தாழ்ச்சியுடனான சாட்சிய வாழ்வு சீடத்துவத்தின் அடித்தளம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

திருமுழுக்கு யோவானின் பிறப்பு-பெருவிழா
எசாயா  49: 1-6
திருத்தூதர் பணிகள் 13: 22-26
லூக்கா 1: 57-66, 80

 
தாழ்ச்சியுடனான சாட்சிய வாழ்வு சீடத்துவத்தின்  அடித்தளம்!

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், இறைவன் தாயின் கருவிலிருந்தே தம்முடைய ஊழியக்காரரைத் தேர்ந்தெடுத்து, தமது மாட்சிமையை வெளிப்படுத்த அழைத்ததாக கூறுகிறார் இறைவாக்கினர் எசாயா கூறுகிறார். . ஆரம்பத்தில் அவரது உழைப்பு வீணானது போல தோன்றினாலும், தனது நீதியும் பலனும் இறைவனிடமிருந்து வரும் என்பதை அவர் நம்பினார். மேலும், யாக்கோபையும் இஸ்ரயேலையும் மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து இன மக்களுக்கும் மீடபை வழங்கும் ஒளியாக அவரை இறைவன் நியமித்துள்ளார் என்று எசாயா ஒப்புக்கள்கிறார். 

இரண்டாம் வாசகம்.

பவுல் அடிகள், , இஸ்ரயேல் மக்களின் வரலாற்றை நினைவுகூர்ந்து, கடவுள் தாவீதைக் அரசனாகத் தேர்ந்தெடுத்து, “என் இதயத்துக்கு உகந்தவனாகக் கண்டேன்” என்று புகழ்ந்ததை எடுத்துரைக்கிறார். தாவீதின் வழிமரபில் இருந்து கடவுள் தமது வாக்குறுதியின்படி இயேசுவை மீட்பராக அனுப்பினார் என்றும்,  இயேசுவின் வருகைக்கு முன், திருமுழுக்கு யோவான் மனமாற்றத்தின் திருமுழுக்கைப் போதித்து, தாம் மெசியா அல்ல என்றும், தமக்குப் பின்வருபவரே உயர்ந்தவர் என்றும் அறிவித்ததை நினைவு கூர்கிறார். இறுதியாக, பவுல் இயேசுவின் வழியாக வரும் மீட்பின் செய்தி   நமக்குத்தான் அனுப்பப்பட்டுள்ளது என்று சாட்சியம் பகர்கிறார். 

நற்செய்தி.

நற்செய்தியில், நற்செய்தியாளர் லூக்கா, எலிசபெத்துக்கு காலம் நிறைவடைந்து ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆண்டவர் அவள்மேல் காட்டிய இரக்கத்தை அறிந்த உறவினர்களும் அயலாரும் மகிழ்ந்தனர். எட்டாம் நாளில் குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யும்போது, தந்தையின் பெயரான சக்கரியா என்று அழைக்க விரும்பினார்கள். ஆனால் எலிசபெத்து, “அவனுக்கு யோவான் என்று பெயரிடப்பட வேண்டும்” என்றார். பின்னர் சக்கரியாவிடம் கேட்டபோது, அவர் பலகையில் “அவன் பெயர் யோவான்” என்று எழுதினார். உடனே அவரது வாய் திறக்கப்பட்டு, அவர் இறைவனைப் புகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறார் லூக்கா. 
மேலும், இந்த நிகழ்வுகள் அனைத்தும் அப்பகுதி மக்களிடையே வியப்பையும் இறையச்சத்தையும் ஏற்படுத்தின என்றும்,  இக்குழந்தை எப்படிப்பட்டதாக இருக்குமோ?”  என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர்; ஏனெனில் ஆண்டவரின் கைவண்மையை அக்குழந்தை கொண்டிருந்தது. 
யோவான் வளர்ந்து ஆவியில் வலிமை பெற்றார். இஸ்ரயேல் மக்களிடம் தன்னை வெளிப்படுத்தும் நாள் வரும்வரை அவர் பாலைநிலத்தில் வாழ்ந்தார் என்றும் விவரிக்கிறார் லூக்கா.

