நமது வயது என்னவாக இருந்தாலும், நாம் நம்பிக்கையின் அடையாளங்களாக இருப்போம் - திருத்தந்தை பதினான்காம் லியோ

“நாம் இப்போது கொண்டாடும் யூபிலி விழா, நமது வயது என்னவாக இருந்தாலும், எதிர்நோக்கு என்பது நிலையான மகிழ்ச்சியின் பிறப்பிடமாக உள்ளது என்பதை உணர உதவுகிறது என்றும், “நீண்ட ஆயுளில் அந்த எதிர்நோக்கும் நெருப்பால் தணிக்கப்படும்போது, ​​அது ஆழ்ந்த மகிழ்ச்சியின் ஆதாரமாக நிரூபிக்கப்படுகிறது” என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.ஜூலை 27, ஞாயிறன்று, கொண்டாடப்படவிருக்கும் உலக தாத்தா பாட்டி மற்றும் முதியோர் நாளை முன்னிட்டு, "நம்பிக்கை தளராதோர் பேறுபெற்றோர்" (சீரா 14:2) என்ற தலைப்பில் ஜூலை 10, இவ்வியாழனன்று, வழங்கியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

“நம்பிக்கை வயதுக்கு ஏற்ப நிலைத்து ஆழமடைகிறது. வாழ்க்கையின் சவால்களால் வடிவமைக்கப்பட்ட முதியவர்கள், நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் வலிமை வாய்ந்த சாட்சிகளாக உள்ளனர், மேலும் அவர்கள் திருஅவை மற்றும் சமூகத்தின் வாழ்க்கையில் இன்றியமையாதவர்களாக உள்ளனர்” என்றும் தனது செய்தியில் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

 முதுமையில் நம்பிக்கை:

கடவுள் தன் மக்களை அவர்களின் முதுமையிலும் கூட எவ்வாறு அழைக்கிறார் என்பதை ஆபிரகாம், சாராள், மோசே, சக்கரியா, எலிசபெத் ஆகியோரின் வாழ்வை திருவிவிலியத்திலிருந்து எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, “முதுமை என்பது ஒரு தடையல்ல, மாறாக அது ஓர் ஆசீர்வாதம்” என்றும், “பலவீனத்திலும் வலிமையைக் காட்ட கடவுள் அதைப் பயன்படுத்துகிறார்” என்றும் விளக்கியுள்ளார்.

 சான்றுகளாக முதியவர்கள்

“முதியவர்கள் ஞானம், விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையின் உருவகமாகத் திகழ்கின்றனர்” என்று கூறியுள்ள திருத்தந்தை, “அவர்கள் தலைமுறைகளுக்கு இடையே ஓர் இணைப்புப் பலமாகச் செயல்படுகின்றனர்” என்றும், “இளையோரை அவர்களின் வாழ்க்கை அனுபவம் மற்றும் நம்பிக்கையால் வழிநடத்துகின்றனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 அக்கறை மற்றும் உள்ளடக்கத்திற்கான அழைப்பு

“யூபிலி ஆண்டு, தனிமை மற்றும் கைவிடப்பட்ட நிலையிலிருந்து விடுதலை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ள திருத்தந்தை, “முதியோரைச் சந்தித்தல், அவர்களுக்கான ஆதரவு வலைப்பின்னல்களை உருவாக்குதல், அவர்களை சமூகத்திலும் ஆன்மிக வாழ்க்கையிலும் ஈடுபடுத்துதல் ஆகியவற்றின் வழியாக, திருஅவை, ‘நன்றியுணர்வின் புரட்சி மற்றும் அக்கறையை’ வெளிப்படுத்தலாம்” என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஆன்மிக புதுப்பித்தல் மற்றும் மனித மாண்பு

“பலவீனத்திலும் கூட முதியவர்கள் அன்பு கூரலாம், இறைவேண்டல் செய்யலாம், மற்றும் சேவை செய்யலாம்” என்று மொழிந்துள்ள திருத்தந்தை, “குடும்பத்தின் மீதான அவர்களின் பாசம் வலுவாக உள்ளது” என்றும், “அவர்களின் ஆன்மிக வாழ்க்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு யூபிலி விழா அழைப்பிதழ்

“உரோமை நகருக்குப் பயணிக்க முடியாதவர்கள், தனிமையில் இருக்கும் முதியவர்களை சந்தித்து உரையாடுவதன் வழியாக, யூபிலி விழாவின் மகிழ்வைப் பெறலாம்” என்றும், “இது அவர்களுக்கு கிறிஸ்துவுக்கான திருப்பயணமாகக் கருதப்படுகிறது” என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.இறுதியாக, முதியவர்கள் நம்பிக்கையுடன் இறைவேண்டல் செய்யவும், தங்கள் நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, “அவர்களின் வயது அல்லது நிலை எதுவாக இருந்தாலும், அவர்கள் உலகத்திற்கான நம்பிக்கையின் வாழும் அடையாளங்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள்” என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்துள்ளார்.