ஸ்பெயினில் அருளாளராக உயர்த்தப்பட்ட லிக்கரியோனின் மே

ஜூலை 12, சனிக்கிழமை பர்செல்லோனாவின் புனித பிரான்சிஸ் தே சேல்ஸ் ஆலயத்தில் அருள்பணியாளர் Lycarión (François Benjamin) May அவர்கள் அருளாளராக உயர்த்தப்பட்ட திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது கல்வி என்பது வெறும் அறிவை மாற்றுவது மட்டுமல்ல, மற்றவர்களின் வளர்ச்சிக்குத் தன்னையே கொடுப்பதை உள்ளடக்கிய உண்மையான அன்பு மற்றும் பணியின் செயல் என்பதை தனது வாழ்வால் உணர்த்தியவர் அருளாளர் லிக்கரியோனின் மே என்று எடுத்துரைத்தார்  திருப்பீடத் துறையின் தலைவர் கர்தினால் மர்செல்லோ செமராரோ.

கல்வி கற்பித்தல், வாழ்வைக் கொடையாக அளித்தல் என்னும் தலைப்பில் அருளாளர் லிக்கரோன் பற்றிய கருத்துக்களை மறையுரையில் தெரிவித்த கர்தினால் செமராரோ அவர்கள், அருளாளரின் மறைசாட்சிய வாழ்வை அவரது வாழ்க்கையின் உயர்வாகவும், அடையாளமாகவும், இணக்கமான வாழ்க்கையின் முடிசூட்டப்பட்ட சாதனையாகவும், அழைத்தல் வாழ்விற்கு அவர் காட்டிய நம்பிக்கையாகவும் கருதலாம் என்றும் எடுத்துரைத்தார்.
அருளாளரின் துறவற வாழ்க்கை முழுவதும் முன்மாதிரியாகையான வாழ்க்கையாக இருந்தது என்றும், அவரது தியாக வாழ்வு மறைசாட்சிய வாழ்வாக முடிசூட்டப்படுவதற்கு தகுதியானது என்றும் அவருடைய உடன் சகோதரர்கள் எடுத்துரைத்ததையும் பகிர்ந்துகொண்டார் கர்தினால் செமராரோ.

“எனக்குக் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” (யோவான் 12:26) என்ற இயேசுவில் வார்த்தைகளுக்கிணங்க தொண்டுப் பணியாற்றி இயேசுவைப் பின்பற்றியவர் அருளாளர் லிக்கரோன் என்றும் பகிர்ந்துகொண்டார் கர்தினால் செமராரோ.

இயேசுவுடன் இருப்பது என்பது, ஒருபோதும் ஒரே இடத்தில் தங்குவதைக் குறிப்பதல்ல, ஏனெனில், இயேசு எப்போதும் இயக்கத்தில் இருப்பவர். எனவே இயேசுவுடன் இருப்பது என்பது அவரைத் தொடர்ந்து பின்பற்றுவது என்று வலியுறுத்திய கர்தினால் செமராரோ அவர்கள், இதனை நன்கு அறிந்து அதன்படி இயேசுவைப் பின்பற்றி வாழ்ந்தவர் புதிய அருளாளர் என்றும் சுட்டிக்காட்டினார்.

சொந்த மண்ணை விட்டு வெளியேறி இயேசுவைப் பின்பற்ற விரும்பிய அருளாளர் லிக்கரோன் அவர்கள், மனித வளர்ச்சி மற்றும் கிறிஸ்தவ உருவாக்கம் குறித்த நுட்பமான கல்விப் பணியை மேற்கொண்டார் என்றும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை கவனமாகப் பாதுகாத்தார்; இயேசுவைப் போலவே சிலுவையை ஏற்றுக்கொண்டார் என்றும் கூறினார் கர்தினால் செமராரோ.