16-வது பொது அவையின் வரலாற்று சிறப்புமிக்க இறுதி ஆவணத்தின் தமிழாக்கம் | Veritas Tamil

16-வது பொது அவையின் வரலாற்று சிறப்புமிக்க இறுதி ஆவணத்தின் தமிழாக்கம் '
தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி இறுதி ஆவணத்தை வெளியிட்டார்!
தமிழ்நாட்டின் கத்தோலிக்க திருச்சபைக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளான , செப்டம்பர் 21, 2025 அன்று சென்னையின் நாசரேத்பேட்டில் தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள் 16-வது பொது அவையின் இறுதி ஆவணத்தின் தமிழாகத்தை வெளியிட்டார்.இந்த நிகழ்வானது 20-ஆவது ஆயர் திருநிலைப்பாட்டு விழாவோடு இணைந்த ஒரு முக்கிய நிகழ்வாகும்.
கத்தோலிக்கத் திரு அவை. தன்னைத் புதுப்பிக்கும் பணியில், "கூட்டொருங்கியக்கத் திரு அவையாக" தன்னை அடையாளப்படுத்தும் நிகழ்வாக அது அமைந்தது.
கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தமர்வுகளை உள்ளடக்கிய உலகளாவிய 16-வது ஆயர் மாமன்றமானது, 2023 அக்டோபர் மற்றும் 2024 அக்டோபர் ஆகிய இரண்டு வெவ்வேறு தருணங்களில் மறைந்த முன்னாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆயர் மாமன்றத்தின் அடிப்படைச் சிந்தனைகள் எல்லா மக்களிடத்திலும் கொண்டுபோய்ச் சேர்க்கும் நோக்கத்தில் , தமிழ்நாடு ஆயர் பேரவையின் ஒப்புதலில் தமிழாக்கம் செய்யப்பட்டது.
இந்த நூல் வெளியீடு குறித்து இதன் ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு ஆயர் பேரவையின் இணைப் பொதுச் செயலாளருமான அருள்முனைவர் பிரான்சிஸ் ஜோசப் கூறுகையில், இந்த ஆவணமானது கத்தோலிக்க நம்பிக்கையாளர்களின் ஒற்றுமை, பங்கேற்பு, மறைத்தூதுப்பணி என்ற முக்கோண உறவு நிலைகளில் யாவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்தார். மேலும் இந்த ஆவணத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்த கோவை -நல்லாயன் குருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
இந்த வெளியீட்டு விழாவில் பங்கெடுத்த அருட்தந்தையர்கள், இறுதி ஆவணம் தமிழில் கிடைப்பதன் மூலம் நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் திரு அவையில் பங்குகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது என்று கூறினர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை, அண்மையில் இந்தியக் கத்தோலிக்கப் பத்திரிகை அமைப்பால் (ICPA ) சிறந்த விருது பெற்ற 'நம் வாழ்வு' பதிப்பகம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நூல் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்வில் ஆயர்கள், திருச்சபைத் தலைவர்கள் மற்றும் அருட்தந்தையர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Daily Program
