வழிபாடு | சிந்தை குளிர... அகம் மகிழ | அருட்பணி. மரிய லூயிஸ் ச. ச. | Veritas Tamil

வழிபாடு 
நாம் வழிபடும் 
கடவுளின் சாயலில் நம்மை உருமாற்றி, அன்றாடச் செயல்களில் அவரைப் பிரதிபலிப்பதாகும்!

இதயம் நிறைந்த நன்றியோடும் உளம் கனிந்த அன்போடும் நேர்மையான நெஞ்சத்தோடும் மகிழ்ச்சிநிறை ஆன்மாவோடும் தாழ்ச்சியான மனநிலையோடும் அமைவதன்றோ உண்மையான வழிபாடு!

வார்த்தையால் வழிபடுவதைவிட வாழ்வால் வழிபடுவதே வஞ்சகமில்லா வழிபாடு.
உதடுகளால் வழிபடுவதைவிட உண்மையோடும் உரிமையோடும் வழிபடுவதே 
உள்ளார்ந்த வழிபாடு!

வாழ்க்கை வண்ணமயமாய் வனப்புடன் இருப்பதால் மட்டும் வருவதல்ல வழிபாடு; 
இறைவன் நல்லவராய் இருப்பதால் நன்றியோடு நவில்வதே 
நல் வழிபாடு! 

உதட்டளவில் பிதற்றுவதல்ல வழிபாடு; 
உலகை அவர் கண் கொண்டு காண்பதும் அவரோடுள்ள உறவில் உண்மையோடு இருப்பதும் உள்ளும் புறமும் முரணின்றி இயங்குவதுமன்றோ இயல்பான வழிபாடு!

கரங்களை உயர்த்துவதில் இல்லை வழிபாடு; கண்களை உயர்த்திக் கண்ணியமாய் உங்களைத் தாழ்த்துவதில்தான் உள்ளது கருத்துள்ள வழிபாடு!

வாடிக்கையாய் வழிபாட்டை வேடிக்கையாய் மாற்றிவிடாதீர்; வாழ்வை மாற்றும்  வல்லமையுள்ள தாய் வழிபாட்டை மாற்றிடுவீர்! 

வாழ்க வளமுடன் நலமுடன் 🔥🔥🔥