சொல்லாலும் செயாலும் கூடியதே சீடத்துவம்! | ஆர்கே. சாமி | Veritas Tamil

13 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 23ஆம் வாரம் – சனி
 
1 திமொத்தேயு  1: 15-17
லூக்கா  6: 43-49


சொல்லாலும் செயாலும் கூடியதே சீடத்துவம்!


முதல் வாசகம்.

இவ்வாசக்தில், இயேசுவின் சீடர்களைத் துன்புறுத்தியதால் தான் பாவிகளில் முதன்மையானவராக இருந்ததை புனித பவுல் விவரிக்கிறார், ஆனால் இப்போது அவர் உண்மைக்கு, உயிர்த்தெழுந்த ஆண்டவருக்குச் சாட்சியம் பகரும், நற்செய்தியாளராக மாறிவிட்டார் என்பதைத் பவுல் தெளிவுப்படுத்தி திமொத்தேயவுக்கு எழுதுகிறார். 

இயேசுவின் தொடக்கக்கால சீடர்களை, நற்செய்தி பணியாளர்களைத் தீவிரமாக எதிர்த்தவரும் செய்பட்டவர்களில் ஒருவரான புனித பவுல், இயேசுவுடனும் சீடர்களுடனும் நெருங்கிய  உறவை மிகவும் வியத்தகு முறையில் கொண்டிருப்பதை மீண்டும் ஒருமுறை தீமோத்தேயுவுடன் பகிர்ந்து கொள்கிறார்,

அவர் கடவுளைப் புகழ்கிறார், ஏனென்றால் கடவுள் ஒரு நபரின் இதயத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும், வழிதவறிய பாவிகளுக்கு அவரால்  புதிய வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க  முடியும் என்பதற்கு தன்னையே ஓர் எடுத்துக்காட்டாக  ஓர் ஆயராக நியமிக்கப்படிருந்த திமொத்தேயுவுக்குத் தெரியப்படுத்துகிறார். 

நறசெய்தி.
  
இன்றைய நற்செய்தியை இயேசு தொடங்குகையில், ஒரு நல்ல மரம் கெட்ட கனிகளைத் தராது, கெட்ட மரம் நல்ல கனிகளைத் தராது என்று கூறுகிறார். இயேசுவின் மற்றொரு கூற்றும் இந்தப் பகுதியை எதிரொலிக்கிறது: கனிகளைக்கொண்டே மரங்கள் அறியப்படுகின்றன என்பதாகும்.  ஓர்  உண்மையான சீடன் இயேசு  சொல்பவற்றைச் செய்யாது அவரை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என   கூக்குரலிடுவதை விட அதிகமாகச் செய்ய வேண்டும் என்று கூறுவதன் மூலம் இயேசு உண்மை சீடத்துவத்தின் தன்மையை விவரிக்கிறார்.  இதன்வழி, வார்த்தைகள் போதாது. ஒருவரின் செயல்கள் ஒருவர் நம்புவதைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற படிப்பினையை முன்வைக்கிறார்.


சிந்தனைக்கு.
ஒரு கெட்ட மரம் ஒரு நல்ல மரமாக மாறி பல மடங்கு கனிதரக்கூடும்.  ஆனால், அது அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, மாறாக கடவுள் தலையிட்டு மன்னிப்பு மற்றும் இரக்கம் காட்டுவதன் மூலம் இது நிகழக்கூடும். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறினதைப் பற்றி நான் சிந்திக்கும்போது, ஒரு நபரின் இறைவேண்டலுக்கும் அவரது செயலுக்குமிடையிலான உறவைப் பற்றி அவர் பேசுகிறார் என்பதை  உணர முடிகிறது.  
 நம் வாழ்க்கையில்,  தெய்வீகக் கண்ணோட்டத்தில் ஆன்மீக பலனை நாம் பார்க்க வேண்டும்.  இன்று, நமது வாழ்க்கை ஆன்மீகக் கனிகளைத் தரும் ஒரு மரத்தைப் போல இருக்கிறதா என்பது  பற்றி சிந்திக்க அழைக்கப்படுகிறோம். ஒருவரின் செயல்கள்தான் (கனிகள்) இதயத்தில் உள்ளதை வெளிப்படுத்துகின்றன என்பதே இதன் பொருளாக உள்ளது. உள்ளத்தில் இருப்பது நல்லதாக இருந்தால், நல்ல செயல்கள் இயல்பாகவே வரும்; இதயம் ‘கெட்டுப்போனால்’, கெட்ட செயல்கள்தானே வெளிபடுத்தப்படும். சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வெளிரும்!

