மனமாறுவோரை ‘சாபம்’ தீண்டாது! | ஆர்கே. சாமி | Veritas Tamil

15 ஜூலை 2025                                                                                                                  
பொதுக்காலம் 15 ஆம் வாரம் – செவ்வாய்
விடுதலை பயணம 2: 1-15
மத்தேயு  11: 20-24
 
 
 மனமாறுவோரை ‘சாபம்’ தீண்டாது!

முதல் வாசகம்.

 இன்றைய முதல் வாசகம், மோசேயின் பிறப்பு, வளர்ப்பு, பார்வோனின் மகள் அவரைத் தத்தெடுத்தது, பின்னர் ஓர் இஸ்ரயேலருக்கு துன்பம் விளைவித்த   ஒரு எகிப்தியனை அவர் கொன்றது ஆகியவற்றை விவரிக்கிறது. 

யாக்கோபின் வழிமரபினர் எகிப்தில்  எண்ணிக்கையில் பெருகியதால் பிறக்கும் எந்த ஆண் குழந்தையும் கொல்லப்பட வேண்டும் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது.  ஒரு லேவி குலத்தைச் சேர்ந்த இஸ்ரவேலரின் தாய் தனது ஆண் குழந்தையைக்  காப்பாற்ற அவள்  பிரம்பு கூடையில் குழந்தையை வைத்து நைல் நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில்   மறைத்து  வைக்கிறாள். பின்னர் அங்கு நீராட வந்த  இளவரசி  குழந்தையை மீட்டு அதன்  உயிரை காப்பாற்றுகிறாள். தொடர்ந்து, அக்குழந்தையின் தாயே  அதற்குப் பாலூட்டி வளர்க்கும்  பொறுப்பை ஏற்கிறாள்.

‘நீரிலிருந்து நான் இவனை எடுத்தேன்’ என்று கூறி அவனுக்கு ‘மோசே’ என்று இளவரசி  பெயரிட்டாள். தொடந்து,   மோசே அரச அரண்மனையில் வளர்க்கப்பட்டு, அரச குடும்ப உறுப்பினராக வாழ்க்கையை அனுபவிக்கிறார்.

காலவோட்டத்தில், அவர் தனது பெற்றோர் எபிரேயர்கள் (இஸ்ரவேலர்) என்பதை உணர்ந்தார். அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் (ஒருவேளை அவருக்கு 40 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில்), ஒரு எகிப்தியரால் ஒரு இஸ்ரயளலர் துன்புறுத்தப்படுவதை  அவர் நேரில் காண்கிறார். அவர் கோபப்பட்டு, அந்த எகிப்தியனைக் கொன்றுவிடுகிறார், அவரது செயலைப் பற்றிய செய்தி இஸ்ரவேயேலர்களிடையே மட்டுமல்ல, எகிப்தியர்களிடையேயும் பரவுகிறது. இதன் விளைவாக மோசே எகிப்தை விட்டு மீதியானுக்குச் செல்கிறார்.
  
நற்செய்தி.

நற்செய்தியில், கலிலேயா கடலைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு இயேசு செய்த வல்ல செயல்கள் இயேசு விரும்பியதை விட குறைவான பலனளித்ததாகத் தெரிகிறது. நம்பிக்கையின்மைக்காக, கோராசின், பெத்சாயிதா மற்றும் கப்பர்நாகூம் மக்கள், ஏற்கனவே சபிக்கப்பட்ட தீர், சீதோன் மற்றும் சோதோம் (பாவ வழிகளுக்குப் பெயர் பெற்ற நகரங்கள்) ஆகிய புறமத நகரங்களை விட நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ளாததற்கு அதிக பொறுப்பேற்கப்படுவார்கள் என்று இயேசு எச்சரிக்கிறார். 
 
சிந்தனைக்கு.

