உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! | ஆர்கே. சாமி | Veritas Tamil

6 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 22ஆம் வாரம் – சனி
 
கொலோசையர் 1: 21-23
லூக்கா   6: 1-5


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

முதல் வாசகம்.

கடவுளின் மீட்புத்  திட்டத்தில் இயேசுவின் பங்கைப் பற்றி நாம் தொடர்ந்து சிந்திக்க அழைக்கப்படுகிறோம். இந்தப் பகுதி கொலோசையரிடையே ஏற்பட்ட ஓர் ஆழமான மாற்றத்தை வலியுறுத்துகிறது. திருத்தூதர் பவுல் மனமாறி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட கொலோசையருக்கு  அவர்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்றும், பாவ நிலையிலிருந்து உயர்த்தப்பட்டவர்கள் என்றும் அவர்களுக்கு நினைவூட்டுகிறார். 

தொடர்ந்து, இந்த மாற்றம் நிலையானது அல்ல; இது நம்பிக்கையின் விடாமுயற்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது - நற்செய்தியின் நம்பிக்கையில் உறுதியாகவும், நிலையானதாகவும், அசைக்க முடியாததாகவும் இருப்பது இன்றியமையாதது என்பதைத் தெளிவுப்படுத்துகிறார்.


இயேசுவின் மரணத்தின் மூலம்தான் கொலோசை நகர் கிறிஸ்தவச் சமூகத்தினர் தூயவர்களாகவும், மாசற்றவர்களாகவும், கடவுளின் உடனிருப்பில் வாழவும் முடிந்தது என்று எடுத்துரைக்கிறார்.  கடவுளின் மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தானும் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்  நற்செய்தியின் பணியாளர் என்றும் பவுல் குறிப்பிடுகிறார்.

நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு தம்முடைய சீடர்களின் செயல்களை இரக்கத்துடன் பாதுகாக்கிறார், ஓய்வுநாள் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதை விட மனிதநேயத்தை முதன்மைப்படுத்துகிறார். 

குருக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட புனித அப்பத்தை உண்ட தாவீது அரசரை நினைவுகூர்வதன்  மூலம்,  மனிதனின் இன்றியமையாத் தேவைக்காக  சடங்கு மற்றும் சட்ட விதிமுறைகளை  மீறுவதை இயேசு நியாயப்படுத்துகிறார். நிறைவாக, “ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்று தெளிவுப்படுத்துகிறார்.


சிந்தனைக்கு.
மனிதனை நல்வழிப்படுத்த சட்ட விதிமுறைகள் தேவை என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து கிடையாது. அவை தேவை என்றாலும், குருட்டுத்தனமான விதிகளைப் பின்பற்றுவதால் பலனில்லை. மீட்பராகிய இயேசு, ‘சிறைப்பட்டோர் விடுதலை அடையவும், பார்வையற்றோர் பார்வை பெறவும்’ உலகிற்கு வந்தார் (லூக்கா 4:18). ஆகையால் நமது நம்பிக்கைகளில் மூட நம்பிக்கைகள் கலக்கப்படக் கூடாது. நாம் செய்யும் ஒவ்வொரு சடங்குக்கும் செயலுக்கும் அர்த்தம் இருக்க வேண்டும். நேற்றைய நற்செய்தியில், ‘பழைய தோற்பைகளில் எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை’ என்று இயேசு அறிவுறுத்தினார். 

விதிகள் மற்றும் சடங்குகளின் நோக்கம், மற்றவர்கள் மீது கடவுளின் அன்பை வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நபர்களாக நம்மை உருவாக்க உதவுவதாகும். இது நிகழாதபோது, விதிகள் மற்றும் சடங்குகள் தேவையில்லை. எடுத்துக்காட்டாக, ஆலயம் கட்டுவதற்கு அள்ளிக்கொடுக்கும் நம்மில் பலர் ஏழை எளியவர்களுக்குக் கிள்ளியும் கொடுக்க மறுக்கிறார்கள். இது வழிபாட்டுக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லாத ஆன்மீகமாக உருவாகி வருகிறது. கிறிஸ்தர்கள் தன்னைப்பற்றியே எண்ணிக்கொண்டு, அடுத்திருப்பவரை புறந்தள்ளும் நோய்க்கு திருஅவை உட்படக்கூடாது.

முதல் வாசகத்தில், நற்செய்தியின் நம்பிக்கையில் உறுதியாகவும், நிலையாகவும்,  இருப்பது இன்றியமையாதது என்பதை கொலோசையருக்குப் பவுல் அடிகள் நினைவூட்டியதை வாசித்தோம். இன்றைய திருஅவை தன்னை வளப்படுத்திக்கொள்வதில் மட்டும் நேரத்தைச் செலவளித்தால், உலகிற்கு அது ஒளியாகவும் உப்பாகவும் நிலைத்திருக்க இயலாது. மனிதநேயத்தில் அக்கறைகொள்ளாத கிறிஸ்தவர்கள் நோயாளிகள் என்றால் மிகையாகாது. உப்புசப்பற்ற. மனிதநேயம் மறந்த கிறிஸ்தவம் இயேசுவுக்கு உரியதாகாது. 


இறைவேண்டல்.
இரக்கமிகு என் ஆண்டவரே, நீரே என் வாழ்க்கையின் வழிகாட்டி.  நான் மனிதநேயத்தில் உமது அன்பையும் அரவணைப்பையும்  வெளிப்படுத்தும் கருவியாகத் திகழ்ந்திட  அருள்புரிவீராக. ஆமென்.   

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452