தொடர்ந்து, நற்செய்தியின் இரண்டாம் பிரிவில், இயேசு மற்றொரு முக்கிய விடயத்தை பகிர்கறார்.  தம்முடைய வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடப்பவரை, ஆழமாகத் தோண்டி, பாறையின் மேல் அடித்தளமிட்டு வீட்டைக் கட்டும் ஒருவருக்கு ஒப்பிடுகிறார். வெள்ளம் வரும்போது, வீடு உறுதியாக நிற்கும் என்கிறார். 

ஆம், இயேசுவின் போதனைகள், அன்பு, உண்மை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் நமது வாழ்க்கையைக் கட்டியெழுப்பத்   துன்பங்கள், சோதனைகள்,  வரும்போது (அவை வரும்), வலுவான அடித்தளங்களைக் கொண்டவர்கள் எப்படியும் சமாளித்துக் கொள்வார்கள், மற்றவர்கள் தடுமாறவோ அல்லது சரிந்து போகவோ கூடும். 

ஆகவே, ஒவ்வொரு சீடரும் (கிறிஸ்தவரும்)  தன்னைத்தானே  கேட்க வேண்டியது இதுதான்: நான் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்பதோடு நின்று விடுகிறேனா?  அல்லது அவற்றைக் கடைப்பிடித்து  வாழ்கிறேனா? என்னுடைய வாழ்க்கையின் அடித்தளம   எப்படி இருக்கிறது? நான் "நல்ல கனிகளை" உற்பத்தி செய்கிறேனா? நான் எப்படிப்பட்ட மரமாக மாறியிள்ளேன்?

மேற்கண்ட இக்கேள்விகள் எளிதானவைகளாகத் தோன்றக்கூடும். உண்மையில் அவை சவாலுக்குரியவை. முதல் வாசகத்தில், பவுல் அடிகள் கடவுளால் ஒரு நபரின் இதயத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும், கடவுள்  மிகவும் வழிதவறிய பாவிகளுக்கு புதிய வாழ்க்கையை எப்படி  ஏற்படுத்திக் கொடுக்க  முடியும் என்பதற்கும் தன்னையே ஓர் எடுத்துக்காட்டாக  குறிப்பிடுகிறார். இதற்கு அடிப்படை காரணம் அவரது சொல்லும் செயலும் இணைந்திருந்தன. அவர் ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று முணுமுணுத்துக்கொண்டு வீட்டில் முடங்கிக்கிடக்கவில்லை.   நற்செய்தி அறிவிப்புப்பணியில் தீவிரமாகச் செயல்பட்டார். எனவே, தன்னையே ஓர் எடுத்துக்காட்டாக வெளிப்படுத்துகிறார். அவரது பணியில் பத்தில் ஒரு பாகமாவது நம்மில் இருந்தால் நாமும் இயேசுக்குரியவராகக்கூடும் என்பதை நினைவில் கொள்வோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, நான் நல்ல பலனைத் தரத் தவறிய காலங்களுக்காக, உமது மன்னிப்பையும் இரக்கத்தையும் நாடுகிறேன். உமது தூய ஆவியின் மூலம் என்னை  தொடர்ந்து திடப்படுத்துவீராக. ஆமென்.
 
 
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452