நல்லதை ஏற்போம், நல்லதை பகிர்வோம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

1 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 17ஆம் வாரம் –வெள்ளி
வேவியர் 23: 1, 4-11, 15-16, 27, 34b-38
மத்தேயு 13: 54-58
நல்லதை ஏற்போம், நல்லதை பகிர்வோம்!
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்களில் கருபொருள் நினைவுகூர்தலாக அமைகிறது. லேவியர் நூலின் முதல் வாசகத்தில், இஸ்ரயேலர்கள் ஆண்டு முழுவதும் முக்கிய பண்டிகைகளை நினைவில் வைத்துக் கொண்டாட வேண்டும் என்று கூறப்படுகிறது. இவற்றுள் பாஸ்கா பெருவிழா சிறப்பு இடத்தைப் பெறுகிறது. இதனால் அவர்களும் அவர்களது சந்ததியினரும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குச் சென்ற முழு 40 ஆண்டுகால பயணத்திலும் கடவுள் தங்களுக்குச் செய்ததை ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்பது அடிப்படைக் காரணமாக உள்ளது.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவை தச்சரின் மகனாகவும், நாசரேத்தில் வளர்ந்த ஒரு இளைஞனாகவும், அவரது உறவினர்கள் நன்கு அறியப்பட்டவர்களாகவும் மக்கள் நினைவில் வைத்திருப்பதில் ஒரு பிரச்சனையாக உள்ளது. இயேசு தனது பொது ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அவரை அறிந்தவர்களுக்கு, இயேசுவின் திருமுழுக்கும் வல்ல செயல்களும் (அற்புதங்களும்) சொந்த ஊர் மக்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. கடவுளின் அருள்வாக்கு விரட்டியடிக்கப்பட்டது.
சிந்தனைக்கு.
நினைவகூர்வதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நினைவுகூர்தலால் நல்லதும் நடக்கலாம் தீயதும் நடக்கலாம். கடவுள் நம் வாழ்வில் அருளியதை நாம் நினைவில் கொண்டால், அது நம்மை நன்றியுணர்விற்கு இட்டுச் செல்லும்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தனது சொந்த ஊருக்கு தச்சரின் மகனாக மட்டுமல்ல, இப்போது சீடர்களுடன் ஒரு இறைவாக்கினராகவும் திரும்புகிறார். ஒவ்வொரு வாரமும் ஓய்வு நாளன்று இயேசு தொழுகைக்கூடம் சென்று வழிபடுவதோடு, மறைநூலை வாசித்து மக்களுக்கு அவற்றைப் பற்றி விளக்கி வந்தார். அதே போல் இன்று வளர்ந்த ஊரன நாசரேத்துக்கு வருகிறார், தொழுகைகூடத்தில் எழுந்து, மறைநூல் வாசித்து த் தெளிவுப்படுத்துகிறார். அது ஞானம் நிறைந்த படிப்பினையாக உள்ளது.
ஆனால், மூன்று காரணங்களுக்காக நாசரேத்து மக்கள் கேட்க மறுக்கிறார்கள்: முதல் காரணம் அவர் ஒரு தொழிலாளி. அவர்களது ஊரில் தந்தைக்கு உதவியாக ஒரு தொழிலாளியாக இருந்தவரின் போதனை எடுபடவில்லை. இரண்டாவதாக, அவர் அவர்களுடைய அண்டை வீட்டாராக அவர்களுக்கு மிக நெருக்கமானவர் என்பதால்தான் இயேசு அங்கு ஒரு சாதாரண மனிதராகவே ஏற்கப்பட்டார். மூன்றாவது காரணம், அவருடைய குடும்பம். அது ஏழ்மையில் வறுமையில் உழன்ற குடும்பம். ஏழைச் சொல் அம்பலம் ஏறுமா? ஆம், அவர்கள் இயேசுவின் பின்னணியை நனைவுகூர்ந்ததன் காரணமாக அவர் புறக்கணிக்கப்பட்டார்.
முதல் வாசகத்தில் இஸ்ரயேலர்கள் ஆண்டு முழுவதும் முக்கிய விழாக்களை நினைவில் வைத்துக் கொண்டாட வேண்டும் என்று கடவுள் பணிக்கிறார். இந்த நினைவுகூர்தலால் அவர்களின் ஆன்மீகம் உறுதிபெறுகிறது, வாழ்வுக்குப் பலனளிக்கிறது. இதனிமித்தம் அன்றும் இன்றும் திருஅவை ஒவ்வொரு திருவழிபாட்டு ஆண்டு முழுவதும் பல விழாக்களை நினைவுகூர்ந்து கொண்டாட வழிவகுத்துள்ளது. இந்த நினைவுகூர்தலால் இறைமக்கள் இறைவனின் ஆசியைப்பெறுகிறார்கள்.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. (குறள் 108) என்கிறது திருக்குறள்.
ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல. அவற்றை நினைவுகூர்ந்து பாராட்ட வேண்டும். ஆனால், அவர் தீமைகள் செய்திருந்தால் அவற்றை நினைவுகூராமல் அக்கணமே மறந்து விடுவது நன்மை பயக்கும். இன்றைய நற்செய்தியில் நாசரேத்து ஊரார் இயேசுவில் கிடைக்கும் நன்மையை (மீட்புச் செய்தியை) அனுபவிக்கத் தவறிவிட்டனர். இதன விளைவு, “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்று கூறி அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை என்று மத்தேயு தெளிவுப்படுத்துகிறார். கடவுளின் ஆசீரை அவர்கள் இழ்ந்தனர்.
இதே மத்தேயு, ‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும் (25:29) என்று இயேசு வலியுறுத்தியதை நினைவூகூர்ந்து கூறுகிறார்.’ இயேசுவின் போதனைகளை ஏற்போருக்கும் கடைப்பிடிப்போருக்கும் மேலும் கொடுக்கப்படும் என்பது உறுதி. அவரில் நம்பிக்கை அற்றோருக்கு நாசரேத்து ஊர் மக்களைப் பொல் பின்னர் ஏக்கம் தான் மிஞ்சும்.
இறைவேண்டல்.
‘உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்’ என்று வாக்களித்த ஆண்டவரே. உம்மில் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை கொண்டு வாழ என்னை காத்தருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
