இறைப்பணியில் உறுதியுடன் செயல்படுங்கள் ! | Veritas Tamil
புனித பெனடிக்டின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, இறைவேண்டல் மற்றும் தியானத்தின் வாயிலாக அன்றாட வாழ்வில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை, துறவற வாழ்வானது தனிப்பட்ட விசுவாசத்தையும் கடவுள் மீதான அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
திருஅவையில் பெனடிக்டைன் துறவற சமூகங்கள் செய்து வரும் அளப்பரிய மற்றும் மறைவான நற்பணிகளுக்காக நன்றி தெரிவித்துக்கொண்டார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மார்ச் 30, திங்களன்று, பெனடிக்டைன் துறவிகளைத் திருப்பீடத்தில் சந்தித்த போது தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, இறைவேண்டல் மற்றும் சேவை எனும் தங்களது ஆன்மிகப் பணியில் விடாமுயற்சியுடன் ஈடுபடுமாறு அவர்களை ஊக்குவித்தார்.
மேலும் 'கடவுளின் பணி' என அவர் அழைக்கும் காரியங்களில் அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய திருத்தந்தை, அவர்களின் தொடர் இறைவேண்டல், திருவிவிலியம் மற்றும் விசுவாசத்தில் வேரூன்றிய சமூக வாழ்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.
புனித பெனடிக்டின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, இறைவேண்டல் மற்றும் தியானத்தின் வாயிலாக அன்றாட வாழ்வில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை, துறவற வாழ்வானது தனிப்பட்ட விசுவாசத்தையும் கடவுள் மீதான அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
புனிதமடைதல் என்பது தனிப்பட்ட ஒருவரின் பயணம் மட்டுமல்ல, அது ஒரு சமூகமாக இணைந்து வாழப்பட வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஒருவருக்கொருவர் செவிமடுத்தல், குழுவாக தெளிந்து தேர்தல் மற்றும் திருஅவைக்குள் நிலவும் ஒன்றிப்பு ஆகியவற்றை ஊக்குவித்துள்ளார்.
"தனிமனிதவாதம் மேலோங்கியுள்ள இன்றைய உலகில், துறவறச் சமூகங்கள் தங்களின் சேவை, அன்பு மற்றும் ஆன்மிக ஆழத்தின் மூலம் ஒரு வலிமையான முன்மாதிரியை வழங்குகின்றன" என்றும், குறிப்பாக, "மற்றவர்களுக்காகப் பரிந்து பேசும் மன்றாட்டு வழியாக அவர்கள் இப்பணியைச் செய்கிறார்கள்" என்றும் கூறினார் திருத்தந்தை.
இறுதியாக, கிறிஸ்துவின் அன்பில் தொடர்ந்து தங்களை வளர்த்துக்கொள்ளுமாறு அவர்களை விண்ணப்பித்த திருத்தந்தை, அன்னை புனித கன்னி மரியாவின் பாதுகாப்பிலும் பெனடிக்டைன் புனிதர்களின் அரவணைப்பிலும் அவர்களை ஒப்படைத்துத் தனது உரையை நிறைவு செய்தார்.
நன்றி வத்திக்கான் செய்தி