அன்னை மரியா- நலவாழ்வுக்குப் பரிந்துரைக்கும் தாய்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

8 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 23ஆம் வாரம் – திங்கள்
 புனித  கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை)-விழா

 மீக்கா  5: 2-5a அல்லது உரோ  8: 28-30
மத்தேயு 1: 1-16, 18-23


அன்னை மரியா- நலவாழ்வுக்குப் பரிந்துரைக்கும் தாய்!

 
இன்று திருஅவையானது நமது அன்னையும், பாதுகாவலியுமான புனித மரியாவின்  பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறது. இவ்விழா நாளை ஆரோக்கிய அன்னை விழா என்றும் அழைக்கிறோம். 
 

முதல் வாசகம்.

இறைவாக்கினர் மீக்கா எழுதிய இன்றைய முதல் வாசகத்தில், “எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களில் மிகச் சிறியதாய் இருக்கிறாய். ஆயினும் இஸ்ரேயலை என் சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   

நற்செய்தி.
  
மத்தேயு நற்செய்தியில், வசனங்கள் 1–16 வரையிலான பகுதி, இயேசுவின் தலைமுறை பட்டியலை முன்வைக்கிறது, ஆபிரகாமிலிருந்து தாவீது அரசர் வழியாக மரியாவின் கணவர் யோசேப்பு வரை அவரது வம்சாவளியை மத்தேயு பட்டியலிட்டுள்ளதை காண்கிறோம்.  இது இயேசுவின் அரச மற்றும் மூதாதையர் பாரம்பரியத்தின் மூலம் மெசியா வருகைக்கான இறைவாக்கு  நிறைவேற்றத்தை வலியுறுத்துகிறது. 

 
வசனங்கள் 18–23 இயேசுவின் பிறப்பின் சூழ்நிலைகளை விவரிக்கின்றன. யோசேப்புடன் வாழ்வதற்கு முன்பு மரியா தூய ஆவியின் மூலம் கருவுற்றிருப்பது தெரியவருகிறது.  நீதிமான் என்று விவரிக்கப்படும் யோசேப்பு, மண ஒப்பந்தமான மரியாவை அமைதியாக விவாகரத்து செய்யத் திட்டமிடுகிறார். ஆனால் வானதூதர் ஒருவர் கனவில் தோன்றி மரியாவைத் தனது மனைவியாக ஏற்க அஞ்ச வேண்டாம்    என்று அறிவுறுத்துகிறார். ஏனென்றால் பிறக்கும் குந்தைதான் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்டெடுப்பார் என்றும், அது, இறைவாக்கான,  ``இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்'' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்ததன் நிறைவேற்றம் என்பதை லூக்கா விவரிக்கிறார்.


சிந்தனைக்கு.


புனித கன்னி மரியாவின் பிறப்பு விழாவைக் கத்தோலிக்கத்  திருஅவை, இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன்  ஆழமாக இணைக்கப்பட்ட ஒரு விழாவாகக்   கொண்டாடுகிறது. அன்னை மரியாவின் பிறப்பு என்பதற்கான குறிப்புகள் திருவிவிலியத்தில் இல்லை என்றபோதிலும், திருவையின் மரபு இவ்விழாவை நாம் கொண்டாட வழிவகுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 8 ஆம் திகதி அன்னை மரியாவின் அமல உற்பவி விழாவிலிருந்து சரியாக ஒன்பது மாதங்கள் கணக்கிடப்பட்டு செப்டம்பர் 8 ஆம் திகதி அவருடை பிறப்புவிழா கொண்டாடப்படுகிறது.

மரியா கருவில் தோன்றும் போதே பாவக்கறையின்றி தோன்றினார்.  உலக மீட்பரும், ஆண்டவருமான இயேசு ஒரு பெண்ணின் வயிற்றில் உதிக்கவேண்டும் என்றால், அவள் பாவமின்றி தூயராக இருக்கவேண்டும்.   மரியாவின்  இந்த ‘அமல உற்பவம்’ கடவுள் தன்னுடைய மகன் இயேசுவின் பொருட்டு மரியாவுக்கு அளித்த  மிகப் பெரிய கொடையாகும்.  

இன்று நமக்கு அளிக்கப்பட்டுள்ள மற்றொரு முதல் வாசகமான உரோமையருக்குப் புனித பவுல் எழுதிய வாசகத்தில் ‘தாம் முன்குறித்து வைத்தோரை கடவுள் அழைத்திருக்கிறார்; தாம் அழைத்தோரை தமக்கு ஏற்புடையோராக்கி இருக்கிறார்; தமக்கு ஏற்புடையோரைத் தம் மாட்சியில் பங்கு பெறச் செய்தார்” என்று குறிப்பிட்டுள்ளார். கடவுள் தமது மீட்புத்திட்டத்தில் பங்குபெற  ஒரு யூதப் பெண்ணான  மரியாவைத் தேர்ந்தெடுத்தார்.  ஆகவே, மரியாவின் பிறப்பு திட்டமிடப்பட்ட பிறப்பு. மரியா இச்செய்தியை அறிந்திருந்தும், அவர் தலைகனம் அற்றவராக, எளிய பெண்ணாகவே இறுதிவரை வாழ்ந்தார். தன்னை கடவுளின் அடிமையாக வெளிப்படுத்திக் கொண்டார்.


மரியா கலிலேயாவில் நாசரேத்து எனும் ஊரில் வாழ்ந்தாலும், மீக்கா இறைவாக்கினரின் முன்னறிவிப்பான, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமில், இயேசு பிறக்க, மரியாவும் யோசேப்பும் மக்கள் கணக்கெடுப்புக்கு யூதேயா வந்திருந்தபோது அங்குள்ள பெத்லகேமில் இயேசுவை பெற்றெடுத்தார்.  இவ்வாறாக மீக்கா இறைவாக்கனரின் முன்ன்றிவிப்பு நிறைவேறியது.

பின்னர், தமிழ் நாட்டில், தஞ்சாவூர் மாநிலத்தைச் சேர்ந்த வேளாகங்கண்ணியில் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பேராலயத்தின்  திருவிழாவும், இதர நகரங்களிலும் உள்ள ஆரோக்கிய அன்னை பெயர் கொண்ட ஆயங்களிலும்  அன்னை மரியாவின் பிறப்பு விழாவன்று ‘ஆரோக்கிய அன்னை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னை நமது நலவாழ்வுக்குப் பரிந்துரைக்கும் தாய். 

நமது புனித அன்னையின் பிறந்தநாளை நாம் கொண்டாடும் வேளையில், கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள மகத்தான ஆசீர்வாதங்களைப் பற்றி சிந்திக்க   இந்நாளை நல்லதொரு வாய்ப்பாக ஏற்க வேண்டும். கடவுள் நமக்கச் செய்த அனைத்திற்கும் நன்றி கடன் பட்டுள்ளோம் என்பதை நினைத்து, ஆரோக்கிய அன்னை மரியாவுடன் இணைந்து  கடவுளுக்கு நன்றி கூறுவோம். 


இறைவேண்டல்.


அன்பின் ஊற்றாகிய என் ஆண்டவரே,  அன்னை மரியாவின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் நான், அவரை எனக்கு  ஆரோக்கிய அன்னையாகவும் அளித்தவமைக்கு உமக்கு நின்றி கூறுகிறேன். ஆமென்.  

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452