பிறர் அன்பு சீடத்துதவத்தின் பண்பு! | ஆர்கே. சாமி | Veritas Tamil

11 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 23ஆம் வாரம் – வியாழன்
 
கொலோசையர்  3: 12-17
லூக்கா  6: 27-38

 
பிறர் அன்பு சீடத்துதவத்தின் பண்பு!

முதல் வாசகம்.
இன்றைய  முதல் வாசகமானது, நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக அமைகிறது. திருமுழுக்கில் பெற்ற தூய்மையைப் பேணி காத்தல்.  பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள் என்று கொலோசையரை பவுல் அடிகள் வேண்டுகிறார். இப்பண்புகளை ஆடையாக அணிந்த கிறிஸ்தவ சமூகமானது, அன்பை வெளிப்படுத்தும் சமூகமாகத் திகழவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.  மக்கள் நம்மைப் பார்க்கும்போது முதலில் பார்க்க வேண்டியது கிறிஸ்தவரில் நிலவும் அன்புதான் என்கிறார்.  

தொடர்ந்து, கிறிஸ்து அருளும் அமைதி கொலோசையர் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! என்றும்,  இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள்’ என்றும்  குறிப்பிட்டு எழுதுகிறார்.  மற்றவர்களோடு கிறிஸ்தவர்கள் கொள்ளும் நன்னடத்தை  கடவுள் அவர்களுக்கு அளித்த நல்லெண்ணத்திற்கு ஒரு சான்றாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார். 


நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் பழைய உடன்படிக்கையின் விதிமுறைகளை அன்பின் அடிப்படையில் நிறைவு செய்கிறார்.  அதாவது மற்றவர்களைக் கண்ணுக்குக் கண் என்ற முறையில் நடத்த வேண்டும் என்று சட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.  ஆனால் தங்கள் எதிரிகளை வெறுப்புடனும் ஏளனத்துடனும் நடத்த வேண்டும் என்பதல்ல, மாறாக   "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்" மீது கடவுள் காட்டிய இரக்கம், அக்கறை மற்றும் அன்பைப் பின்பற்ற இயேசு தம் சீடர்களை வலியுறுத்துகிறார். 

இயேசுவின் வழிகாட்டுதல்களின்படி, நாம் கேட்கப்படாமலேயே கொடுக்க வேண்டும், நம்மிடம் கேட்கப்படுவதை விட அதிகமாக வழங்க வேண்டும், புண்படுத்தலை எண்ணாமல் மன்னிக்க வேண்டும்,   நட்டத்தை  எண்ணாமல் அன்பு செய்ய வேண்டும் என்று புதியதொரு போதனையை முன்வைக்கிறார். ஏனெனில், கடவுள் நன்றிகெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.

நிறைவாக,  ‘வானக தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ என்ற ஆழந்த போதனையை வலியுறுத்துவதோடு,  நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும் என்ற படிப்பினையை சீடர்களுக்கு முன்வைக்கிறார்.


சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களை ஒருமித்தே சிந்திக்கும்போது, இரு அம்சங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை நான் உணர்கிறேன். முதலாவது கடவுளின் இரக்கமும் அன்பும். கடவுள் தம் இரக்கத்தின் நிமித்தம் மக்களுக்கு பல கொடைகளை வழங்குகிறார்.  

அடுத்து, நாம் பெற்றுக்கொண்ட   கொடைகளுக்குகேற்ப நாம் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று அவர்  விரும்புகிறார்.  இந்த இரு அம்சங்களும்தான் நம்மை இயேசுவின் சிறந்த சீடர்களாகவும் இறைமக்களாகவும் புறவினத்தாரிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுபவையாக உள்ளன. 

உணமையில், கிறிஸ்துவ வாழ்வில்  பிறருக்கு அன்பு பணி  என்பது நமது மனப்பான்மையாக இருக்க வேண்டும் - நம்மைப் பற்றி குறைவாக சிந்தித்து, பிறர் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது இன்றியமையாதப் பண்பாகும். பிறருக்கு உதவி செய்வதானது  எள்ளளவும் சுயநலத்திற்கு அல்லாமல், மற்றவர்களின் நலன் பேணி செய்யப்பட வேண்டும் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.

நம்மிடம் கருணை காட்டுபவர்களை அன்பு செய்வது எளிது. ஆனால் நம் அன்பு அனைவருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். சில சமயங்களில் நாம் மற்றவர்கள் மீது காட்டும் அன்பானது,  அவர்கள் நமக்கு எதிராகச் செய்யும் அநீதிகளைச் சுதந்திரமாக ஏற்றுக்கொள்வதில் உள்ளது. பொறுத்தார் பூமி ஆள்ளவார். அன்பு அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும் என்பது பவுல் அடிகளின் கூற்று. எனவேதான், முதல் வாசகத்தில் பவுல் அடிகள், பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை ஆகிய பண்புகளால் உங்களை அணிசெய்யுங்கள் என்றார்.

நிறைவாக, அன்பு செலுத்துபவரே என் சீடர்: நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ (யோவான் 13:35) என்பது இயேசு நமக்கு விட்டுச் சென்ற நற்செய்தி. நாம் மிருகம் பாதி, மனிதர் பாதி என்ற கூற்றுக்கு உட்பட்டவர்கள் அல்ல. மாறாக என்றும் எப்போதும் அன்பாக உள்ள கடவுளின் மக்களாவோம். இங்கே, மிருகத்தன்மைக்கு இடமேயில்லை. பிறர் அன்பை மறப்பவர்தான் கடவுளைத் தேடி கோயில் கோயிலாக அரைவர். 

ஆதலால், அன்பு பணி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றால் போதாது அதனை செயல் வடிவமாக்கிட முயல்வோம். இயேசுவின் சீடத்துவம் வளம்பெறும், உலகம் நம்மால் ஈடேற்றம் காணும்.
.

இறைவேண்டல். 

ஆண்டவரே, உமது தூய ஆவியினால் நீர் என்னை அருள்பொழிவு செய்துள்ளீர் என்றுணரும் நான்,  உமது அன்பைப் பகிரும் தூதுவராக  இருக்க ஞானம், அறிவு மற்றும் திடம் பெற அருள்புரிவீராக. ஆமென்.

  


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452