சிந்தனைக்கு.
இன்று திருமுழுக்கு யோவானின் பிறப்பு-பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழா, திருஅவையால் திருவழிபாட்டுப ஃபெருவிழாவாகக்க் கொண்டாடப்படும் மூன்று பிறந்தநாட்களில் ஒன்றாகும்—மற்றவை இயேசு மற்றும் புனித கன்னி மரியாவின் பிறந்தநாள்கள் என்பன. இந்த நாளானது, ஆண்டவருக்காக வழியை ஆயத்தப்படுத்திய முன்னோடியாக, மீட்பின் வரலாற்றில் புனித யோவான் ஆற்றிய தனித்துவமான பங்கை வெளிப்படுத்துகிறது எனலாம். . யோவானின் பிறப்பையொட்டிய மிக முக்கிய  மூன்று ஆழ்ந்த மறைபொருட்கள் குறித்து நாம் இன்று சிந்திக்க வேண்டியுள்ளது. 

1.    பல வருட குழந்தையின்மைக்குப்  பிறகும், இயற்கையாக்க்  குழந்தை பெறும் வயதைக் கடந்த பின்னரும், எலிசபெத் தனது முதுமையில் கருவுற்றது, தெய்வீகத் தலையீட்டின் ஒரு திட்டமிட்ட அடையாளமாகவும், கடவுளின் வல்லமைக்கும் இரக்கத்திற்கும் ஓர் சான்றாகவும் நாம் பார்க்க வேண்டும்.

2.    யோவானின் பெயர் சூட்டப்பட்டதானது,  அவருடைய அரப்பணிப்பு வாழ்வையும் பணியையும் உறுதிப்படுத்தும் நிகழ்வாக வெளிப்படுத்துகிறது. விவிலிய மரபில், பெயர் சூட்டுவது அல்லது மாற்று பெயரிடுவது ஆழ்ந்த பொருள் நிறைந்தவை; அவை பெரும்பாலும் ஒரு நபரின் அடையாளத்தையும் பணியையும் வெளிப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கும். எடுத்துகாட்டாக, யாக்கோப்பு என்பது இஸ்ரயேலாகவும், சவுல் என்பது பவுலாகவும் பெயர் மற்றம் கண்டதைக் குறிப்பிடலாம். 


3.    பல மாதங்களாக  பேச்சற்ற மௌனத்திற்குப் பிறகு செக்கரியா மீண்டும் பேசலானார்.  கடவுளின் செயல் ஒவ்வொன்றுக்கும் நோக்கமிருக்கும்.

 "யோவான்" என்ற பெயருக்கு "இறைவன் அருளாளர்" என்று பொருள். அவர் இறைவனின் அருளின் அடையாளமாகப் பிறந்தார் என்பதை இப்பெயர் எடுத்துரைக்கிறது.
முதல் வாசகத்தில், "தாயின் கருவிலிருந்தே ஆண்டவர் என்னை அழைத்தார்" என்று எசாயா கூறுகிறார். இது யோவானின் வாழ்க்கையில் நிறைவேறியது. பிறப்பதற்கு முன்பே அவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பணி தெளிவானது: மக்களை மீட்பரின் வருகைக்குத் தயார்படுத்துவதாக  உள்ள்து.
திருத்தூதர் பணிகளில், பவுல் யோவானைப் பற்றி பேசும்போது, அவர் தன்னை முன்னிறுத்தவில்லை; மாறாக, இயேசுவை நோக்கி மக்களின் கவனத்தைத் திருப்பினார் என்று கூறுகிறார். யோவானின் வாழ்க்கையின் சிறப்பு இதுவே. அவர் தன்னை அல்ல, கிறிஸ்துவையே சுட்டிக்காட்டினார்.
இன்று:
•    நமது வாழ்க்கை மற்றவர்களை இறைவனை நோக்கி அழைக்கிறதா? 
•    நமது வார்த்தைகளும் செயல்களும் கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறதா? 
•    அல்லது நம்மையே முன்னிறுத்த முயற்சிக்கிறோமா? 
திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் ஒலித்த இறை குரலாக இருந்தார். இன்று நம் குடும்பங்களிலும், சமூகத்திலும், உலகத்திலும் கிறிஸ்துவின் குரலாக இருக்க நாம் அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவில் கொள்வோம்..
 
இறைவேண்டல்.

ஆண்டவரே, யோவானைப் போல என் வாழ்விலும் உண்மையைத் துணிவுடன் சாட்சியப்படுத்தவும், பிறரை உம்மிடம் அழைத்துச் செல்லவும் எனக்கு அருள் தாரும். ஆமென்.
   

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452