பிறரைத் தீர்ப்பிடாத மனப்பான்மை நமதாகட்டும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 12ஆம் வாரம் – திங்கள்
2 அரசர் 17: 5-8, 13-15, 18
மத்தேயு 7: 1-5
பிறரைத் தீர்ப்பிடாத மனப்பான்மை நமதாகட்டும்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், அசீரியாவின் அரசன் வட நாடான இஸ்ரயேல் நாட்டைத் தாக்கி, அதன் தலையகரான சமாரியாவை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்டுப் பிடித்தான். அதன் பின்னர் இஸ்ரயேலர் அசீரியாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தத் தண்டனை அவர்களுடைய பாவங்களின் விளைவாக ஏற்பட்டது. அவர்கள் தாவீது கட்டி எழுப்பிய நாட்டை பிளவுப்படுத்தி, எருசலேம் ஆலயத்தை விட்டு விலகி, தங்கள் கடவுளாகிய ஆண்டவரை துறந்து , பிற இனங்களின் தீய பழக்கவழக்கங்களையும் விக்கிரக ஆராதனையையும் பின்பற்றினர். அந்த தெய்வங்குளுக்கு இரு பெரும் கோயில்களைக் கட்டினர்.
ஆண்டவர் தமது ஆமோஸ் போன்ற இறைவாக்கினர்களின் மூலம் மனந்திரும்பும்படி பலமுறை எச்சரித்தார். ஆனால் அவர்கள் அவற்றை நிராகரித்தனர். அவர்கள் வீண் வழிகளைப் பின்பற்றி, ஆண்டவருக்குப் பிரியமில்லாத செயல்களில் ஈடுபட்டனர்.
எனவே ஆண்டவர் அவர்கள்மேல் மிகுந்த கோபம்கொண்டு, தம் முன்னிலையிலிருந்து அவர்களை அகற்றினார். இவ்வாறு இஸ்ரயேல் அரசு வீழ்ச்சியடைந்து, மக்கள் சிறைபிடிக்கப்பட்டனர் எனும் வரலாறு எடுத்துரைக்கப்படுகிறது.
நற்செய்தி.
இப்பகுதியில் இயேசு, பிறரைத் தீர்ப்பிடாதீர்கள் என்று போதிக்கிறார். நாம் பிறரை எந்த அளவுகோலால் தீர்ப்பிடுகிறோமோ, அதே அளவுகோலால் நாமும் தீர்ப்பிடப்படுவோம் என எச்சரிக்கிறார். மற்றவரின் கண்ணில் உள்ள சிறு தூசியைக் காணும் நாம், நம்முடைய கண்ணில் உள்ள பெரிய மரத்துண்டைக் கவனிக்காமல் இருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆகவே, முதலில் நமது குறைகளையும் பாவங்களையும் நீக்கிக் கொண்டு, பின்னர் பிறருக்கு உதவ வேண்டும் என்று இயேசு அறிவுறுத்துகிறார்.
சிந்தனைக்கு.
பிறரின் சிறிய குறைகளைச் சுட்டிக்காட்டுவதற்கு முன், நம்முடைய பெரிய குறைகளை உணர்ந்து திருத்திக்கொள்ள வேண்டும் என்ற தத்துவத்தை இன்றைய நற்செய்தி அறிவுறுத்துகிறது. ஆம், தன்னாய்வு, மற்றும் இரக்கத்துடன் பிறரை அணுக வேண்டியதன் முக்கியத்துவத்துவமும் இதில் வலியுறுத்தப்படுகிறது என்றால் மிகையாகாது.
இது குறித்து திருவள்ளுவர் பின்வருமாறு கூறினார்.
“ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.” ( குறள் 190)
இக்குறளானது, “பிறர் கண்ணிலுள்ள துரும்பைப் பார்க்கும் முன், உன் கண்ணிலுள்ள மரத்துண்டைப் பார்” என்ற இயேசுவின் போதனைக்கும் மிகவும் பொருத்தமானதாகும். அதாவது, பிறருடைய குற்றங்களைக் காண்பதற்கு முன் ஒருவர் தன்னுடைய குற்றங்களையும் கண்டறிந்து திருத்திக் கொண்டால், அவரது வாழ்க்கையில் துன்பம் எதுவும் ஏற்படாது என்பதாகும்.
ஒவ்வொரு முறையும் நாம் மற்றவரை நியாயமற்ற முறையில் மதிப்பிடும்போது பாவத்தில் வீழ்கிறோம். இதைச் சரிசெய்ய, நமது நோக்கங்களை நாம் ஆராய வேண்டும். பாவம் வஞ்சகமானது, குறிப்பாக அநியாயமாக மற்றவரை மதிப்பிடும் பாவம் மிகவும் நயவஞ்சகமானது. தல தருணங்களில்,அது பெரும்பாலும் நியாயமானது போல் தோன்றும். நம் பக்கம்தான் நியாயம் உள்ளதாகக் காட்டும்.
அக்காலத்தில், இதுவே மறைநூல் அறிஞர்களின் மற்றும் பரிசேயர்களின் பாவமாக இருந்தது. அவர்கள் உண்மையான நீதியின்படி அல்லாமல், தங்கள் பாரம்பரியங்களின்படி மோசேயின் சட்டத்தை விளக்கி, மக்களுக்குத் தீரப்பு வழங்கினார்கள். அவர்களின் செயல் அவர்கள் கடவுளின் பெயரில் செயல்படுவதாக மக்களை நம்ப வைத்தது. ஆனால் அவர்களளின் தற்பெருமையால் மக்கள்தான் பாதிக்கப்பட்டனர்.
ஒரு புத்தகத்தின் அட்டை அழகாகவோ சாதாரணமாகவோ இருக்கலாம். ஆனால் அதன் உண்மையான மதிப்பு அதன் உள்ளடக்கத்தில்தான் உள்ளது. அதுபோல, மனிதர்களின் தோற்றம், உடை, செல்வம், பதவி போன்ற வெளிப்புற அம்சங்களை வைத்து அவர்களைப் பற்றி முடிவு செய்யக் கூடாது. ஏனெனில், புறத்தைப் பார்த்து அகத்தை அறிய முடியாது. தோற்றம் பார்த்து தீர்ப்பு கூறுவது ஆபத்தானது.
“கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்’” என்ற பாடல், வெளிப்படையாகத் தெரியும் விடயங்கள் எல்லாம் உண்மையாக இருக்க வேண்டியதில்லை என்பதையும், தோற்றத்தைக் கண்டு ஏமாறாமல் விவேகத்துடனும் அனுபவத்துடனும் உண்மையை அறிய வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது.
இறை வேண்டல்.
ஆண்டவரே, பிறரைக் குற்றம் சாட்டுவதற்கு முன் என் சொந்த குறைகளைக் காணும் தாழ்மையை எனக்குத் தாரும்.ஆமென்
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452