சீடத்துவத்தில் வாழ்வும் சாவும் ஒன்றுதான்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

11 ஜூலை 2025
பொதுக்காலம் 14 ஆம் வாரம் – வெள்ளி
தொடக்க நூல் 46: 1-7, 28-30
மத்தேயு 10: 16-23
சீடத்துவத்தில் வாழ்வும் சாவும் ஒன்றுதான்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில் யாக்கோபு தனது தாத்தா (ஆபிரகாம்) மற்றும் அவரது தந்தை (ஈசாக்கு) ஆகியோருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட நிலத்தை விட்டுச் செல்கிறார். கடவுள் தனது மூதாதையர்களுக்குக் கொடுத்த நாட்டை விட்டு வெளியேறுவது யாக்கோபுக்கு கடினமாக இருந்திருக்க வேண்டும். அவரது மகன் யோசேப்பு தனது உடலை தனது தாயகத்திற்குத் திரும்பக் கொண்டு வருவார் என்றும், தெய்வீகத் திட்டத்தின் ஒரு பகுதியாக இஸ்ரயேல் குடும்பம் எகிப்துக்குச் செல்வதும், அங்கு அவர்கள் ஒரு பெரிய தேசமாக மாறுவதும் அடங்கும் என்றும் கடவுள் அவருக்கு உறுதியளிக்கிறார்.
இவ்வாறு, யாக்கோபும் கிட்டத்தட்ட 70 பேர் கொண்ட அவரது குடும்பத்தினரும் யோசேப்புடன் மீண்டும் ஒன்றிணைந்து தங்கள் விசுவாசப் பயணத்தில் ஒரு புதிய வாழ்வைத் தொடங்க எகிப்துக்குச் செல்கிறார்கள்.
நற்செய்தி.
நற்செய்தியில் இயேசு தன் சீடர்களைப் பணித்தளங்களுக்கு அனுப்புகின்றபொழுது, “ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல் நான் உங்களை அனுப்புகிறேன்” என்று எச்சரித்து, “என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்கிறார்.
சிய்தனைக்கு.
இயேசுவால் பணிக்கு அனுப்பப்படும் திருத்தூதர்கள் பணி வாழ்வில் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சினைகள், எதிர்ப்புகள் ஆகியவற்றை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றார்
ஆம், முதல் வாசகமும், நற்செய்தி வாசகமும் நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்: “நமக்கு முன்பாக ஆபத்துகள், துன்பங்கள் சவால்கள் இருந்தாலும், ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார். ஆதலால், நாம் அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய பணியைச் செய்ய வேண்டும் என்பதாகும். சற்று ஆழமாகச் சிந்தித்தால், இயேசு போலியான வாக்குறுதிகளைத் தம் சீடர்களுக்குக் கொடுக்கவில்லை. ஆசை வார்த்தைகளைச் சொல்லி, மயக்கி அவர்களைப் பணிக்குச் சம்மதிக்க வைக்கவுமில்லை.
சுருங்கச் சொன்னால், அவருடைய சீடர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பதால் ஆபத்துகளையும் பல்வேறு துன்பங்களையும் அனுபவிப்பார்கள் என்கிறார். அவர்கள் அரசர்களால் வேட்டையாடப்படுவார்கள், சமூகத்தால் நிராகரிக்கப்படுவார்கள், அவர்களது குடும்பத்தினரால் ஏளனம் செய்யப்படுவார்கள் என்றெல்லாம் வரவிருக்கும் துன்பங்களை முன் வைத்துப் பணிக்கு அனுப்புகிறார்.
முதல் வாசகத்தில், யாக்கோபு வாழ்ந்த கானான் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டபொழுது, எகிப்திற்கு உணவு வாங்கச் செல்வது குறித்து யாக்கோபு யோசித்துக்கொண்டிருக்கையில், ஆண்டவர் அவருக்குக் கனவில் தோன்றி, “எகிப்திற்குச் செல்ல அஞ்சவேண்டாம். நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன்” என்கிறார்.
நற்செய்தியில், சீடர்கள் என்ன பேச வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று அவர்களைத் திடப்படுத்துகிறார். ஏனெனில் "பேசுபவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் தந்தையின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்." என்ற உறுதியை அளிக்கிறார்.
ஆம், ஆண்டரின் பணியில் நாம் அனைவரும் வெறும் கருவிகள்தான். தூய ஆவியார் நம்மில் இருந்து செயல்படுகிறார் என்பதை நம்பிக்கையோடு ஏற்க வேண்டும். நம்மை திக்கற்றவர்களாக விட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பவர் நம் ஆண்டவர் அல்ல. அதே வேளையில், ‘தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர்’ (மத். 10:38) என்றும் நம்மை எச்சரிக்கிறார்.
ஆண்டவராகிய இயேசு அளித்த வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்க, நம்மை அழைக்கும் கடவுளின் உடனிருப்பை நாம் உணர்ந்திருக்கிறோமா என்பதே இன்றைய கேள்வி.
இறைவேண்டல்.
எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, உம்மையும் உமது வாக்குறுதிகளையும் நம்பும்படி நீர் தொடர்ந்து என்னை கேட்கிறீர். உமது வாக்குறுதியில் முழு நம்பிக்கை வைத்து எனது சீடத்துவ வாழ்வில் முன்னேற என்னை திடப்படுத்துவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