இன்றைய முதல்வாசகத்தில் எபிரேய (இஸ்ரயேல்) ஆண் குழந்தையான் மோசைவை,   பார்வோன் மகள் அவர்மீது இரக்கம்கொண்டு அவரை வளர்க்கின்றார். தன் தந்தை எபிரேயக் குழந்தைகளைக் கொன்றுவிட தீவிரமாகச் செயல்பட்டபோதும், மகள் அவர்கள்மீது இரக்கம் கொண்டாள். இவ்வாறு கடவுளின் மீட்புத் திட்டத்திற்கு அவளும் கைக்கொடுத்தாள்.

புதிதாக நிறுவப்பட்ட எகிப்திய வம்சத்தால் இஸ்ரவேலர்கள் அடிமைப்படுத்தப்பட்டதால், இஸ்ரவேலர்களின் ஆண் குழந்தைகள் கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்ட பிறகு ஒரு தலைவர் எழுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாகத் தோன்றியது. ஆனால், கடவுள் அதை நிறைவேற்றினார். அவரது வழிமுறை நிகரற்றதாக இருந்ததை முதல் வாசகம் நமக்கு உணர்த்தியது,

நற்செய்தியில் இயேசு கொராசின் மற்றும் பெத்சாய்தா நகரங்களில் செய்த வல்ல செயல்களை விடவும் அதிகமான வல்லசெயல்களை கப்பர்நாகுமில் செய்திருக்கவேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் மத்தேயு நற்செய்தி 8,9 ஆகிய இரு அதிகாரங்களில் இயேசு செய்ததாக இடம்பெறும் எட்டு வல்ல செயல்களில் நான்கு வல்லசெயல்களை கப்பர்நாகுமில்தான் செய்தார் என்று அறிகிறோம். அப்படியும் அவர்கள் மனம்திருந்தாமல் இருந்ததால்தான் இயேசு அந்நகரைப் பார்த்து, “நீ பாதாளம் வரைத்  தாழத்தப்படுவாய்” என்கின்றார் இயேசு. 

நற்செய்தி நமக்குப் பெரும் சவாலாக உள்ளது. ஆண்டவராகிய இயேசுவை அவரது போதனைகள் மற்றும் பணியின் மூலம் நாம் அறிந்திருப்பதால், அவரை நம்புவதற்கு நமக்கு வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.  அதிகமாகக் கொடுக்கப்பட்டவர்களிடம்தான், அதிகமாக எதிர்பார்க்கப்படும் அல்லவா?  இன்று இறைவார்த்தையை வாசித்து, அறிந்துணர நல்ல வாய்ப்புகள் நமக்கு அளிக்கப்படுகின்றன, ஆனாலும்  இன்றும் நாம் வாயப்புக்களைப் புறக்கணிக்கிறோம். ‘நேரமே இல்லை’ என்பது நமக்கு இயல்பாகிவிட்டது. நமது கவனத்தை நமது பொருளாதார வளர்ச்சியின்மேல் மட்டும் கொண்டிருக்கிறோம்.

தம் போதனைகளைக் கேட்டும், வல்ல செயல்களைக் கண்டும் மனம் மாறாத நகரங்களை இயேசு 'ஐயோ! கேடு!' (நாசமா போவீர்கள்) என்று  சாபமிட்டதை அறிந்தோம் அவர் சாபமிட்ட நகர்களும் அவற்றின் மக்களும் அழிந்தனர்.   இயேசுவின் சாபம் நம்மேலும்  விழக்கூடும். இது நமக்கும் ஓர் எச்சரிக்கைதான். கண் கெட்டபின் சூரிய வணக்கத்தால் எப்பயனுமில்லை.

இறைவேண்டல் 

ஆண்டவரே, உமது தூய ஆவியானவர்,  நான் எப்போதும் நம்பிக்கை எனும் கொடையால் உமது அரசுக்கானப் பணியில் ஈடுபட வழிநடத்துவாராக. ஆமென்.
  
      
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452