிவாரத்தில் ஒன்றுகூடி செபிக்கத் தொடங்கினர்.

முதலில் மலையின் உச்சியில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1865-ஆம் ஆண்டு பெரிய இரண்டாவது ஆலயம் அமைக்கப்பட்டது. 1888-ஆம் ஆண்டு அருட்தந்தை எப். பி. சோரின் (Fr. F. P. Sorin) ஒரு பெரிய ஆலயத்தை கட்டினார். அது இன்று “பழைய ஆலயம்” (Old Church) அல்லது “ஒற்றுமையின் திருத்தலம்” (Shrine of Harmony) என அழைக்கப்படுகிறது.

தற்போதைய பேராலயக் கட்டிடம் 2002-ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஆண்டுதோறும் திருவிழாவிற்கு வருகை தரும் பெரும் திரளான பக்தர்களை கருத்தில் கொண்டு இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ், இந்த ஆலயத்திற்கு “சிறுபேராலயம்” (Minor Basilica) என்ற உயரிய பட்டத்தை வழங்கினார். இதன் மூலம், இந்தப் பட்டத்தைப் பெற்ற மலேசியாவின் முதல் ஆலயமாக புனித அன்னாள் ஆலயம் வரலாற்றில் இடம்பிடித்தது.