கிறிஸ்துவின் வழியே வாழ்வுக்கான வழி.! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 12ஆம் வாரம் –  செவ்வாய்

2 அரசர் 19: 9-11, 14-21, 31-35, 36
மத்தேயு 7: 6, 12-14


கிறிஸ்துவின் வழியே வாழ்வுக்கான வழி.!
  
முதல் வாசகம்.

அசீரிய அரசன் சனகெரிப், யூதாவின் அரசன் எசேக்கியாவை அச்சுறுத்தி, எருசலேமை வெல்வேன் என்று பெருமையாகச் செய்தி அனுப்பினான். அந்தக் கடிதத்தைப் பெற்ற எசேக்கியா ஆண்டவரின் ஆலயத்திற்குச் சென்று அதை ஆண்டவர் முன் வைத்து மனமுருகி மன்றாடிறார்.  ஆண்டவரே உண்மையான கடவுள் என்றும், தம் மக்களைப் பாதுகாக்கும்படி வேண்டிக்கொண்டான்.
அப்போது இறைவாக்கினர் ஈசாயா மூலம் ஆண்டவர் பதிலளித்தார். எசேக்கியாவின் வேண்டலைக் கேட்டதாகவும், எருசலேம் அசீரியரின் கையில் ஒப்படைக்கப்படாது என்றும் அறிவித்தார். ஆண்டவர் தம் மக்களையும் தம் நகரத்தையும் காப்பாற்றுவார் என்று உறுதியளித்தார்.
அன்றிரவே ஆண்டவரின் தூதன் அசீரியர் பாளயத்தில் 185,000 வீரர்களை அழித்தான். இதனால் சனகெரிப் தோல்வியடைந்து தன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றான் என்ற செய்தியை இன்று நாம் கேட்கிறோம். 

நற்செய்தி. 

இன்றைய நற்செய்தியில், மத்தேயுவின் வழியாக, இயேசு, புனிதமானவற்றை அவற்றின் மதிப்பை உணராதவர்களிடம் வீணாக்க வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்.  மேலும், நாம் பிறரிடமிருந்து எவ்வாறு நடத்தப்பட விரும்புகிறோமோ, அதேபோல் அவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.  
அதன்பின், வாழ்வுக்குச் செல்லும் பாதை குறுகலானதும் கடினமானதும் ஆகும்; அதைக் கண்டுபிடித்து அதில் நடப்போர் சிலரே. ஆனால் அழிவுக்குச் செல்லும் பாதை அகலமானதும் எளிதானதும் ஆகும்; அதில் பலர் செல்கின்றனர் என்று இயேசு எச்சரித்ததை மத்தேயு பதிவுச் செய்துள்ளார். 

சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில், இறைவனை முழுமையாக நம்பி அவரிடம் மன்றாடுகிறவர்களை அவர் கைவிடமாட்டார். மனித வல்லமையை விட இறைவனின் வல்லமை மேலானது; அவர் தம் மக்களை அதிசயமான முறையில் காத்தருளுகிறார் என்ற செய்தி நமக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆம், தென்னாடான யூதேயாவையும் எருசலேம் ஆலயத்தையும் அசீரயாவின் மன்னன் கைப்பற்ற எண்ணியபோது, அரசன் எசேக்கியா உதவி கேட்டு ஆண்டவரிடம் மன்றாடினார். ஆண்டவர் மனமிரங்கி உதவினார். அப்போது ஆலயமும் நாடும் காப்பாற்றப்பட்டது. 

கடவுளை முழுமையாக நம்பி அவரிடம் மன்றாடுகிறவர்களை அவர் கைவிடமாட்டார். மனித வல்லமையை விட இறைவனின் வல்லமை மேலானது; அவர் தம் மக்களை அதிசயமான முறையில் காத்தருளுகிறார் என்பது திண்ணம். 

நற்செய்தியிலோ, வாழ்வுக்குச் செல்லும் பாதை குறுகலானதும் கடினமானதும் ஆகும் என்றைரக்கும் ஆண்டவர்,  அதைக் கண்டுபிடித்து அதில் நடப்போர் பேறுபெற்றோர் என்கிறார். ஆம், பாவம் என்ற கல்லரைக்குப் பல வழி, என்றும் தர்ம தேவன் கோயிலுக்கு ஒரு வழி எனும் கூற்றை நாம் மனதில் கொள்ள வேண்டும். என்றும், இறைவனின் ஞானத்தை மதித்து, பிறரை அன்புடனும் நீதியுடனும் நடத்தி, வாழ்வுக்குக் கொண்டுசெல்லும் குறுகிய பாதையைத் தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும். 

நற்செய்தியில், மேலும் ஆண்டவர் ‘தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம் இங்கே இரு உவமைகளை இயேசு கையாள்கிறார். "தூய்மையானது " மற்றும் "முத்துக்கள்"
•    இறைவார்த்தை, நற்செய்தி, இறைஅருள் போன்றவை கடவுளின்  விலையுயர்ந்த ஆன்மீகச் செல்வங்களைக் குறிக்கின்றன. 
•    இவை மிகவும் மதிப்புமிக்கவை; அவற்றை அலட்சியமாக நடத்தக் கூடாது.
அடுத்து இரு விலங்குகளை,  "நாய்கள்" மற்றும் "பன்றிகள்" எடுத்துகாட்டாகக் காட்டி ஆண்டவர், இறை உண்மையை ஏற்க மறுத்து, அதை இகழ்ந்து நிராகரிக்கும் மனநிலையைச் சுட்டிக்காட்டுகிறார்.   இறைவனின் தூய்மையான வரங்களையும் உண்மைகளையும் மதிக்காதவர்களிடம் அவற்றை வீணாக வற்புறுத்தாமல், ஞானத்துடனும் விவேகத்துடனும் பகிர வேண்டும் என்றும் இன்று அறிவுறுத்தப்ப்டுகிறோம். 

தமிழில் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை? என்பதொரு பழமொழி. கற்பூரம் நறுமணம் மிக்கது. ஆனால் கழுதைக்கு அந்த நறுமணத்தின் மதிப்பு தெரியாது. அதுபோல, கடவுளின் ஞானம் மனிதனால் அளவிடமுடியாதது. அதை உணர்ந்து கடவுளுக்கான, அவரது வார்த்தைக்கான மதிப்பினை ஏற்க மறுப்போருக்கு  அவற்றின் அருமை புரியாது. 

ஆகவே, அவர்களாகவே உணரும் காலம் வரும். அதுவரை அவர்களோடு விதண்டாவாதம் பயன்ற்றது என்று அறிவுறுத்தப்படுகிறோம். ஆகவே, நமது சொல்லும் செயலும் அவர்களுக்கு முன்மாதிரியாக அமைவதே மேலானது. 

இறைவேண்டல்.

அன்பு இயேசுவே,
பிறரிடம் நான் எதிர்பார்ப்பது போலவே அன்புடனும் நீதியுடனும் நடந்துகொள்ளும்  மனதை எமக்கருள்வீராக. ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452