இறைவன் அறிவார் நம் தேவைகளை! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
பொதுக்காலம் 11 ஆம் வாரம் – சனி
2 குறிப்பேடு 24: 17-25
மத்தேயு 6: 24-34
இறைவன் அறிவார் நம் தேவைகளை!
முதல் வாசகம்.
யோயாதா குரு இறந்தபின், யூதாவின் தலைவர்கள் அரசன் யோவாசு அவர்களிடம் வந்து வணங்கினர். அவர்களின் ஆலோசனையைக் கேட்டு, அரசன் யோவாசு ஆண்டவரின் ஆலயத்தைப் புறக்கணித்து, சிலைகளையும் விக்கிரகங்களையும் வழிபடத் தொடங்கினார். இதனால் ஆண்டவரின் கோபம் யூதாவின்மேல் வந்தது.
இதனைத் தொடர்ந்து, மனந்திரும்பச் செய்வதற்காக ஆண்டவர் இறைவாக்கினர்களை அனுப்பினார். ஆனால் அவர்கள் கூறிய எச்சரிக்கையை மக்கள் ஏற்கவில்லை. அப்போது யோயாதாவின் மகனான செக்கரியா இறைவாக்கு உரைத்து, “நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டதால், ஆண்டவரும் உங்களைக் கைவிட்டார்” என்று கூறினார். இதனால் அரசனின் கட்டளையின்படி அவர் கல்லெறிந்து கொல்லப்பட்டார்.
பின்னர் சிரியா படை யூதாவைத் தாக்கி, நாட்டிற்கு பெரும் சேதம் விளைவித்தது. யோவாசு காயமடைந்தார். இறுதியில், செக்கரியாவின் இரத்தத்திற்குப் பழிவாங்கும் வகையில், அவரது சொந்த அதிகாரிகளே அவருக்கு எதிராகச் சதி செய்து அவரைக் கொன்றனர் என்று அறிகிறோம்.
நற்செய்தி.
இந்தப் பகுதியில் இயேசு, செல்வத்திற்கும் இறைவனுக்கும் இடையிலான தேர்வு மற்றும் இறைநம்பிக்கையுடன் வாழ்வதன் அவசியம் குறித்து இன்று அறிவுறுத்துகிறார். முதலில், “எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது’ என்ற படிப்பினைய முன்வைக்கிறார்.
எவராலும், ஒரே நேரத்தில் இறைவனுக்கும் செல்வத்திற்கும் முழுமையாக அர்ப்பணிக்க முடியாது. செல்வம் வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக மாறும்போது, அது இறைவனுடனான உறவை பாதிக்கும். எனவே, இறைவனுக்கே நாம் முதன்மையான இடமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
தொடர்ந்து, 'கவலைப்படாதீர்கள்’ என்பது அவரது அறிவுறுத்தலாக ஒலிக்கிறது. அன்றாட உணவு, உடை, நாளைய வாழ்க்கை போன்றவற்றைப் பற்றி அளவுக்கு மீறிக் கவலைப்பட வேண்டாம் என்று இயேசு போதிக்கிறார்.
• வானத்துப் பறவைகள் விதைப்பதோ அறுப்பதோ இல்லை; ஆனாலும் இறைவன் அவற்றைப் பராமரிக்கிறார்.
• வயல்வெளியின் மலர்கள் உழைப்பதோ நூற்பதோ இல்லை; ஆனாலும் அவை அழகாக அலங்கரிக்கப்படுகின்றன.
இதன் மூலம், மனிதர்களாகிய நாம் இறைவனுக்குப் பெருமதிப்புடையவர்கள் என்பதையும், நமது தேவைகளை அவர் அறிந்திருக்கிறார் என்பதையும் இயேசு நினைவூட்டுகிறார்.
இவ்வுலக வாழக்கையில் முதலில் இறையாட்சியைத் தேட வேணெடும். வாழ்க்கையின் முதல் முன்னுரிமை இறைவனாக இருக்க வேண்டும். அப்போது தேவையானவற்றை இறைவன் அருள்வார் என்ற நம்பிக்கை இன்றியமையாதது. ஒவ்வொரு நாளுக்கும் அதற்குரிய சுமை உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் இன்றைய நாளை வீணாக்கிவிடும் என்கிறார் ஆண்டவர்.
சிந்தனைக்கு
இறைவனை முதன்மைப்படுத்தி, அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைத்து வாழ முற்படுவதே கிறிஸ்தவம். செல்வம் அல்லது நாளைய கவலைகள் நமது இதயத்தை ஆள அனுமதித்தல் கூடாது. இறைவனுக்கான உண்மைத்தன்மையிலிருந்து விலகுதல் அழிவைத் தரும். இறைவனுக்கு உண்மையாக இருப்பதும், அவருடைய வார்த்தைக்குச் செவிசாய்ப்பதும் நமது தலையாயக் கடமையாகும்.
இயேசு போதிப்பது போல, புறவினத்தார் நிலையானதை புறக்கணித்து, இவ்வுலகக் செல்வங்களைத் தேடி, அவற்றைக் குறித்துக் கவலைப்படுகிறார்கள். ஆயினும், நம்முடைய விண்ணகத் தந்தையோ நம் தேவைகளை அறிந்திருக்கிறார். எனவே, அவருடைய பராமரிப்பில் நம்பிக்கை வைக்கும் ஓர் உள்ளார்ந்த மனநிலையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு அறிவுறுத்தியதை நாம் புறக்கணித்தால், புறக்கணிக்கப்படுவோம். முதல் வாசகத்தில் இறைவாக்குறைத்த யோயாதாவின் மகனான செக்கரியா “நீங்கள் ஆண்டவரைக் கைவிட்டதால், ஆண்டவரும் உங்களைக் கைவிட்டார்” என்று கூறினார். ஆகவே, நமது எண்ணமும் செயலும் உலகுக்கானதாக இருந்தால், நமது ஆன்மாவும் கைவிடப்படும்.
நமக்கும் நம் குடும்பங்களுக்கும் தேவையானவற்றை வழங்கி, பொறுப்புடன் செயல்பட நாம் அழைக்கப்பட்டிருந்தாலும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல், அளவுக்கு மீறிய உலக ஆசை நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும்.
ஒவ்வொரு நாளும் நமது முதன்மையான அக்கறை கடவுளாகவும் அவருடைய விருப்பமாகவும் இருக்கும்போது, அவர் நமது தேவைகளை உரிய அளவில் பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வதே கிறிஸ்தவ வாழ்வு.
இறைவேண்டல்.
ஆண்டவரே, நான் என்றும் உம்மையே முதன்மையாகத் தேடவும், உலகக் கவலைகளால் கலங்காத இதயத்தை எனக்குத் தந்தருளும். ஆமென்.
முக்கிய செய்தி:
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452