முதன்மை வானதூதர்கள் நம்மில் உறைபவர்கள்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

29 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 26ஆம் வாரம் – திங்கள்
தூய மிக்கேல், கபிரியேல், ரபேல் - அதிதூதர்கள்
விழா

தானியேல் 7: 9-10, 13-1அல்லது திவெ 12: 7-12ab
யோவான் 1: 47-51

 
முதன்மை வானதூதர்கள் நம்மில் உறைபவர்கள்!

 
முதல் வாசகம்.


இன்று முதன்மை வானதூதர்களான  (அதிதூதர்களான) மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் விழாவைக்  கொண்டாடுகிறோம். முதல் வாசகத்தில் தானியேலின் விண்ணகக் காட்சி தந்தை கடவுள் மற்றும் அவரது திருமகன் இயேசு கிறிஸ்து ஆகியோரை மையமாகக் கொண்டுள்ளது.  

இவ்வாசகத்தில் தானியேல் கண்ட காட்சியில், விண்ணுலகில் அரியணைகள் அமைக்கப்பட்டிருந்தன. என்றுமுள்ளவராகிய  கம்பீரமான உருவம் கொண்ட ஒருவர்  அவர் இருக்கையில் அமர்கிறார். அவரது ஆடை பனியைப் போல வெண்மையாகவும்,  அவரது தலைமுடி தூய கம்பளியைப் போலவும்  இருந்தது என தானியேல் காட்சியில் கண்டதை விரிரக்கிறார். இது என்றுமுள ஆட்சியாளரின்  - தூய, ஞானம் மற்றும் மாட்சி  ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகப் பொருள் கொள்ளப்படுகிறது. 

அடுத்து, காட்சியில் வரும் ‘அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன’ என்று தானியேல் குறிப்பிடுவது, அரியணையில் வீற்றிருப்பவரின் ஆற்றல், தூய்மை மற்றும், நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக குறிப்பதாகப் பொருள் கொள்ளப்படுகிறது.  

தொடர்ந்து அவரது காட்சயில் வரும் ‘பல்லாயிரம் பேர் அவருக்குப் பணி புரிந்தார்கள்; பல கோடிப் பேர் அவர்முன் நின்றார்கள்; நீதிமன்றம் தீர்ப்பு வழங்க அமர்ந்தது; நூல்கள் திறந்து வைக்கப்பட்டன’ என்பது தீர்ப்பு, பிரபஞ்ச ஒழுங்கு, தெய்வீக இறையாண்மை ஆகியவற்றைப் பிரதிபலிப்பதாகப் பொருள் கொள்ளலாம்.  

தானியேலில் "மானிடமகனுக்கு  ஒப்பானவர்" என்று கூறுவது,  கிறிஸ்துவைக் குறிக்கும் சொல்லாகும்.  இது வல்லமை, மாட்சி மற்றும் நிலைவாழ்வு ஆகியவை  இயேசுவுக்கே அனைத்து அதிகாரமும் இறுதியில் சொந்தமானது என்ற கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.  

நற்செய்தி.

 பிலிப்பு வழியாக  இயேசுவை முதலில் சந்தித்தவர்களில் நத்தனியேல் ஒருவர். “இவர் உண்மையான இஸ்ரயேலர், கபடற்றவர்” " என்று இயேசு கூறுவது, ஆச்சரியமாகத் தோன்றலாம், ஏனெனில் நத்தனியேல்  இயேசுவைப் பற்றி இதுவரை அறிந்திருக்கவில்லை. நத்தனியேல் இயேசுவை முழுமையாக அறிவதற்கு முன்பே, அவரை  இயேசு ஏற்றுக்கொள்கிறார்.

பிலிப்பு அழைப்பதற்கு முன்பே, இயேசு நத்தனியேலை ஒரு அத்தி மரத்தின் கீழ் கண்டதாக வெளிப்படுத்துகிறார். இது நேரடியானதாகவோ அல்லது அடையாளமாகவோ இருந்தாலும், நத்தனியேல் அறிந்ததையோ அல்லது உணர்ந்ததையோ தாண்டி, இயேசு நத்தனியேலை நன்கு அறிந்திருந்தார்   என்பதைக் குறிக்கிறது. இது இயேசுவின் ஞானத்தை   வெளிப்படுத்துவதாகவும்  உள்ளது.   

நத்தனியேல்  “ரபி, நீர் இறைமகன்; நீரே இஸ்ரயேல் மக்களின் அரசர்” என்ற போது, இதை விடப் பெரியவற்றைக் காண்பீர்” என்கிறார் இயேசு.

