நீதி நம் வாழ்வில் வெள்ளமெனப் பொங்கி வரட்டும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

2 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 17ஆம் வாரம் –சனி
வேவியர் 25: 1, 8-17
மத்தேயு 14: 1-12
நீதி நம் வாழ்வில் வெள்ளமெனப் பொங்கி வரட்டும்!
முதல் வாசகம்.
லேவியர் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், யூபிலி ஆண்டு குறித்த விபரத்தை வழங்குகிறது. எது யூபிலி ஆண்டு என்பதும் அதை எப்படி கணக்கிடுவதும், அந்த ஆண்டில் நிறைவேற்ற வேண்டியவை யாவை என்பதும் முக்கிய படிப்பினைகளாகும்.
கடவுளின் கணக்குப்படி ஏழேழு ஆண்டுகளாக (7 x 7 ஆண்டுகள்) - கணக்கிட்டால் அவை நாற்பத்தொன்பது ஆண்டுகள் ஆகும். அடுத்து வருவது 50 ஆம் ஆண்டாக இருக்கும். இந்த 50-ஆம் ஆண்டுதான் ‘யூபிலி ஆண்டு’ என கடவுள் அறிவிக்கிறார். இந்த 50வது ஆண்டை இறைவாக்கினர் ஏசாயா, ‘ஆண்டவரின் அருள்தரும் ஆண்டு’ (எசா 61: 2) என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த யூபிலி ஆண்டில் மக்களின் தூய்மைக்கு முதலிடம் அளிக்கப்படும். எனவே. இந்த நாளில் இஸ்ரயேல் மக்கள் எல்லாரும் பாவக் கழுவாயை நிறைவேற்றி, யூபிலி ஆண்டில் நுழைய ஆண்டவர் அழைக்கின்றரர். மேலும், யூத மரபுகளில், யூபிலி ஆண்டு ஓய்வு ஆண்டாகவும் கருதப்பட வேண்டும்.எனவே,
1. இந்த ஆண்டில் நிலத்திற்கு ஓய்வு கொடுக்கப்பட வேண்டும்.
2. கடன்பட்டோருக்கு கடனிலிருந்து விடுதலையளிக்க வேண்டும்.
3. அடிமைகளுக்கு விடுதலை கொடுக்க வேண்டும்.
மேலும், இந்த ஆண்டில், பாவம் போக்கவும், பாவ தண்டனை நீக்கவும் சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியின் மையமாக திருமுழுக்கு யோவான் இடம் பெறுகிறார். ஏரோது, இயேசுவைப் பற்றி கேள்விப்படுகிறான். அவனுடைய பார்வையில், சமீபத்தில், அவன் திருமுழுக்கு யோவானின் தலையை வெட்டி கொன்றான் அல்லவா? அந்த திருமுழுக்கு யோவான்தான் இயேசுவாக உயிர்த்து வந்தள்ளார் என்று நம்பினான்.
ஆம், ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவுடன் வாழ்ந்து வந்தான். இந்த தகாத உறவை திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகக் கண்டித்தார். இதைப் பொறுக்காத ஏரோதியா திருமுழுக்கு யோவானைக் கொல்ல திட்டமிட்டு, சதி செய்தாள். தன் திட்டம் நிறைவேற தன் மகளைப் பகடைக்காயாகப் பயன்படுத்தினாள்.
அவள், தந்திரமாக, ஏரோதின் பிறந்த நாளில் தன் மகளை சபையில் நடனம் ஆடச் செய்து ஏரோதை மகிழ்வித்தாள். ஏரோதுவும் மதிமயங்கி, நடனமாடுபவள் எதைக் கேட்டாலும் நிறைவேற்றுவதாக சபையில் வக்குறுதி அளித்தான். முடிவாக, சூழ்ச்சி அரங்கேறியது. நடனம் ஆடிய பின், அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். தன் வாக்குறுதியை நிறைவேற்ற சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்;
யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தி திருமுழுக்கு யோவானின் மரண தண்டனை மற்றும் மரணத்தைப் பற்றியதாக உள்ளது. ஏரோது அரசனின் கட்டளையின் பேரில் அவர் தலையை துண்டித்து கொடூரமான முறையில் இறந்தார். எனவே, யோவானின் தலை ஒரு இளம் பெண்ணுக்கு அவளுடைய நடனத் திறமைக்கு வெகுமதியாக ஒரு தட்டில் வழங்கப்பட்டது. ஏரோது ஏன் இவ்வளவு அநியாயமான செயலைச் செய்தார்? ஏனென்றால், தான் செய்த அவசரமான சத்தியத்தைத் திரும்பப் பெற அவருக்கு தைரியம் இல்லை.
