மனமுவந்து உணவு கொடுதோர், உயிர் கொடுத்தோர் ஆவர்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

 4 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 18 ஆம் வாரம் –திங்கள்
எண்ணிக்கை 11: 4b-15
மத்தேயு 14: 13-21
 
 
மனமுவந்து உணவு கொடுதோர், உயிர் கொடுத்தோர் ஆவர்!
 
முதல் வாசகம்.

 முதல் வாசகத்தின் இப்பகுதி இரு தலைப்புகளுக்குள் அடங்கியுள்ளது எனலாம். முதலில் இறைச்சிக்காக மக்களின் அழுகை மற்றும் எழுபது தலைவர்களைத் தெரிந்து அவர்களுக்கு  ஆவியைப் பகரிந்தளித்தல் என்பன அவை. எண்ணாகமத்தின் இந்தக் கணக்கு விடுதலைப்பயணத்தில்  வேறுபட்டாலும், மக்கள் இன்னும் தங்கள் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி புகார் செய்கிறார்கள். அவர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தபோது சாப்பிட்ட உணவுக்காக ஏங்குகிறார்கள். கடவுள் மன்னாவை வழங்குவது மட்டுமல்லாமல், அவர்கள் தாழ்மையுடன் ஆண்டவருக்கு முன்பாக வந்து கடவுளின் பராமரிப்பைத் தேடினால், கடவுள் அவர்களின் எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்வார் என்பதை அவர்கள் முழுமையாகக் கற்றுக்கொள்ளவில்லை  

மேலும், இஸ்ரயேல் மக்கள் தாங்கள் உண்பதற்கு இறைச்சி இல்லையே... அதனால் தங்களுடைய உடல் வலிமை குன்றிப் போய்விட்டதே... என்று ஆண்டவர்க்கு எதிராக முறையிடுகின்றார்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில், இயேசு ஒரு வெறிச்சோடிய பகுதியில் கூட்டத்தினருக்கு மறையுரை ஆற்றுகிறார் போதனையைக் கேட்க வந்த மக்களை, “ஊர்களுக்குச் சென்று தேவையான உணவை வாங்கிக்கொள்ள அனுப்பிவிடும்” என்று அவரது சீடர்கள் சொல்கின்றபொழுது, இயேசு அவர்களிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்கிறார்.  இரக்கத்துடன், அவர் சில அப்பங்களையும் ஒரு சில மீன்களையும் பெருக்கி 5000 க்கும் மேற்பட்ட கூட்டத்திற்கு உணவளிக்கிறார். மேலும் மிச்சம் நிறைய இருந்ததென மத்தேயு குறிப்பிடுகிறார். 

சிந்தனைக்கு.

இன்றைய வாசெங்களைப் பற்றி சிந்திக்கும்போது, கடவுள் நம் மீது வைத்திருக்கும் அன்பான அக்கறையாலும், நம் அன்றாட அனுபவங்களில் கடவுள் எவ்வளவு அன்பு செலுத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்ள நாம் தவறுக்கிறோம் என்பது புலப்படுக்கிறது.   

இந்த ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது நான்கு நற்செய்திகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரே வல்ல செயலாகும்.  ஐயாயிரம் பேருக்கு உணவளித்தது, இயேசு இந்த அற்புதத்தைச் செய்வதற்கு பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு விடுதலைப் பயணத்தின் போது, பாலைநில உணவளிப்பு  நிகழ்வை வலுவாக எதிரொலிக்கிறது.  

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இயேசு மனித தேவையை எல்லாவற்றிற்கும் மேலாக வைக்கிறார். அவரது இரக்கம், உண்மையிலேயே தேவையில் உள்ள அனைவரின் மீதும் கடவுளின் அன்பு மற்றும் அக்கறையின் ஆழத்தைக் காட்டுகிறது. கடவுளின் வார்த்தையைப் பகிர்வதன்  மூலம் அவர் கடவுளின் மக்களுக்கு ஆன்மீக ரீதியில் உணவளிக்கிறார்.

ஆண்டவரிகாய இயேசு இரக்கத்தோடு நம்மைக் கவனித்துக்கொள்வார்  என்று நாம் நம்பினால், கடவுள் நமக்குத் தேவையானதை மட்டுமல்ல, இன்னும் அதிகமாகவும் வழங்குவார் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்.  முதல் வாசகத்தில் பாலைநிலத்தில் மன்னாவை உண்டு வந்த மக்கள், அதன் அருமை புரியாமல், “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்?” என்கிறார்கள். நற்செய்தயில் இயேசு சீடர்ளிடம், “நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்” என்கிறார். நம்மைத் தேடி வந்த, நம்மை நம்பி வந்தவர்களுக்கு நாம்தானே உணவு கொடுக்கவேண்டும்! இதை நாம் தட்டிக்கழிக்க இயலாது. இல்லை என்பார் இருக்கையுல், இருப்பவர்கள் இல்லை என்றால்...அது அநீதி.

நம்மிடம் உள்ளதை பொதுவான நன்மைக்கு பங்களிக்கும்போது, அது தர்ம செயலாகுகிறது.  செய்த தர்மம் தலை காக்கும் என்பர்.   நம்மிடம் மிகக் குறைவாகவே இருப்பதாக நாம் நினைக்கிறோம், தர்மம் செய்ய தயங்குகிறோம்.  ஆனால் நம்மிடம் உள்ளதைக் கொடுக்கத் தயாராக இருந்தால், கடவுள் அதைப் பெருக்குவார். அவரால் ஆகாதது ஒன்றுமில்லை. 

இறைவேண்டல். 

ஆண்டவரே, உமது தூய ஆவியாரின்  தொடர்ச்சியான பகிர்வின் வாயிலாக  நீர் எனக்கு அருளியதை அடுத்திருப்பவரோடு பகிர்ந்து வாழும் கொடையை எனக்கு அஉள்வீராக.  ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452