தொலைந்த என் உயிர் எங்கே… | அருட்சகோதரி பிரைடா SSAM | Veritas Tamil

தொலைந்த என் உயிர் எங்கே…
ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஒரு தாய் கூட்டத்தில் முன்டியடித்துக்கொண்டு வந்து என் அருகில் வந்து; அமர்ந்தாள். ஒருவருடக்காலமாக அதே பாதையில் பயணித்த நான் அன்றுதான் முதல் முதலில் அந்த தாயைப் பார்த்தேன். அவரும் என்னை அன்று தான் பார்த்தார். உருவத்தில் இருவருமே சிறியவர்கள் தான். ஆனால் அந்த தாயோ என் அருகில் மிக நெருக்கமாக அமர்ந்தாள்.
சிறிது நேரம் கழித்து என்னை அன்போடு பார்த்து, நல்லா இருக்கியாமா என்று கேட்டார். நானோ மெதுவாக தலையை ஆட்டினேன். உன்ன பார்த்தா என் பெண்ணுமாதிரி இருக்கு என்று சொன்னார். சொன்ன நொடிதான் தாமதம். கண்ணிலிருந்து கண்ணீர் மடமடவென வந்தது. அதுவரை எதுவும் பேசாத நான், ஏம்மா அழுறிங்க என்று கேட்டேன். அவரோ உன்னைப் போன்றே கடவுள் எனக்கும் ஒரு குழந்தையை தந்தார். எது செய்தாலும், எங்கு சென்றாலும் சொல்லாமல் செல்ல மாட்டாள். அவளுக்கு பிடிக்காத எதையும் நான் செய்ததே இல்லை.
ஆனால் ஒரு நாள் தன் நண்பர்களோடு மூன்று நாட்கள் வெளியூர் செல்லப்போவதாக என்னிடம் கூறிவிட்டு வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டாள். ஆனால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் கணவன் இறந்து பத்து ஆண்டுகள் ஆகிவட்டது. அன்றிலிருந்து ஒருஇரவுக் கூட நாங்கள் இருவரும் பிரிந்ததே இல்லை. எனக்கென்று அவளும் அவளுக்கென்று நானுமாக வாழ்ந்து வந்தோம். எங்கு சென்றாலும் இரவு வீட்டிற்கு வந்து விடுவோம்.
அவள் வெளியூர் செல்லவேண்டிய நாளும் வந்தது. நான் எதுவும் கேட்கவில்லை. இதயம் பதைபதைத்தது. கண்கள் குளமாயின, அவளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்தேன். அவள் அன்று அதிகம் ஏதும் பேசவில்லை. நானும் அமைதியாக இருந்தேன். கடைசியாக என் நேற்றியில் முத்தமிட்டாள். நானும் கனத்த இதயத்தோடு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன், அன்று சென்றவள் ஐந்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் வரவில்லை. நான் செய்த ஒரே தவறு, எங்கு செல்கின்றாய் என்று கூடக் கேட்கவில்லை. பெற்ற வயிறு துடிக்குது. எனக்கென்று யாருமே இல்ல. யாருக்காக வாழவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. என்றைக்காவது ஒரு நாள் என் மகள் வருவாள் என்ற நம்பிக்கையில் காத்துகிடக்கிறேன் என்று கூறினாள்.
என் மனம் வலித்தது. அந்த தாய் ஏன் மிக நெருக்கமாக என் அருகில் அமர்ந்தார் என்று புரிந்தது.
நண்பர்களே! இன்று இதே போன்று பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை, உறவுகளை தொலைத்து விட்டு கண்ணீரிலும், சோகத்திலும் வாழ்ந்து வருகிறார்கள். ஒருசில பிள்ளைகளும் சுதந்திரமாக வாழவேண்டும், பலவற்றை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் பெற்றோர்களின் அனுமதி இன்றி, எங்கு செல்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் சென்று, மிகப்பெரிய பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். பல்வேறு விதமான புதிய பொருட்கள், விளையாட்டுகள் மற்றும் ஆட்களை நம்பி உயிரையும் அடகு வைக்கிறார்கள்.
ஒரு நிமிடம் யோசித்தோம் என்றால், நம்மில் பலரும் இவ்வாறுதான் இருப்போம். நம்மை படைத்த கடவுள், நம்மோடு வாழ நம் பெற்றோரை தந்துள்ளார். அவர்களை மதிப்போம். அவர்களின் அறிவுரைகளை ஏற்போம். அவர்களிடம் சொல்லக்கூடாதது என்று ஏதும் இல்லை என்பதை உணர்வோம். நம்மில் அவர்களும், அவர்களில் நாமும் இணைந்து வாழ்ந்தால்,
பயணம் இனிதாகும்! உறவுகள் மேம்படும்! வாழ்வு செழிப்பாகும்!
எழுத்து
அருட்சகோதரி பிரைடா SSAM
Daily Program
