தனிச்சிறப்பறிந்து விழிப்புடன் செயல்படுக! | அருட்பணி.செ.ரெ.வெனி இளங்குமரன் | Veritas Tamil
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும் (763)
வெற்றி ஆக்குவது எலிகளின் எண்ணிக்கை அல்ல. மாறாக, மனத்திடமும் செயல்திறமும் கொண்டு சீறும் பாம்பின் தனித்தன்மையே வெற்றி ஈட்டும்.
அதைப் போன்றே அறத்தோடும் நேர்மையோடும் இறையாட்சி வலிமையோடும் ஒருவர் இருக்கையில் ஆயிரக்கணக்கானோர் திரண்டெழுந்து எதிர்த்து வந்தாலும் அகத்தில் அறமும் புறத்தில் மறமும் (வீரம்) கொண்ட அவரை ஒன்றும் செய்து விட இயலாது. நாகத்தின் மூச்சு போன்று அவரது வலிமை ஓங்கி நிற்கும்.
புறநானூற்றுப் பாடல் ஒன்று 'எலி போன்றோர் நட்பு', 'புலி போன்றோர் நட்பு' என இருவகை நட்பைப் பற்றி விளக்குகிறது. எலி, வயலில் இருக்கும் வளங்களை எல்லாம் சுரண்டி தன்னல உணர்வோடு பதுக்கி வைக்கும் இயல்புடையது. புலி தன் பசியை ஆற்றுவதற்காக மட்டுமே இரையைத் தேடுகிறது. ''படைமாட்சி' என்னும் (77) அதிகாரத்தில் இடம் பெறும் இக்குறள் எலிப் பகையை எள்ளி நகையாடுகிறது.
குற்றுயிராகக் கிடந்த அந்தப் பாம்பைப் பார்த்துச் சிலர் துெங்கிப் போயினர். சிலர் அதை அப்புறப்படுத்தத் திட்டம் தீட்டினர். செய்தி அறிந்து ஓடி வந்தார் அம் முனிவர். தன் நண்பன் அசியைக் (பாம்பின் பெயர்) கண்டதும் முனிவர் கண்ணீர் விட்டுக் கதறினார்.
"ஏன்டா, அசி என்ன ஆச்சுது?" என்று ஆறுதலாகவும் மனப்பொறுமலோடும் கேட்டார்.
"ஐயா முனிவரே, உங்களைச் சந்திப்பதற்கு முன்னால் நான் ஒரு வன்முறையாளனாகத்தான் இருந்தேன். தவளை, எலி, பறவை, கோழி எனப் பல உயிர்களையும் கொன்றேன். ஓரிரு சிறுவர்கள் கூட உயிரிழந்துள்ளார்கள். நீங்க என்னைச் சந்தித்து என்னிடம் நட்பாய்ப் பழகுனீங்க. முன்னொரு காலத்தில் ஓநாயை மனந் திருப்பிய பிரான்சிஸ் அசிசியாரைப் போன்று எனக்கு நற்செய்தி சொன்னீங்க. அறத்தைப் பற்றி விளக்குனீங்க. அசி என்று பெயரிட்டு அழைத்தீங்க. நானும் உங்கச் சொல்லுக்கு மதிப்பளித்து உங்க அன்புக்கு நன்றியாக மனம் மாறினேன்."
மீண்டும் சிறிது நேரத்திற்குப் பின், பேச்சைத் தொடர்ந்தது. நான் யாருக்கும் தீங்கு செய்யாம மரத்தடியிலும் புதரிலுமாக இருந்தேன். தவளைகள் வந்து நையாண்டி செய்தன. எலிகள் வந்து என்மேல் ஓடியாடி விளையாடின. ஓரிரு எலிகள் என்னைக் கடித்தன. சிறுவர்கள் என்னைக் கல்லால் எறிந்தனர். காயமடைந்த நான் இப்போது சாகும் நிலையிலுள்ளேன்" என்று விளக்கமாக எடுத்துரைத்தது அசி.
முனிவர் கனிவோடு, அதே வேளையில் மிக உறுதியோடு சொன்னார்: "அசி, நீ சாகக் கூடாது, நீ நல்லவன், நீ வாழணும். 'பிறரைக் காயப்படுத்தாதே, கடிக்காதே, கொல்லாதே, பிற உயிர்கள் மேல் இரக்கம் கொள்' என்றுதானே சொன்னேன். யாராவது உன்னைக் காயப்படுத்தினால், உன்னை அடிக்க வந்தால், நீ படம் எடுக்கக் கூடாது என்றோ, மூச்சு விட்டு சீறக்கூடாது என்றோ சொல்லவில்லையே? உன் தனித்தன்மையை நீ வெளிப்படுத்து. உன்னைப் பாதுகாத்துக் கொள்ள உன் தனிச்சிறப்பைப் புலப்படுத்து. ஆனால், பிறர்க்குத் தீங்கு இழைக்காதே என்பதுதானே என் கருத்து" என்று அசியைத் தடவிக் கொடுத்துக் கொண்டே அருகில் அமர்ந்து கொண்டு தாயன்போடு உரையாடினார் முனிவர்.
தெளிவு பெற்றது அசி. புதுத் தெம்போடு புத்துயிர் பெற்றது. கொண்டது. தன் இருப்பிடத்துக்குச் சென்றது. முன்னர் முனிவர் கொண்டு வந்த பாலைக் குடித்தது. விடைபெற்றுக் கல்லெறிந்து விளையாடிய சிறுவர்கள் வந்தார்கள். அசி சீறியது. சிறுவர்கள் ஓடி விட்டனர். தவளைகள் வந்த போது வாயைத் திறந்தது. தவளைகள் அலறிக் கொண்டு ஓடின. எலிகள் நூற்றுக்கணக்கில் வந்தன. தன்னை நோக்கி வந்த எலிகளை நோக்கி மூச்சு விட்டது அசி. அந்த ஒலிக்கு ஈடு கொடுக்க முடியாமல் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என ஓடி மறைந்தன எலிகள், முனிவர் சொல்லித் தந்த அந்த 763-ஆம் திருக்குறளினை நடைமுறையில் கண்டு மகிழ்ந்தது அசி.
அசியைப் போன்று நம் தனிச்சிறப்பை உறுதிப்படுத்திக் நம்மைப் கொள்வோம். பிறர்க்குத் தீங்கு செய்யா வண்ணம் பாதுகாப்போம்.
எல்லாரும் பாதுகாப்போடும் மாண்போடும் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தி வாய்ப்புகளை, வழிவகைகளை உருவாக்குவோம்.
இறையருள்மீது நம்பிக்கை கொண்டு இனிமையாக உறவாடி, ஏசாயா 11-இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள "தீமை செய்வார் எவருமில்லை. கேடு விளைவிப்பார் யாருமில்லை" என்னும் இறையாட்சிக் கனவை நனவாக்குவோம்.