பிறரிலும் இயேசுவை ஆடையாளம் காண்போம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

22 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 16ஆம் வாரம் – செவ்வாய்
புனித புனித மகதலா மரியா-விழா

இனிமைமிகு பாடல் 3: 1-4a அல்லது 2 கொரி 5: 14-17
யோவான் 20: 1, 11-18


பிறரிலும் இயேசுவை ஆடையாளம் காண்போம்!

 முதல் வாசகம்.
 
இன்று திருஅவையானது புனித மகதலா மரியாவின் விழாவைக் கொண்டாடுகிறது.  இவர் பாலஸ்தீனாவின் கலிலேயாவிலுள்ள மகதலா என்னும் ஊரில் பிறந்ததால்,  இவர் மகதலா மரியா என்று அழைக்கப்படுகிறார்.

இந்த புனித மகதலா மரியா ஆண்டவராகிய இயேசுவைத் தேடுவதையும், அவருடன் நெருக்கமான உறவைப் பேண விரும்புவதையும் நமது வாசகங்கள் முன்வைக்கின்றன. முதல் வாசகத்திற்கான இரண்டு சாத்தியக் கூறுகளில் முதலாவது இனிமைமிகு பாடலில் இருந்து தரப்பட்டுள்ளது, மணமகள் தன் காதலனுக்காக ஏங்குகிறாள், அவள் அவனைத் தேடி வெளியே சென்று, மக்கள் அவனைப் பார்த்திருக்கிறார்களா என்று கேட்கிறாள். முதல் வாசகத்திற்கான மற்றொரு தேர்வான 2 கொரிந்தியருக்கான பவுல் அடிகளின் திருமுக வாசகத்தில் இயேசுவுடனான உறவிலிருந்து வரும் புதுமையை நாம் அறிகிறோம்.
 
நற்செய்தி.

நற்செய்தியில், வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார் என்று யோவான் கூறுகிறார். பின்னர் அவள் ஒரு தோட்டக்காரர் என்று நினைக்கும் ஒரு நபரைச் சந்திக்கிறாள், ஆனால் உண்மையில் அவள் மிகவும் விரும்பும் அன்பான ஆண்டவர் இயேசுதான் அவர் என பின்னர் அறிய வருகிறாள்.

சிந்தனைக்கு.


மகதலா மரியா, இயேசுவால் ஏழு பேய்கள் நீங்கப் பெற்றவர் (லூக் 8:1). இயேசுவின் சிலுவையின் அடியில் நின்றவர். இவருடைய விழாவைக் கொண்டாடும் இந்நாளில் இவருடைய விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்திப்பது சாலச் இறந்தது. 
முதலாவதாக மகதலா மரியா தாம்  பெற்ற நன்மைக்கு நன்றியுள்ளவராக இருந்தார். ஆண்டவர் இயேசு, இவரைப் பற்றியிருந்த ஏழு பேய்களை ஓட்டியதும்,  அதை அப்படியே மறந்துவிட்டு அவர் வழியே சென்றுவிடவில்லை. மாறாக ஆண்டவர் இயேசுவோடு இறுதிவரை நின்றார். 
ஆம், இயேசுவின் இறப்பின் வேளையில் அவரது ஆண் சீடர்களுள் யோவானைத் தவிர மற்ற அனைவரும் ஓடிவிட, சிலுவையடியில் அன்னை மரியாவின் அருகில்   துணிவோடு  இவரும் நின்றார்.  

புதிய ஏற்பாட்டை  புறட்டும்போது, 5 பெண்கள்  மரியா என்ற பெயருக்குரியவர்களாக உள்ளனர். 
1. இயேசுவின் தாய் மரியா.
2. யாக்கோபு மற்றும் யோசேயின் தாய் மரியா. 
3. இலாசர் மற்றும் மார்த்தாவின் சகோதரி மரியா. 
4. கிளயோப்பாவின் மனைவி மரியா.
5. மகதலா ஊரைச் சேர்ந்த மரியா.  

சி்ந்தனைக்கு.

  
இப்புனிதை  இயேசுவை அன்பு செய்வதை மட்டுமல்ல, நமக்கு  நெருக்கமானவர்களையும் எப்படி அன்பு செய்வது என்று கற்றுக்கொடுக்குறார். பல நேரங்களில் நமது கண்களுக்குத் ‘தோட்டக்காரர்’ போல் வெவ்வேறு உருவங்களில் இயேசு காட்சியளித்துக் கொண்டுதான் இருக்கிறார். நமது அகந்தை, ஆனவம், தற்பெருமை போன்ற குணங்களால்  அவரை அவர்களில்  அடையாளம் கொண்பதில்லை. 
மகதலா அவருடைய போதனைகளைக் கேட்டாள், அவருடைய அற்புதங்களைக் கண்டாள், அ இயேசுவின் தாயுடன் சிலுவையின் அடிவாரத்தில் நின்றார், அவருடைய உடலை அடக்கம் செய்ய உதவினார் மற்றும் மறைநூலில்  பதிவு செய்யப்பட்டுள்ளபடி, உயிர்த்தெழுந்த இயேசு தன்னை வெளிப்படுத்திய முதல் பெண்மணியும் இவரே. 
இயேசுவை தேடுவோருக்கு அவர் தன்னை பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவார் என்பதை மறுப்பதற்கில்லை.  மக்தலா மரியாவைப் போன்று அவரைப் பற்றிக்கொள்வோமானால், நம்மைப் பற்றிய அனைத்துத் தீயவையாவும் பறந்துபோகும். இனிமைமிகு பாடல் பகுதியில் வரும் மணமகளைப் போலவும், பாஸ்கா பெருவிழா ஞாயிறு  மகதலேனா மரியா போலவும், உயிர்த்தெழுந்த ஆண்டவரை பலரில் காண முற்பட வேண்டும்.

இறைவேண்டல்.

அன்பு இயேசுவே, ஆண்டவரே, புனித மகதலா மரியாவை எனக்கு நம்பிக்கை வாழ்வுக்கு ஒரு முன்மாதிரியாகத் தந்தமைக்கு உமக்கு   நன்றி கூறுகிறேன். அவரைப் போல நானும்  உம்மை எனது   முழு மனதோடும், முழு இதயத்தோடும், முழு ஆற்றலோடும் அன்பு செய்ய அருள்தாரும். ஆமென்


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452