யூத சட்டப்படி அவரது முதல் மனைவியுடனான விவாகரத்து சட்டப்பூர்வமானது என்றாலும், விவாகரத்து வழங்கப்படுவதற்கு முன்பே அவருக்கு ஏரோதியாவுடன் வெளிப்படையான உறவு இருந்தது. மேலும் அவர்களின் திருமணம் யூத மக்களை புண்படுத்துகிறது, ஏனெனில் அவர்களுக்கு அது சட்டத்திற்கு எதிரானது மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் பிலிப் இன்னும் உயிருடன் இருக்கிறார். ஏரோது அரசன் விபச்சாரம் மற்றும் தகாத உறவுக்கு குற்றவாளி. விபச்சாரம் மற்றும் தகாத உறவு கண்டிப்பாக தடைசெய்யப்பட்டது (லேவி 18:16). எனவே, திருமுழுக்கு யோவான் ஓர் இறைவாக்கினராக ஏரோதுவின் செயலைக் கண்டித்தார்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா, கர்ணா வருவதை எதிர்கொள்ளடா என்ற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. நல்ல உள்ளம் கொண்டோர் ஒருபோது அச்சுறுத்தல்களுக்குப் பயந்து தீங்கு செய்யமாட்டார்கள். அவர்கள் கடவுள் பக்கம் இருந்து செயல்படுவர். எது வந்தாலும் அநீதிக்குத் தலைவணங்க மாட்டார்கள். அவர்கள் கடவுள் பக்கம் இருந்து நன்மை தீமைகளைப்பற்றி சிந்தித்து செயல்படுவர்.
முதல் வாசகத்தில், வேலை தவிர வாழ்க்கையின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த நாம் ஒரு இடைவெளி எடுக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். அதனால்தான் ஒவ்வொரு வாரமும் நமக்கு ஒரு நாள் ஓய்வு உண்டு. விடுமுறைகள் என்பது நாம் புத்துணர்ச்சியுடன் இருக்கக்கூடிய நேரங்களாகும். மேலும் நமது "ஓய்வு நேரத்தின்" ஒரு பகுதி, கடவுள் நம் வாழ்வில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பற்றி சிந்திப்பதில் செலவிடப்பட வேண்டும். ஏரோது போல அவசர புத்தி கொண்டவர்களாக நாம் வாழ்வோமானால், பல பாவச் செயல்களுக்கு ஆளாகுவோம். பொறுமையும் நிதானமும் இன்றியமையாதவை,
இந்த ஆண்டு நமக்கு யூபிலி ஆண்டாக திருஅவை அளித்துள்ளது. ஆண்டவர் அருள்தரும் ஆண்டாக இந்த ஆண்டு ஏற்கப்பட வேண்டும். இயேசு இதை நமக்கு நினைவூட்டுகிறார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை நினைவூட்டவும் இயேசு வந்தார் என்று அறிகிறோம் (லூக்கா 4:19) இந்த ஆண்டில் கடவுளின அருளைப்பெற மனமாற்றம் அவசிமாகும். ஒய்வெடுத்து, பிறரை மன்னித்து, கடவுளை நெருங்கி வர முயற்சிக்கும் எதிர்நோக்குக்கொண்ட திருப்பயணிகளாக நாம் அழைக்கப்படுகிறோம். தெளிந்த சிந்தனை செயல்பாடு நமது நல்வாழ்வுக்கு வித்திடும்.
மிக முக்கியமான விடயம் என்னவென்றால், நாம் கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும், நம்மை அதிகமாக உழைப்புக்குப் பயன்படுத்தக்கூடாது, உடலுக்கும போதிய ஓய்வு வேண்டும், சற்று ஓய்ந்திருக்க வேண்டும். உடல் கடவுள் வாழும் இல்லம் என்பதால், கடவுள் நம் உடலுக்குப புத்துணர்ச்சி அளிக்க நேரம் ஒதுக்குவதை உறுதி செய்ய வேண்டும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, உமது முன்னோடியான திருமுழுக்கு யோவான் சாட்சியம் பகர்வதில் எங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளார். அவர்போல நான் வாழ என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
