இறைவனிடமிருந்து விலகுதல் அழிவைத் தரும்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

பொதுக்காலம் 12ஆம் வாரம் – வெள்ளி

2 அரசர்  25: 1-12                                                                                                                              

மத்தேயு 8: 1-4

இறைவனிடமிருந்து விலகுதல் அழிவைத் தரும்!

முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், யூதேயாவின் வீழ்ச்சி எஉறித்து தொடர்ந்து வாசிக்கிறோம்.  யூதாவின் (தென்னாடு) கடைசி அரசனான செதேக்கியா ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டில், பாபிலோன் அரசன் நெபுகத்நேச்சர் எருசலேமை முற்றுகையிட்டான். நீண்ட முற்றுகையால் நகரத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. இறுதியில் நகரச் சுவர் உடைக்கப்பட்டபோது, செதேக்கியாவும் அவரது வீரர்களும் இரவில் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் பாபிலோனியர்கள் அவரைப் பிடித்து, அவருடைய மகன்களைக் கொன்றபின் அவரது கண்களைக் குருடாக்கி பாபிலோனுக்கு அழைத்துச் சென்றனர்.
அதன்பின் பாபிலோனிய தளபதியான நெபுசராதான் எருசலேமுக்குள் வந்து ஆண்டவரின் ஆலயத்தையும், அரச மாளிகையையும், நகரத்தின் முக்கிய கட்டிடங்களையும் தீ வைத்து அழித்தான். எருசலேமின் சுவர்களும் இடிக்கப்பட்டன.
நகரத்தில் இருந்த பெரும்பாலான மக்கள் பாபிலோனுக்கு சிறைபிடித்து அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் நாட்டில் மிகவும் ஏழைகளாக இருந்த சிலரை மட்டும் திராட்சைத்தோட்டங்களையும் வயல்களையும் பராமரிக்க விட்டுச் சென்றனர் என்று அறிகிறோம். 

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு மலைப்பொழிவை முடித்து மலையிலிருந்து இறங்கி வந்தபோது, பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்போது தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இயேசுவின் முன் வந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால் என்னைத் தூய்மையாக்க முடியும்” என்று நம்பிக்கையுடன் வேண்டினார். 

இயேசு அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்று கூறினதும்.  அவரது தொழுநோய் நீங்கியது. பின்னர், இதை யாரிடமும் சொல்லாமல், குருவிடம் சென்று தன்னை காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்தும்படி இயேசு அவருக்குக் கூறினார் என்று மத்தேயு சாட்சியமாக குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

நம்பிக்கையுடன் இயேசுவை அணுகுகிறவர்களை அவர் இரக்கத்தோடு ஏற்று, அவர்களின் வாழ்வில் குணமளிப்பையும் புதுப்பிப்பையும் அளிக்கிறார் என்பதை இன்றைய நற்செய்தி வெளிப்படுத்துகிறது, இங்கே, “ஆண்டவரே, நீர் விரும்பினால் என்னைத் தூய்மையாக்க முடியும்” என்று நம்பிக்கையுடன் தொழுநோயாளி வேண்டினார் என்று மத்தேயு குறிப்பிடுகிறார். 

ஆம், தொழுநோயாளி, இயேசுவால் தன்னை குணமாக்க முடியும் என்பதில் சந்தேகப்படவில்லை. அதனால், “முடியுமா?” என்று கேட்கவில்லை; “நீர் விரும்பினால்” என்று கூறினார். இது இயேசுவின் ஆற்றலில் அவர் கொண்டிருந்த உறுதியான நம்பிக்கையைக் காட்டுகிறது. 

மேலும் அன்றைய யூத மக்களால், ,  தொழுநோயாளிகள் அசுத்தமானவர்களாகக் கருதப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தனர் (லேவியர் 13:45-46). எனவே, அவர் தமக்கு குணமடையும் உரிமை உண்டு என்று கோரவில்லை; மாறாக, பணிவோடு ஆண்டவரின் இரக்கத்தை நாடினார். நிறைவாக, “நீர் விரும்பினால்” என்ற வார்த்தைகள், கடவுளின் விருப்பமே முதன்மை என்பதை ஏற்றுக்கொள்வதைக் காட்டுகின்றன. அவர் தனது விருப்பத்தை அல்ல, ஆண்டவரின் திருவுளத்தை நாடினார் என்பது தெளிவாகிறது. 

நாம், இயேசுவின் வல்லமையில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். இங்கே ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதற்கு இடமில்லை. அதே வேளையில், கடவுளின் முன்னிலையில் அகந்தை கூடாது, பணிவுடன் இறைவனை அணுக வேண்டும் என்ற படிப்பினையை நாம் பெறுகிறோம். 

முதல் வாசகத்தின் அடிப்படையில், அநீதி, சிலை வழிபாடு,, ஏழைகளை ஒடுக்குதல் போன்ற பாவங்கள் யூதேயா நாட்டில் பெருகின. இதனால் இறைவனின் தீர்ப்பு அவர்கள்மேல் வந்தது. எரேமியா, எசாயா போன்ற இறைவாக்கினர்கள் மனந்திரும்பும்படி அழைத்தும் மக்கள் மற்றும் அரசர்கள் அதைக் கேட்கவில்லை. எனவே இறைவன் அவர்களைத் தண்டிக்க அனுமதித்தார். அதேவேளையில், ஏழைகளை அவர் காத்தருளினார். 

நிறைவாக, இயேசு நம்மில் பலரைப் போன்று, தற்புகழ்ச்சிக்காக வளம்பரம் தேடுபவர் அல்ல. ‘இதை யாரிடமும் சொல்ல வேண்டும்’  என்றதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களின் பாராட்டையும் புகழ்ச்சியையும்  தேடாமல், இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதே நமது நோக்கமாக இருத்தல் அவசியம். அற்புதங்களுக்காக மட்டுமே நாம் அவரைப் பின்தொடர கூடாது  என்று இயேசு விரும்பினார். இதனை வலியுறுத்தவே, “மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை”  (யோவான் 5:41) என்றார் இயேசு.

அடுத்து,  தொழுநோயிலிருந்து குணமானவர் குருவிடம் சென்று பரிசோதிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறியது (லேவியர் 14). இதிலிருந்து, இயேசு சட்டத்தை ஒழிக்க அல்ல, நிறைவேற்ற வந்தவர் என்பதைப் புலப்படுத்துகிறார். மனிதரை இறைவனிடம் கொண்டு சேர்ப்பதே.அவரது அயராத பணியாக இருந்ததை நாம் உணர வேண்டும்.
 
இறைவேண்டல்.
 
அன்பு இயேசுவே, தொழுநோயாளி உம்மிடம் கொண்ட நம்பிக்கையோடு நானும் உம்மை அனுதினமும் அணுகிவர அருள்புரிவீராக. ஆமென்


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452