தமக்கையே தாயாக! | Veritas Tamil

தமக்கையே தாயாக!
என் பெயர் அமிஷ். நான்கு நபர்களை கொண்ட ஓர் அழகான குடும்பத்தில் வாழ்ந்து வந்தேன். எட்டு வருடத்திற்கு பிறகு, நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது, எங்கள் வீட்டிற்கு அதிசய குழந்தையாக ஓர் அழகான தம்பி பிறந்தான். ஆனால் கருவில் இருக்கும் போதே அவனது இதயத்தில் சிறு ஓட்டை இருந்தது. தம்பி வளர வளர அது சரி ஆகிவிடும் என்றும், கவலைப்பட வேண்டாம் என்றும் மருத்துவர் சொன்னார். ஆனால் அது சரியானபாடில்லை. அதுவே அவனுக்கு ஓர் போர்களம் ஆனது.
எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு நோய் அவனை வாட்டி வதைத்தது. இதயத்தின் ஓட்டை சரிஆகவும் இல்லை. பெரிய ஓர் அறுவை சிகிச்சைக்கு பிறகு நன்றாக இருந்தான். அந்த வருடத்தில் என் தாய் உயர்கல்வி பயின்றுக் கொண்டிருந்தார்கள். படித்து ஆசிரியை ஆகவேண்டும் என்பது என் தாயின் ஆசை. அப்பாவோ ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே, தம்பியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நானே செய்தேன்.
அன்றிலிருந்து தான் ஆரம்பித்தது, எனக்கே உரித்தான தாய்மையின் குணம். எப்பொழுதும் அவனோடே இருப்பேன், அவனின்று என் உலகம் இல்லை. அவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது முதல் பள்ளிக்குச் அழைத்துச் செல்லுதல், உணவு ஊட்டுதல், ஏன் குளிக்க வைப்பதும் கூட என் வேலைதான். அவனும் என்னை விட்டு எங்கும் செல்ல மாட்டான். எந்த அளவிற்கு அவன் மேல் அன்பு என்றால், அவ்வபோது நான் எனது பள்ளியிலிருந்து அவனுடைய பள்ளிக்கு செல்ல காலதாமதம் ஆகிவிட்டால், என் கண்ணிலிருந்து கண்ணீர் வரும். எட்டு வயதில் ஓர் குழந்தையாக இருக்கவேண்டிய நான், என் தம்பிக்கே தாயாகிவிட்டேன் என்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். இன்று எது செய்தாலும் நாங்கள் இருவரும் ஒன்றாக தான் செய்வோம். அவன் மீது எனக்கும், என் மீது அவனக்கும் உள்ள பாசம் என்றும் வளர்பிறையாக வளர்ந்துக்கொண்டிருக்கிறது.
இந்த ஓர் வாழ்வின் உண்மை, இவருக்கு மட்டும் ஏற்பட்டதல்ல. உலகின் பல்வேறு குழந்தைகள், பிள்ளைப்பருவத்திலே தன்னுடன் பிறந்த தம்பி தங்கைகளுக்கு, தாயாக, தகப்பனாக இருப்பதென்பது நிதர்சன உண்மை. பிள்ளைப்பருவத்தை அனுபவிக்க முடியாமலும், வாய்பில்லாமலும் வாழும் குழந்தைகள் ஏராளம் உண்டு. இன்னும் ஒருசில குழந்தைகள் வீட்டுப் பொறுப்பை சுமந்துக் கொண்டு தங்களின் வாழ்க்கையை முன்னோக்கி பயணிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் இவர்களின் குடும்ப சூழ்நிலையோ அல்லது சமூக சூழ்நிலையோ எந்த ஒரு முடிவையும் கொடுக்காது. இது யாருடைய குற்றம் என்று ஆராய்வதைவிட, இப்படிப்பட்ட சூழல்களில் இன்றும் நம் சமூகம் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வோம். என்னதான் நாம் அறிவியலிலும், தொழில் நுட்பத்திலும்; வளர்ந்தாலும் மனித வாழ்வில் மாறாத, மாற்ற முடியாத இயல்பான வாழ்க்கை முறைகள் இருந்துக்கொண்டுதான் உள்ளன. நாம் ஒரு தனி நபராக என்ன செய்யலாம் என சிந்திப்போம்.
Daily Program
