புதன் பொது மறைக்கல்வி உரை! | திருத்தந்தை பதினான்காம் லியோ | Veritas Tamil
ஜூன் 24, புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார். கோட்பாட்டு அமைப்புவிதித் தொகுப்பு 'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஆவணத்தில், , திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்க ஆவணத்தை பற்றிய சிந்தனைகளை திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார். முதலில் திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.
"உடல் ஒன்று தான்; ஆனால் அதற்கு பல உறுப்புகள் உள்ளன. உடலின் உறுப்புகள் பலவாக இருந்தாலும், அவை அனைத்தும் சேர்ந்து ஒரே உடலாக இருக்கின்றன. அதுபோலவே கிறிஸ்துவும் இருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவின் உடலாக இருக்கிறீர்கள்; ஒவ்வொருவரும் அந்த உடலின் தனித்தனி உறுப்புகளாகஇருக்கிறீர்கள்."
(1 கொரிந்தியர் 12:12, 27)
இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.
அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!
புனித அகுஸ்தீனார், புதிதாக ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு கிறிஸ்துவின் திருவுடலின் மறைபொருளை விளக்கும்போது, புனித பவுலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறார்: “நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் உறுப்புகள்” (1 கொரி 12:27). பின்னர் அவர் கூறுகிறார்: “நீங்கள் பெறுவது உங்கள் சொந்த மறைபொருளே. ‘கிறிஸ்துவின் உடல்’ என்று சொல்லப்படும்போது, நீங்கள் ‘ஆமென்’ என்று பதிலளிக்கிறீர்கள். ஆகவே, உங்கள் ‘ஆமென்’ உண்மையானதாக இருக்க, கிறிஸ்துவின் உடலின் உறுப்புகளாக இருங்கள். நீங்கள் காணும் கிறிஸ்துவின் மறைஉடலாகவே வாழுங்கள்; நீங்கள் வாழும் அந்த உண்மையையே நற்கருணையில் பெற்றுக்கொள்ளுங்கள்.”
இறுதி இராவுணவை நினைவுகூர்ந்த பின்னர், திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்க ஆவணம் திருப்பலியை இதே அகுஸ்தீனாரின் எண்ணங்களோடு விளக்குகிறது. கிறிஸ்தவர்களுக்கு ஆண்டவரின் திருவிருந்தில் பங்கேற்பது என்பது, “இறைவார்த்தையால் உருவாக்கப்படுதல், ஆண்டவரின் திருவுடல் என்னும் உணவு மேசையில் ஊட்டமளிக்கப்படுதல், இறைவனுக்கு நன்றி செலுத்துதல்” என்பதாகும். இறைவார்த்தையாலும் நற்கருணையாலும் கிறிஸ்துவோடு ஒன்றுபடும் நாம், அவரைப் போன்றவர்களாக மாற்றப்படுகிறோம். உயிர்த்தெழுந்த கிறிஸ்துவைத் தலைவராகக் கொண்ட திருஅவை என்னும் அவரது மறையுடலின் உறுப்பினர்களாக நாம் வளர்கிறோம். எனவே, திருப்பலி வரவிருக்கும் இறையாட்சியின் அருளடையாளமாகும். அது விண்ணகத் தாயகத்தை நோக்கிச் செல்லும் நமது பயணத்தின் உணவாகும். “இறைவன் எல்லாவற்றிலும் எல்லாமாய் இருப்பார்” என்ற நாளை நோக்கி அது நம்மை வழிநடத்துகிறது.
