ஆண்டவரில்  பற்றுறுதி (trust)  அச்சம் நீக்கும்! | ஆர்கே. சாமி | Veritas Tamil


5 ஆகஸ்டு 2025                                                                                                                  
பொதுக்காலம் 18 ஆம் வாரம் –செவ்வாய்

எண்ணிக்கை 12: 1-13
மத்தேயு 14: 22-36
 
 
 ஆண்டவரில்  பற்றுறுதி (trust)  அச்சம் நீக்கும்!

 முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில், மோசேயின் அதிகாரத்தைக் கேள்வி கேட்டோர், தண்டிக்கப்பட்டு, அந்த அதிகாரம் தக்க வைக்கப்படுவதை அறிகிறோம். மோசேயின் சகோதரன் ஆரோனும், மோசேயின் சகோதரி மிரியாமும் தலைவர்களாக இருந்தனர். அவர்கள் மோசேக்கு உதவினார்கள். ஆனால் அவர்கள் அவரைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள். உண்மையில், அவர்கள் மோசேயைக் குற்றம் சாட்டினர். கடவுளின் சார்பாகப் பேசிய ஒரே நபர் அவர் அல்ல. இதன் காரணமாக, மோசே சிறப்பு வாய்ந்தவர் அல்ல என்று அவர்கள் கூறினர். மேலும், அவர் ஒரு அந்நியரை மணந்ததால் அவர் மீது குற்றம் சாட்டுவது போல் தோன்றியது.

ஆனால் மோசே கடவுளின் சிறப்பு ஊழியராக இருந்ததால் ஒருபோதும் பெருமை கொள்ளவில்லை.  இஸ்ரயேலர்களை வழிநடத்த கடவுள் அவருக்கு பலத்தையும் ஆற்றலையும் கொடுத்தார் என்பதையும், கடவுளின் உதவி இல்லாமல் இதைச் செய்ய முடியாது என்பதையும் மோசே அறிந்திருந்தார். எனவே அவர் அடிக்கடி கடவுளிடம் பேசினார். என்ன செய்ய வேண்டும் என்று கடவுளிடம் கேட்டார்.

மோசே, ஆரோன் மற்றும் மிரியாம் ஆகியோருக்கு கடவுள் தோன்றினார்.  மோசேயிடமே பேசினார். மோசே பிற இனத்துப் பெண்ணை திருமணம செய்தவர் ஆதனால் மிரியாமுக்கும் ஆரோனுக்கும் இதைப் பற்றி முணுமுணுத்தனர். எனவே கடவுள் அவர்களுக்கு எதிராக செயல்பட்டார். அவர் மிரியாமைத் தண்டித்தார். கூடாரத்தின் மேலிருந்து மேகம் அகன்றதும் மிரியாமை பனி போன்ற வெண்மையான தொழுநோய் பீடித்தது. ஆரோன் மிரியாம் பக்கம் திரும்பவே அவள் தொழுநோயாளியாய் இருக்கக் கண்டார் என்று வாசிக்கிறோம்.

நற்செய்தி.

கூட்டத்தினரை அனுப்பிவிட்டு, இயேசு சீடர்களை படகில் முன்னே அனுப்புகிறார், அதே நேரத்தில் அவர் தனியாக இறைவேண்டலுக்குச் செல்கிறார். அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக் கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. 
அத்தருணத்தில், இயேசு  அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, “ஐயோ, பேய்” என அச்சத்தினால் அலறினர். உடனே இயேசு   “துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்” என்றார். வழக்கம்போல் பேதுரு முந்திக்கொண்டு, “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்று வேண்டியதும்,  இயேசு அவரை அழைக்க, பேதுரு கடலில் குதித்து, கடல் மேல் இயேசுவைப் போலவே நடக்கலானார். ஆனாலும், பெரும் காற்றுக்குப் பயந்து, நம்பிக்கை இழக்கலானார். ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்”  என்று அச்சத்தில் கத்தவே, ஆண்டவர் அவரது கரம் பிடித்துத் தூக்கியபோது, நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்று கண்டித்தார்.

படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, “உண்மையாகவே நீர் இறைமகன்” என்றனர் என்று மத்தேயு குறிப்பிடுகிறார்.

சிந்தனைக்கு.

நற்செய்தியில், “ஆண்டவரே, நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்” என்றார். அவர், “வா” என்றார் என்ற வரிகள் என்னை மேலும் சிந்திக்கத் தூண்டுகிறது. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள்.    இன்றைய நற்செய்தியில், சீடர்கள் அனுபவம் வாய்ந்த மீனவர்களாக இருந்தாலும் புயலைக் கண்டு பயப்படுகிறார்கள். அவர்கள்  பேயைக் கண்டு   அதிகமாகப் பயப்படுகிறார்கள்! எல்லாவற்றையும் விட மோசமானது, அவர்கள் இயேசுவை ஒரு பேயாகப் பார்த்ததுதான். இவர்களுக்குத் தான் பின்னர் இயேசு பேயை ஓட்டவும் அதிகாரமளித்து உலகற்கு அனுப்பபினார்.

இயேசுவின் மீது கவனம் செலுத்தாமல், பலத்த காற்றின் மீது கவனம் செலுத்தும்போது பேதுரு மூழ்கத் தொடங்கினார்.  கடவுளைப் பார்ப்பதற்குப் பதிலாக அவன் கீழே பார்க்கிறான். இயேசுவின் மீது நாம் கவனம் செலுத்துவதைக் குறைத்து, நமது பிரச்சினைகள் மற்றும் சிரமங்களில் அதிக கவனம் செலுத்தும்போது நமக்கும் இதுதான் நடக்கும். நமது கவனம் இயேசுவில் முழுமையாக இருந்தாலன்றி உலகை நம்மால் வெற்றிகொள்ள இயலாது. 

கீழே பார்க்காதீர்கள், கடவுளை நோக்கிப் பாருங்கள். நமது புயல்களான பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் பார்க்காதீர்கள், மாறாக இயேசுவின் மீது கவனம் செலுத்துவோம். இயேசுவின் மீது மட்டுமே நம் கண்களைப் பதிய வைப்போம். ஒருவர் கூறினார்: “இயற்கையான சோதனையானது, சிரமங்களில் கவனம் செலுத்துவதாகும், காற்று மற்றும் அலைகள் மீது, கட்டுப்பாட்டில் இல்லாத உணர்வின் மீது கவனம் செலுத்துவதாகும்.

‘மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்து எனக்கு உதவி வரும்.’ (திபா 121:1,2) என்று திருபாடலாசிரியர் உணர்த்துகிறார். நமக்கு உதவி என்பது கடவுளிடமிருந்து வருவதாகும். அவரைப் பற்றிக்கொள்வோருக்கு என்றும் விடுதலை உண்டு. ‘இயேசுவே உம்மில் நான் பற்றுறுத்தி கொள்கிறேன்’ (Jesus I Trust You) என்பது வெறும் உதட்டளவிலான புகழ்ச்சி வாக்காக இருக்கக் கூடாது. அதில் எள்ளவும் பலனில்லை. துன்ப வேளையில் பதற்றம் கூடாது. 

நாம்  நம்பிக்கையுடன் ஆண்டவரை எதிர்கொள்ள  வேண்டும்.  இல்லையேல் வாரம் தோறும் நாம் ஏற்கும் ’நற்கருணை’ பொருளற்றதாகிவிடும். அவரே நமது நம்பிக்கை, அவரே நமது எதிர்நோக்கு.
 

இறைவேண்டல்.

ஆண்டவரே, எந்நாளும், எவ்வேளையிலும் நீரே என் பற்றுறுதி. ஆமென்
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452