ரோசா செடி... | Veritas Tamil

ரோசா செடி...
சுரேஷ் என்னும் ஒரு நபர், தன் மனைவிக்கு அதிகம் பிடிக்கும் என்பதற்காக ஓர் அழகான மஞ்சள் நிற ரோசா செடியும், மல்லிகை செடியும் தன் வீட்டில், ஒரு பூந்தொட்டியில் வளர்த்தார். செடி பெரிதாக பெரிதாக அவருக்கு மிகுந்த கவலை ஏற்பட்டது. நகர வாழ்க்கையில் நடப்பதற்கே மண் இல்லாத போது, எப்படி இந்த செடியின் உயிரை காப்பது என்று. எனவே தன் அக்காவின் வீட்டிற்கு எடுத்துச் சென்று, அந்த செடிகளை பேணி பாதுகாக்க கேட்டுக்கொண்டார். அவர் அக்காவும் அந்த செடியை வாங்கி தன் வீட்டில் உள்ள தோட்டத்தில் நட்டு வளர்த்தாள். சரேஷ் அவ்வபோது செடியின் வளர்ச்சியைக் குறித்து தன் அக்காவிடம் கேட்டு தெரிந்து கொள்வான். அப்போது தான் புரிந்தது, அக்காவிற்கு தன் தம்பி அந்த செடியின் மீது வைத்த பாசமும, அவரின் மனைவிமீது கொண்ட அன்பும்.
சில மாதங்கள் கழித்து அந்த ரோசா செடியில் ஓர் அழகான மஞ்சள் நிற பூ பூத்தது. உடனே அக்கா அந்த பூவை படம் பிடித்து தன் தம்பிக்கு அனுப்பினாள். தம்பிக்கோ எல்லையில்லா ஆனந்தம். அதை தன் முகநூல் மற்றும் பலனம் (whatsapp) போன்ற தகவல் தொடர்பு சாதனங்களில் அடையாள சின்னமாக வைத்திருந்தார்.
இயற்கையோடு இயைந்து வாழ் என்றார் திருவள்ளுவர், ஆனால் நாம் இணையதளங்களோடு இயல்பாக வாழ பழகி விட்டோம். சிறுசெடி நட்டு, இலை, பூ, கானி என எல்லாவற்றையும் ரசித்து அனுபவித்த நம் முன்னோரின் வாழ்வு, எங்கோ, என்றோ நடந்த ஓர் வரலாற்று நிகழ்வைப் போல் மாறிவிட்டது.
இன்று நாம் மிகவும் வளர்ந்த தொழில் நுட்ப வளர்ச்சியுகத்தில் வாழ்ந்து வருகிறோம். எப்பொழுதும் தகவல் தொடர்பு சாதனங்களோடு வாழ பழகி விட்டோம். உற்றார் உறவினரோடும், அண்டை வீட்டாரோடும் உறவாடி வளர்ந்த நாம், நம் எதிரில் வரும் நபரை தலைநிமிர்ந்து பார்க்க தவறிவிடுகிறோம். மார்தட்டி, தோள் உயர்த்தி, தலைநிமிர்ந்து வாழ்ந்த நம் சமூகம், தரை பார்த்து மட்டுமே நடக்கும் சமூகமாக ஆகிவிட்டது. இது தவறல்ல, மாறாக அவ்வபோது, அயலாரோடும், இயற்கையோடும், தன்னோடும் வாழ பழகிக் கொள்ள வேண்டும். இயற்கையை ரசிக்க மலைபிரதேசங்களுக்கும், பூங்காக்களுக்கும் செல்வதை விட, நமது வீட்டிலே சிறு பூங்கா அமைத்து, அனைவரின் கவனத்தையும் நம்பால் திருப்புவோம். நமது முகநூல்களும், இதர தொடர்பு சாதனங்களும் இயற்கையால் அழகு பெறட்டும்.
எழுத்து
அருட்சகோதரி ஜோஸ்பின் பிரைடா SSAM
Daily Program
