அனுபவமே ஆசான் | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருநாளும் பலவிதமான அனுபவங்களைப் பெறுகிறோம். அன்றாடம் சந்திக்கும் நபர்களாக இருக்கட்டும், அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளாக இருக்கட்டும் அனைத்துமே நமக்கு அனுபவத்தை பெற்றுத்தருகிறது. நாம் எப்படி வாழ வேண்டும் என்ற பாடத்தையும் கற்றுக் கொடுக்கிறது. பல சமயங்களில் வாழ்க்கையில் நாம் கடந்து வந்த பாதைகளை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா, மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா, மனிதன் போன பாதையை மறந்து போகலாமா? என்ற பாடல் வரிகள் நமக்கு கற்றுத்தரும் பாடத்தை நினைவில் கொள்வோம். நம் வாழ்வில் நாம் கடந்து வந்த பாதைகளை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் அனைவரும் மகிழ்ச்சியில் மிதக்கும் போது, கீழ் நோக்கிப் பார்க்க மறந்து விடுகிறோம். துக்கத்தில் துவளும் போது மட்டுமே, கடந்து வந்த பாதைகளைக் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். உயிருக்கு ஆபத்து என்று வரும்போது மட்டும் இப்படிச் செய்திருக்கலாம், அப்படிச் செய்திருக்கலாம் என்று ஆயிரம் கேள்விகளை எழுப்புகிறோம்? ஏன் இப்படிச் செய்தேன் என்று நினைத்து வருந்துவதை விடுத்து ஒவ்வொரு நாளின் முடிவிலும் நம்மை நாம் மறுவாசிப்பு செய்வது அவசியம் என்பதை உணர்ந்து கொள்வோம்.
மேல் கரும்பை மட்டும் சுவைத்துவிட்டு வாழ்வு ‘சப்’ பென்று இருக்கிறதே என்று நினைத்துவிடாமல் அனுபவம் என்ற அடிக்கரும்பை சுவைத்துப் பார்ப்போம். அப்போதுதான் அதன் சுவையை உணர முடியும். அனுபவம் என்பது படிப்பதால் மட்டும் வருவதில்லை. வகுப்பறையில் பயிற்றுவிப்பது பாடங்கள் மட்டுமே, வாழ்க்கையை அல்ல என்பதனை ‘தாலாட்டு’ என்ற தலைப்பில் ‘பள்ளிக்கூடத்தில் உன்னைச் சேர்ப்பது பற்றி நான் சிந்திக்கவில்லை. அங்கே நிகழ்வது எழுத்துக்களின் கட்டாய அறிமுகம்தான். வாழ்க்கையை வாசிக்க நீ தெருவுக்குத்தானே திரும்பி வரவேண்டும்’ என்ற கவிஞர் வைரமுத்து, வாழ்க்கை என்பது அனுபவங்களால் நிறைந்தது என்கிறார். எனவே நாமும் அனுபவங்களால் நிறையும்போது சிறந்த ஆசான்களாகத் திகழமுடியும். கடந்து வந்த பாதைகளில் பெற்ற அனுபவத்தை நினைவில் கொண்டு செயல்படுவோம். நலமாய் வாழ நம்மை பயிற்றுவிப்போம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
