நேசிப்போம் இயற்கையை! சுவாசிப்போம் வாழ்க்கையை! | அருட்சகோதரி ஜான்சி FBS | Veritas Tamil

இயற்கை மட்டுமே நிரந்தரமான இறைவனில் நிலையாய் நிலைத்து நிற்கிறது. உதிக்கும் சூரியன்தான் நமது விடியல். மதிமயக்கும் முழுமதிதான் நாம் இருளில் மூழ்காமல் நம்மைக் காக்கிற ஒளி. வீசும் காற்றுதான் நமது சுவாசம். நமது வாழ்வுக்குப் பஞ்ச பூதங்கள்தான் ஆதாரம் என்று தெரிந்தும் இணையற்ற இயற்கைக்கு நிதமும் அநீதி இழைப்பது தவறல்லவா? இன்று உதித்த சூரியன் நாளையும் அதே திசையில்தான் உதிக்கிறது. அதற்கு அந்த சூரியன் விலை கேட்பதில்லை. அதுபோல தான் இயற்கையும் நம்மிடம் எதையும் எதிர்பார்த்து நமக்கு கொடுப்பது இல்லை. இயற்கையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்கள் எண்ணற்றவை. இயற்கையின் அழகில் இறைவனை கண்டுகொண்டார் புனித பிரான்சிஸ் அசிசி. பொறுமையை இயற்கையிடம் இருந்தே கற்றுக்கொண்டார். இயற்கையில் காணப்படும் பொறுமை நம் மனித மனங்களில் மலர்ந்தாலே போதும், மானுடம் செழிக்கும். மரத்தை அழிப்பதை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல் மரத்தை உருவாக்கிவிட்டு தேவைக்கு ஏற்ப பயன் பெற்றுக் கொள்ள அதனிடம் அனுமதி கேட்போம்.
நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அலைபேசிக் கூட அதிகமான வெப்பத்தை வெளியிடுகிறது. அதன் டவர்கள் சிட்டுக்குருவிகளின் இனத்தையே அழித்து வருகிறது. தொழிற்சாலைகளின் கழிவு மற்றும் புகையால் வான்மண்டலம் மாசு அடைந்துவிட்டது. இதைத் தவிர்க்க நாம் என்ன செய்யப் போகிறோம்? வருங்காலத் தலைமுறை நம்மை வாயார வாழ்த்த வேண்டாமா? மரங்களை நடுவோம் மண்ணைக் குளிர்விப்போம். மாசுகளைக் களைவோம். மிதிவண்டிகளைப் பயன்படுத்துவோம். மின்சாரத்தை மிச்சப்படுத்துவோம். சிக்கனம் இக்கணம் தேவை என்பதை உணர்ந்து அளவோடு பயன்படுத்தி, நலமோடு வாழ்வோம்.
எழுத்து
அருட்சகோதரி ஜான்சி FBS
Daily Program
