நீதிக்குக் குரல் கொடுக்கும் சீடத்துவம் நமதாகட்டும்! | ஆர்கே. சாம | Veritas Tamil

18 ஜூலை 2025
பொதுக்காலம் 15 ஆம் வாரம் – வெள்ளி
விடுதலை பயணம 11:10-12:14
மத்தேயு 12: 1-8
நீதிக்குக் குரல் கொடுக்கும் சீடத்துவம் நமதாகட்டும்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம் பஸ்கா பெருவிழாவைப் பற்றியதாக உள்ளது. ஆண்டவர் எகிப்தில் அனுபவித்த துன்பத்திலிருந்து விடுவிக்கப்ப்டும் நாளையும் அன்று இரவும் அவர்கள்என்ன செய்ய வேண்டும் என்பதையும் விவரிக்கிறார்.
அவர்கள் அந்த மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இதில், ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனையாக உள்ளது. அடுத்து, ரத்தத்தில் சிறிதளவு எடுத்து, அவர்களின் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும்.
இறைச்சியை, அந்த இரவிலேயே, நெருப்பில் வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை.
மேலும், அவர்கள் இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து உணவை விரைவாக உண்ண வேண்டும் என்ற கடவுள் கட்டளையிடுகிறார். அன்று இரவு, கடவுள் அவர்களின் வீட்டு கதவுகளில் உள்ள இரத்தத்தினால் அடையாளம் கண்டு, கடந்து செல்வார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசுவும் அவருடைய சீடர்களும் ஓய்வுநாளில் வயல்வெளியைக் கடந்து செல்கிறார்கள். கடந்து செல்கிற வேளையில், பசியின் காரணமாக சீடர்கள் வயலில் கண்ட கதிர்களைக் கொய்து உண்கிறார்கள். ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்தது ஓய்வுநாளுக்கான சட்டத்தை மீறியதாகக் குறை சொல்கிறார்கள் பரிசேயர்கள். பசியா அல்லது ஓய்வுநாளா? இவற்றில் எது முதன்மையானது என்பதைச் சுட்டிக்காட்டுகிற இயேசு, மானிட மகனாகிய தமக்கு ஓய்வுநாளும் கட்டுப்பட்டதே என்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய முதல் வாசகத்தைக் கூர்ந்து வாசித்தால், கடவுள் எகிப்து நாட்டில் உள்ள தலைப்பேறுகளை அழிக்கிறார். இஸ்ரயேல் மக்கள் பாதுகாப்பாக எகிப்தைவிட்டு வெளியேற தேவைப்படும் தயாரிப்புகளைக் கடவுளே முன்மொழிந்து நிறைவேற்றுகிறார். நிறைவாக, இஸ்ரயேலர் தலைமுறை தலைமுறையாக நினைவுகூர்ந்து கொண்டாடப்பட வேண்டிய பாஸ்கா பெருவிழாவை ஏற்படுத்துகிறார். இது இயேசுவின் பிறப்பு நிகழ்வுகளுக்கும் உயிப்புக்கும்முன்னடையளமாக உள்ளதை மறுப்பதற்கில்லை.
நற்செய்தியில். தாவீதும் அவருடைய தோழர்களும் குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அர்ப்பண அப்பங்களை உண்டதை (1 சாமு 21: 4-6) மேற்கோள்காட்டியதோடு, ஓய்வுநாளிலும் குருக்கள் கோயிலில் பணியாற்றுகிறார்களே அதுவும் குற்றம்தானா? என்றும் சீடர்கள் செய்தது தவறாகாது என்று இயேசு வாதிடுகிறார். இங்கே மனிதநேயத்தைவிட திருசட்டத்தை உயர்வாக பரிசேயர் கருதியதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல, நீங்களும் இரக்கமுள்ளவராய் இருங்கள் (லூக் 6: 36) என்பதே இயேசுவின் அறிவுறுத்தல். பட்டினி கிடந்தாலும் திருச்சட்டதைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பரிசேயின் உறுதிபாடு. பரிசேயர்களிடம் இருந்த பிரச்சனை என்னவென்றால், அவர்கள் சட்டத்தின் எழுத்துக்களில் மிகவும் உறுதியாக இருந்ததால், மனிதநேயத்தைப் பற்றி அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் மிகவும் சட்டபூர்வமானவர்களாகவும், சம்பிரதாயங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் மக்களுக்குக் காட்டிக்கொண்டனர்.
சில சமயங்களில், பரிசேயர்களைப்போல் இத்தகைய மனப்பான்மையிலிருந்து நாமும் விடுபடுவதில்லை. பழமை விரும்பிகளாக மனிதநேயத்தை மதிப்பதில்லை. நாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றிருப்போம். இயேசு சட்டத்தின் எழுத்துக்கு அப்பால் மனிதரைப் பார்க்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, "நான் இரக்கத்தையே விரும்புகிறேன், பலியை அல்ல" என்றுரைக்கிறார்.
இயேசு தன் சீடர்கள் குற்றமற்றவர்கள் என்று அவர்கள் சார்பாகக் குரல்கொடுத்தார். அவர் வழியில் உண்மைக்குக் குரல் கொடுப்பதுதான் தலைசிறந்த சீடத்துவம் என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்
ஆண்டவரே, உமது சீடராக, என்றும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் மனதிராக நான் வாழ என்னை திடப்படுத்துவீராக ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
