நம்மை புதுப்பிக்க சற்று ஓய்வெடுப்போம் | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

ஒவ்வொரு மனிதனும் தன்னை புதுப்பித்துக் கொள்ள அவ்வப்போது ஓய்வு தேவை. ஓய்வு என்பது நமது நேரத்தை வீணாக செலவழிப்பதல்ல மாறாக வீணான என்ற வார்த்தைக்கே இடமில்லாமல் செய்வது. தூக்கம் என்ற செயற்கையான கல்லறைக்குள் நமது வாழ்க்கை அடங்கிவிடாது, மாத்திரைகளில் யாத்திரை நடத்தி நமது வாழ்க்கையை மங்கிவிடச் செய்யாது, நாம் விரும்பும் செயல்களை மற்றவர்கள் விரும்பத்தக்க வகையில் செய்து நம்மை நாம் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்வது. நம்மில் பலர் ஓய்வு என்றால் சும்மா இருத்தல் என்று நினைத்துக் கொண்டு தொலைபேசியையும், தொலைக்காட்சிப் பெட்டிகளையும், சமூக வலைத்தளங்களையும் வாடகைக்கு அமர்த்திக் கொண்டு, நிஜ உலகத்தில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகத்தோடு பொய்யான உலகை நமதாக்கி நமது வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம். ஓய்வு நேரத்தை நாம் எப்படி செலவழிக்கிறோம் என்பதை பொறுத்துதான் நம் வாழ்வின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். எனவே ஓய்வு நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி அவ்வப்போது ஏற்படும் களைப்பை போக்கி நம்மை நாம் புதுப்பித்துக் கொண்டு நமது பணியை தொடர்வோம்.

வாரம் முழுவதும் மணிக்கணக்காய் உழைத்து சோர்ந்துபோன ஒருவன் ஒரு நாள் சற்று ஓய்வெடுக்கலாம் என்று எண்ணினான். அந்த ஓய்வு நேரத்தில் வேறு எந்த வேலைக்கும் இடம் கொடுக்காமல் தூங்கலாம் என்று நினைத்து முடிவு செய்தான். அவன் விருப்பப்படி யாரும் அவனை தொந்தரவு செய்யவில்லை. சற்று ஓய்வெடுக்கலாம் என்று ஒரு நாள் தூங்கப் பழகிய அவனுக்கு தினமும் அதே நேரத்தில் தூக்கம் வரவே அவனால் தூக்கத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அதனால் தினமும் அதே நேரத்தில் தூங்க பழகிவிட்டான். ஒருநாள் அலுவலகத்தில் தலைவர் அவனைக் கூப்பிட்டு ஒரு முக்கியமான தரவுகளை ஒரு மேலதிகாரிக்கு அனுப்பச் சொல்லி உத்தரவிட்டார். தனது அறைக்கு சென்று சரி கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு பிறகு அனுப்பிக் கொள்ளலாம் என்று நினைத்த அவன் அந்த தரவுகளை அனுப்பாமலே தூக்கத்தில் ஆழ்ந்தவிட்டான். 1 கோடிக்கான ஆர்டர் என்பதால் அந்த தரவுகளை அனுப்பிவிட்டானா இல்லையா என்று பார்க்க முதலாளி அவனின் அறைக்கு வந்தார். உறங்கிக் கொண்டிருந்த அவனைப்பார்த்துவிட்டு அவனை அந்த பதவியிலிருந்து விலக்கிவிட்டு இன்னொருவனுக்கு அந்த பொறுப்பை கொடுத்துவிட்டார். ஓய்வு என்பது உறக்கம் மட்டும்தான் என்று நினைத்தால் நம் வாழ்வின் வளர்ச்சிப்படியை எட்ட முடியாது. எனவே ஓய்வு நம்மை புதுப்பித்துக் கொள்வதற்கான ஒரு இடைவெளி என்பதை உணர்வோம். வாழ்வின் வெற்றிப்பரிசை நமதாக்குவோம்.

 

எழுத்து 

அருட்சகோதரி ஜான்சி FBS

Daily Program

Livesteam thumbnail