இளையோர் ஞாயிறு - புனித சகாய மாதா பங்கு செக்காலை. | Veritas Tamil

இளையோர் ஞாயிறு - புனித சகாய மாதா பங்கு செக்காலை.
இறை இயேசுவில் அன்பிற்குரியவர்களே யூபிலி ஆண்டின் வாழ்த்துகளும், செபங்களும்.
தமிழக திரு அவை 03.08. 2025 அன்று ஞாயிறு வழிபாட்டை இளைஞர்களின் ஞாயிறாக அறிவித்து. இளைஞர்களுக்காக மன்றாடவும், இளைஞர்களை ஊக்குவித்து இறை திட்டத்தில் பங்குபெறவும் அழைத்தது. இதை உணர்ந்து சிவகங்கை மறைமாவட்டம் காரைக்குடி செக்காலை புனித சகாய மாதா பங்கு ஆலயத்தில் சிறப்பு ஏற்பாடுகளும், இளைஞரை ஒருங்கிணைத்து பங்கில் அவர்களின் இருப்பு மற்றும் ஆன்மீகத்தை உறுதி செய்யும் விதமாக சிறப்பு திருப்பலியானது அருள்பணியாளர்களான அருள்முனைவர் ஐ. சார்லஸ் அடிகளார் மற்றும் அருள்பணி ஆ. சேசுராஜ் MIC அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது.
சரியாக காலை 8.15 மணிக்கு இளைஞர்கள் இளம்பெண்களை முதன்மையாக கொண்டு இறைமக்களோடும், பங்கு அருள்பணியாளர்களோடும் இணைத்து இளையோருக்கான சிறப்புக் கொடியானது ஆலயத்தின் முகப்பு வாயிலில் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, கைகளில் எரியும் மெழுகுதிரிகளுடன், பவனியாக ஆலயத்திற்கு வந்து திருப்பலியானது நிறைவேற்றப்பட்டது.

மறையுரையின் போது அருட்தந்தை அவர்கள் திருஅவைக்கு இளம் உள்ளங்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்றும், கடந்த நாட்களில் உரோமை நகரில் நடைபெற்ற இளையோர் யூபில் மாநாட்டில் திருத்தந்தை "நீங்கள் உலகின் ஒளி, மற்றும் மண்ணகத்தின் உப்பும் நீங்களே" என்னும் செய்தியை நினைவுப்படுத்தியதோடு, அன்றைய நாள் நற்செய்தியின் மையக்கருத்தான, பொருட்செல்வத்தை விட இறைவனை அறியும் செல்வம் எத்துனை முக்கியமானது என்பதையும் மிக அழகாக வலியுறுத்தனார்.
இன்றைய தினத்தை இளம் உள்ளங்கள் ஒருபோதும் மறந்து விடக் கூடாது என்னும் நோக்கிலும், என்றும் அவர்களின் வாழ்வு இறைவனில் வேரூன்றி திருஅவைக்கும், சமுதாயத்திற்கும் பலன்தரும் கருவிகளாக இருப்பதன் அடையாளமாகவும், இயற்கையை பேணி பாதுகாத்து இயற்கையின் நண்பர்களாய் வாழ்ந்திட ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை நட்டு இளையோர் தினத்தை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடி மகிழ்ந்தனர். அருட்பணியாளர்கள் ஆலயத்தில் இளயோரின் பங்களிப்பை பாராட்டி வாழ்த்தினார்கள்.
Daily Program
