அழைப்புக்கேற்ற வாழ்வு சீடத்துவத்தின் முதன்மை பண்பு! | ஆர்கே. சாமி | Veritas

21 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 20ஆம் வாரம் – வியாழன்
நீதித்தலைவர்கள் 11: 29-39a
மத்தேயு 22: 1-14
அழப்புக்கேற்ற வாழ்வு சீடத்துவத்தின் முதன்மை பண்பு!
முதல் வாசகம்.
இன்றைய வாசகங்களின் மையமாக, ஒருவர் தனது வாக்குறுதிகளை (குறிப்பாக கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்) காப்பாற்றுவதன் முக்கியத்துவம் பெறுகிறது.
நீதித்தலைவர்கள் நூலிலிருந்து வரும் பகுதியில், இப்தா எனும் இராணுவ வீரர் இஸ்ரயேலரைப் போருக்கு அழைத்துச் செல்கிறார். அம்மோனியரையும், பல நகரங்களையும் முறியடிப்பதில் தோல்வி அடைகிறார். பிறகு, கடவுள் தனக்கும் தன் சக பழங்குடியினரின் வீரர்களுக்கும் எதிரிகளை முறியடிப்பதில் வெற்றயளித்தால், திரும்பும்போது, தான் சந்தித்த முதல் நபரைப் பலியாகக் கொடுப்பதாக அவர் கடவுளிடம் நேர்த்திச் செய்கிறார்.
அதன்படி, இப்தா வெற்றிபெற்று தனது வீட்டிற்குத் திரும்பும்போது, அவரது அன்புக்குரிய மகள் அவரை முன் வரவேற்கிறாள். இப்ததா கடவுளுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படி, தனது ஒரே மகளைப் பலியிட வேண்டியிருந்ததற்கு வருத்தப்பட்டாலும், அவர் கடவுளுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுகிறார். அவள் அவருடைய ஒரே மகள். அவருக்கு வேறு மகனோ மகளோ இல்லை. விபரம் அறிந்த மகளோ, தந்தையிடம் என்னைப் பற்றி கவலை வேண்டாம், உங்கள் வாக்கை நிறைவேற்றுங்கள் என்றாள்.
அதற்கு முன்பாக, “என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். இரண்டு மாதங்கள் என்னைத் தனியாக விடுங்கள். நான் மலைகளில் சுற்றித்திரிந்து, எனது கன்னிமை குறித்து என் தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்” என்று கூறி புறப்பட்டாள். திரும்பி வந்ததும், தந்தை கடவுளுடனான நேர்த்தியை நிறைவேற்றினார்
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு இறையரசுப் பற்றிய ஓர் உவமையைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் அதை தனது மகனுக்கு ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யும் ஒரு அரசருடன் ஒப்பிடுகிறார். முதலில் அழைக்கப்பட்டவர்கள் விருந்துக்கு வர மறுக்கிறார்கள், மேலும் அவர்கள் அரச தூதர்களை மோசமாக நடத்திக் கொன்றுவிடுகிறார்கள். விருந்துக்கு வர மறுப்பவர்களை ஆட்சியாளர் தண்டிக்கிறார். விருந்து தயாராகிவிட்டதால், மண்டபத்தை நிரப்ப அரசர் விரும்புகிறார், எனவே அவர் தனது ஊழியர்கள் அழைத்து வெளியில் அவர்கள் காணக்கூடிய அனைவரையும் ஒன்று திரட்டச் சொல்கிறார். வருபவர்கள் திருமண ஆடையை அணிய வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. அங்கே, ஒரு விருந்தினர் திருமண ஆடை இல்லாமல் காணப்படுகிறார் முதலில் அழைக்கப்பட்டவர்கள் வர மறுத்ததற்காக திருப்பி அனுப்பப்பட்டதைப் போலவே, இவரும் விருந்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.
சிந்தனைக்கு.
நமக்கான அனைத்து கொடைகளும், மீட்பும் கடவுளிடமிருந்து வருகின்றன. கடவுள் நம்மீது கொண்டிருக்கும் தயவு இதற்கு காரணமாகும். மனுக்குலத்தின் மீது அளவு கடந்தன்பு காட்டும் கடவுள் நமது ஒத்துழைப்பை நாடுகிறார். நாம் பெற்றுள்ள ஆசீர்வாதத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அப்போது நாமும் ஆண்டவராகிய இயேசுவின் விருந்தில் விருந்துண்ணத் தொடங்கலாம்.
நற்செய்தயில் வரும் உவமையில் தந்தையாகிய கடவுள் இஸ்ரயேலரை (யூதரை) தம்முடைய மகனாகிய இயேசுவுடன் விண்ணரசு விருந்தில் மகிழவும் அழைக்கிறார். ஆனால் அழைக்கப்பட்ட அவர்களில் பலர் அழைப்பை ஏற்க மறுத்ததோடு அவருடைய ஊழியர்களைப (இறைவாக்கினர்களை) பிடித்து, மோசமாக நடத்தி, கொன்றார்கள்.
இன்றும் பலர் உலக காரியங்களில் மிகவும் பரபரப்பாக இருக்கிறார்கள். இறுதியில் முக்கியமில்லாத பல விடயங்களில் அவர்கள் எளிதாக ஆக்கிரமிக்கப்படுகிறார்கள். பலர் எண்ணற்ற மணிநேரங்களை விவேகத் தொலைப்பேசியோடு செலவிடுகிறார்கள். மற்றவர்கள் பணம் மோகம் கொண்டு தங்கள் பெரும்பாலான நேரத்தை தங்கள் தொழிலில் செலவிடுகிறார்கள், இதன் விளைவாக, ஆன்மீக வாழ்வு சீரழிகிறது. கடவுள் வெகு தூரத்தில் வைக்கப்படுகிறார்.
மறுபக்கம், திருஅவை படிப்பினைகள் மற்றும் ஒழுக்கத்தின் மீதான வளர்ந்து வரும் எதிர்மறையான எண்ணங்களும் செயல்பாடுகளும் மக்களின் இறைநம்பிக்கை வாழ்வுக்கு ஊறு விளவிக்கின்றன.
இன்றைய இந்த உவமையில், அலட்சியமாகவும் விரோதமாகவும் இருந்தவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அரசர் "தன்னுடைய படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய நகரத்தை எரித்தார்" என்று இயேசு கூறுகிறார். ஆம், நமக்கும் இது பொருந்தும். முதல் வாசகத்தில் இப்தாவைப் போன்று கடவுளுக்கு அளிக்கும் நேர்த்திகளையும் அழைப்புக்கேற்ற வாழ்வு வாழ்வதிலும் நாம் உறுதியோடு இருக்க வேண்டும். நம்பிக்கை வாழ்வில் அலட்சிப்போக்கு கண்டிக்கத்தக்கது.
இறைவேண்டல்,
ஆண்டவராகிய இயேசுவே, சில சமயங்களில் எனது அழைப்புக்கான பணிகளில் நான் அக்கறையின்றி இருந்ததத்காக என்னை மன்னியும். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