திருப்பலியில், குரு மட்டுமல்ல, முழு திருஅவையும் அவரோடு இணைந்து பலியை ஒப்புக்கொடுக்கிறது. இந்த அர்த்தத்தில், திருப்பலி கிறிஸ்தவர்களின் ஆன்மிகப் பலியாகும். அது இறைவனோடும் ஒருவரோடு ஒருவர் ஒன்றிப்பதற்கான பாதையாகும். இதன் மூலம், கிறிஸ்தவர்கள் தங்களையே இறைவனுக்குக் காணிக்கையாக்கவும், நாளுக்கு நாள் இறைவனுடனும் பிறருடனும் ஆழமான ஒற்றுமையில் வளரவும் கற்றுக்கொள்கிறார்கள். திருப்பலி, ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கை முறையைப் பின்பற்ற நம்மை அழைக்கிறது. தன்னையே தாராளமாக அர்ப்பணித்த அவரது வாழ்வு, ஒற்றுமையை உருவாக்கும் சக்தியாக விளங்குகிறது. இன்றைய உலகிலும், குடும்பங்களிலும், சமூகங்களிலும், நம் உள்ளங்களிலும் உருவாகும் பிளவுகளுக்கு எதிரான வலிமையான மருந்தாக அது அமைகிறது.
அன்பிற்குரியவர்களே, திருப்பலியில் பங்கேற்கும்போது நாம் இறைவார்த்தையைக் கேட்கவும், ஆண்டவரின் திருவிருந்தில் பங்கேற்கவும் அழைக்கப்படுகிறோம். இறை வார்த்தை வழிபாடும், நற்கருணை வழிபாடும் திருப்பலியின் இரு பகுதிகள் என்றாலும், அவை பிரிக்க முடியாத ஒரே வழிபாட்டுச் செயலாகும். இறைவார்த்தை என்பது வெறும் அறிவைப் பெறுவதற்கான கருவி அல்ல. அது “உயிருள்ளதும் செயலாற்றுவதுமான” இறைவனின் வார்த்தையாகும். அந்த வார்த்தை நம்மை பாவத்திலிருந்து புதிய வாழ்விற்கு வழிநடத்துகிறது. நற்கருணையும் மறைநூலும் ஒன்றையொன்று விளக்குகின்றன. நற்கருணை மறைநூலைப் புரிந்துகொள்ள உதவுகிறது; மறைநூல் நற்கருணையின் மறைபொருளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம், இறைமக்கள் இறைவார்த்தையின் வளமான செல்வத்தை அதிகமாகப் பெறுவதற்காக மறைநூலின் பொக்கிஷங்களை விரிவாகத் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்கான பலனாக திருவழிபாட்டிற்கான வாசக நூல் (Lectionary) உருவாக்கப்பட்டது. அதில் திருவழிபாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மறைநூல் வாசகங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. திருவழிபாடு பற்றிய கொள்கை விளக்க இரண்டாம் அதிகாரம், திருஅவைத் தந்தையரிடமிருந்து இன்று வரை பாய்ந்து வரும் திருஅவை மரபின் பெரும் நதியை நினைவூட்டுகிறது. அது கூறுகிறது: “நம் மீட்பரான இயேசு கிறிஸ்து, தாம் ஒப்படைக்கப்பட்ட அந்த இரவில், தமது உடலையும் இரத்தத்தையும் நற்கருணை பலியாக நிறுவினார்.” இதன் மூலம், சிலுவைப் பலியை தாம் மீண்டும் வரும்வரை காலம் முழுவதும் நிலைநிறுத்தவும், தமது அன்பு மணவாட்டியான திருஅவைக்கு தமது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் நினைவைக் கையளிக்கவும் விரும்பினார். அது அன்பின் அருளடையாளம், ஒற்றுமையின் அடையாளம், அன்பின் பிணைப்பு, பாஸ்கா விருந்து; அதில் கிறிஸ்து பெறப்படுகிறார், ஆன்மா அருளால் நிரப்பப்படுகிறது, எதிர்கால மகிமையின் உறுதியும் அளிக்கப்படுகிறது.”
அன்பார்ந்த சகோதரர் சகோதரிகளே, இந்த இறை வாழ்வின் ஊற்றிலிருந்து நம்பிக்கையோடு பருகுவோம். நாம் கொண்டாடும் இந்த மறைபொருள் நம்மை மாற்றியமைக்க அனுமதிப்போம். இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.