இரக்கமே வழிபாடு | அருள்பணி. முனைவர் அ. பவுல்ராஜ் | Veritas Tamil

'என்னுடைய பொருள்கள் என்னுடையவை உன்னுடைய பொருள்கள் என்னுடையவையே' என்ற மனநிலையில் இருப்பவன் அதமன்.

'என்னுடைய பொருள்கள் என்னுடையவை. உன்னுடைய பொருள்கள் உன்னுடையவை' என்ற மனநிலையில் இருப்பவன் மத்திமன்.

'உன்னுடைய பொருள்கள் உன்னுடையவை. என்னுடைய பொருள்களும் உன்னுடையவையே' என்ற மனநிலையில் இருப்பவன் உத்தமன்.

'என்னுடைய பொருள்கள் என்னுடையவையல்ல. உன்னுடைய பொருள்கள் உன்னுடையவையல்ல' என்ற மனநிலையில் இருப்பவன் ஞானி.

இந்த நான்கு நிலைகளில் உத்தம நிலையில் இருப்பவர்தான் இரக்கப்படுகிறார்.

இரக்கம் காட்டுபவர்கள், தங்களைச் சுற்றி இனிய அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டேயிருப்பார்கள். இன்றைக்கு இந்த உலகத்திலே இருக்கிற பல வகையான துன்பங்களுக்கு அடிப்படையான காரணம் ஒரு மனிதர்மீது இன்னொரு மனிதருக்கு இருக்க வேண்டிய பரிவு (இரக்கம்) உணர்ச்சி இல்லாமல் போனதுதான்.

ஆயனில்லா ஆடுகள் போன்று இருந்த மக்கள்மீது இயேசு கிறிஸ்து பரிவிரக்கம் கொண்டார். அவரது இயல்பான தன்மையே இந்த இரக்கம். குத்தித் திறக்கப்பட்ட திருவிலாவிலிருந்து பீறிட்டு வருகின்ற இரத்தமும் நீரும் அவரது இரக்கத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றன.

போலந்து நாட்டில் அருட்சகோதரி மரிய பௌஸ்தினா கொவால்கஸ் அவர்களுக்கு இறைவன் தந்த காட்சி : குத்தித் திறக்கப்பட்ட விலாவிலிருந்து இரக்கத்தின் ஒளிக்கதிர் புறப்பட்டு மனிதகுலம் முழுமையின் மீதும் பொழியப்பட்டது. இந்த இரண்டு ஒளிக்கதிர்கள் இயேசுவின் திருவிலாவிலிருந்து பீறிட்ட இரத்தத்தையும், தண்ணீரையும் குறிக்கின்றன. இரத்தம் கல்வாரிப் பலியையும், தண்ணீர் நமது விலைமதிப்பில்லா கொடையான திருமுழுக்கு அருளடையாளத்தையும் குறிக்கின்றது. இந்தக் கால்வாரிப் பலியையும், அருளடையாளத்தையும் நமதாக்கி வாழும்போது, இரக்கத்தின் தன்மை நமக்குள்ளும் பீறிடும்.

காலை. ஒரு பெரியவர் மாஸ்கோ நகரம். 24வது நடந்துகொண்டிருந்தார். எதிரே ஒரு பிச்சைக்காரர் வருகிறார். “ஐயா! பிச்சை போடுங்க?" என்று கேட்கிறார். உடனே அந்தப் பெரியவர் தன் சட்டைப் பைக்குள் கையை விட்டுத் தேடிப் பார்க்கிறார். ஒன்றும் கிடைக்கவில்லை. உடனே அந்தப் பிச்சைக்காரரைப் பார்த்து, “தம்பி! கையில் பணமில்லையே” என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டவுடன், அந்தப் பிச்சைக்காரரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். முகத்தில் ஒரு மலர்ச்சி! என்ன காரணம் என்று ஆச்சரியத்தோடு அவர் முகத்தைப் பார்க்கிறார். அவர் சொல்கிறார். "ஐயா! எனக்குப் பிச்சை போடலேன்னாலும் பரவாயில்லை. எனக்குப் பிச்சை கொடுக்கிறதைவிட ஒரு பெரிய உதவியை செஞ்சிருக்கீங்க....! அதாவது என்னை, 'தம்பி'ன்னு கூப்பிட்டீங்களே, எனக்கு அதுபோதும்."

தன்னைக் கொஞ்சமும் மதிக்காத இந்த உலகத்தில், தன்னையும் ஒரு மனிதராக மதித்து தம்பி என்று உறவு கொண்டாடிய அந்தப் பெரியவரின் பரிவையும் இரக்கத்தையும், கண்டு மனமுருகி நின்றார். பணத்தால் கிட்டாத, மகிழ்ச்சியும், ஊக்கமும் பரிவினால் கிடைக்கிறது. தம்பி என்ற அழைத்த அந்தப் பெரியவர் இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய். இந்தப் பரிவுணர்ச்சி, இரக்க குணம் நமக்கும் வேண்டும்.

கொஞ்சம் இரக்கம் இந்த உலகை இன்னும் நேசமிக்கதாகவும், இன்னும் நேர்மை மிக்கதாகவும் மாற்றக்கூடியது (ALittle bit of mercy makes the world less cold and more just). இந்த இரக்கத்தின் மூலமே இறைத்தன்மையை அடையமுடியும். கருணை, பரிவு, இரக்கம் இதைக் காட்டிலும் சிறந்த வழிபாடு இருக்கவும் முடியாது.

பேராசையும், தன்முனைப்பும், சுயநலமும், இல்லாதவர்கள் மட்டுமே கருணையுடன் திகழ முடியும். மனிதநேயம் உச்சத்தைத் தொடும் உணர்வே இரக்கமாகக் குருத்துவிடும். இந்த இரக்க உணர்வைத் திடீரென்று வளர்த்துக்கொள்ள முடியாது. அதை வளர்த்துக்கொள்ள, வெளிப்படுத்த முதியோர் இல்லங்களுக்கும் கருணை இல்லங்களுக்கும் செல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நாளையும் அன்புடன், கருணையுடன் தொடங்குவோம். நம்மைச் சுற்றி இருக்கும் மரம், செடி, கொடி... அனைத்தின்மீதும் பரிவு காட்டுவோம். காளையைக் கண்டாலும், கருங்குருவியைக் கண்டாலும், நம் கண்கள் இரக்கத்தைப் பொழியட்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்களிடம் நம் செயல்கள் மூலம் கருணை காட்டுவோம். சமதளத்தில் நின்று சகபயணிகளை உற்று நோக்குகிற மனோபாவம் கொள்வோம். இது கருணையால், இரக்க உணர்வால் மட்டுமே உண்டாகும்.

திருவிவிலியத்தில் வானவில் கடவுளின் இரக்கத்தின் அடையாளமாக காட்டப்படுகிறது. குத்தித் திறக்கப்பட்ட உயிர்த்த ஆண்டவரின் திரு இதயம் கடவுள் நமக்குத் தந்திருக்கும் புதிய வானவில். “என் இரக்கத்தை நோக்கி மனுகுலம் திரும்ப வேண்டும்" என்னும் இறை இரக்கத்தின் ஆண்டவரின் கூற்றை நமதாக்குவோம்.

ஆண்டவரின் இரக்கத்தை நாம் பெற்று அதை மற்றவர்களுக்கும் வழங்குவோம்.

இறை இரக்கம் அக இருளை நீக்கட்டும் நம்பிக்கை வெளிச்சத்தைத் தரட்டும்.