 
சிந்தனைக்கு.

இன்று முதன்மை வானதூதர்கள் மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகியோரின் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். நம் ஒவ்வொருவருக்காகவும் ஒரு தூதர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மறைநூல் போதனை. 

இந்த தூதர்கள் மூவரில்  மிக்கேல் போராடினார். கபிரியேல் அறிவித்தார், ரபேல் குணமாக்கினார் என்று நாம் அறிகிறோம். இந்த முதன்மை வானதூதர்கள்  எந்நேரமும் கடவுளின் முகத்தைத் தியானித்துக் கொண்டிருப்பவர்கள்.  நம்மைத் தீமைகள் அனைத்திலிருந்தும் காப்பவர்களாகவும்  மண்ணுலகில் சாத்தானுக்கு எதிராக நம்மை  வழிநடத்துபவர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.  


மிக்கேல் அதிதூதரை நாம் தானியேல் நூலிலும் திருவெளிப்பாடு நூலிலும் காண்கின்றோம். 'கடவுளுக்கு நிகரானவர் யார்?' என்பது இவருடைய பெயரின் பொருள். தீமைக்கு எதிராகப் போரிடுபவர் இவரே (திவெ 12:7-12). அன்று ஏவாளுக்கு ஆசை காட்டி மோசம் செய்தவர் தீயோனாகிய சாத்தான். இவனின் சதித் திட்டங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுபவரும், தீமைக்கு எதிரான நம் போராட்டத்தில் நமக்குத் துணை நிற்பவரும் முதன்மை வானதூதர் மிக்கேல் ஆவார். இவரது படத்தை நமது வீடுகளின் வாசலில் வைப்பதுண்டு. 

தொடரந்து நாம் காண விருப்பது கபிரியேல். இவர்தான் புதிய ஏற்பாட்டில் அன்னை மரியா, சக்கரியா, மற்றும் யோசேப்புக்கு நற்செய்தி கொண்டு வந்தவர். கபிரியேல் என்ற பெயர் எபிரேய வார்த்தையான  Gabhriēl என்பதிலிருந்து வந்தது, இது ‘கப்ரி’ என்றால்  "வலிமை"  என்று பொருள். மற்றும் El என்றால்  "கடவுள்" என்று பொருள். ஆகவே, கபிரியேல் என்பது 'கடவுளின் வல்லமை' அல்லது 'கடவுள் வல்லவர்' என்பதை இவர் பெயர் உணர்த்துகிறது.  இவர், இம்மண்ணுலகில்  நம்மைச் சுற்றி நிகழும் அனைத்தின் நடுவிலும் கடவுள் நம்மில்  துணையாக உடனிருக்கிறார்  என்ற நற்செய்தியை நமக்கு  வழங்கி எச்சரிப்பவராக உள்ளார்.  

அடுத்து மூன்றாவதாக உள்ள இரபேல் என்பவர, 'கடவுளே நலம்' அல்லது 'கடவுள் நலம் நல்குபவர்' என்னும் பொருள் கொண்ட பெயரைத் தாங்கியுள்ளார். புதிய ஏற்பாட்டில் வரும் பெத்சாய்தா குளத்தை கலக்கி, அதில் இறங்கும் மக்களுக்கு குனம்தரும் தூதர் இவர்தான் (யோவான் 5:1-9)  என்று நம்பப்படுகிறது. தோபித்து நலில்,  தோபித்தின் கடன் பணத்தைத் திரும்பப் பெற்றவரும், தோபியாவுக்குத் திருமணம் நிறைவேற உதவியவரும், சாராவின் பேயைப் போக்கியவரும், தோபித்துக்குக் கண் பார்வை அளித்தவரும் இவரே என்று வாசிக்கிறோம்.

இந்த மூன்று முதன்மை வானதூதர்களை நாம் மதிக்கும்போது, அவர்கள் கடவுளுடன் ஒத்துழைத்து, அவருடைய அருளையும் அவருடைய திருவுளத்தையும் நம் உலகிற்கு கொண்டு வரும் மூவர் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். தேவதூதர்கள் தாங்களாகவே செயல்பட சக்தியற்றவர்கள். ஆனால் அவர்கள் கடவுளின் விருப்பத்திற்கு இசைவாக மட்டுமே செயல்படுவதால், அவர்களின் செயல்பாடும் கடவுளின் அருளைப்  போலவே சக்தி வாய்ந்தது, ஏனெனில் கடவுள் அவர்கள் மூலம் செயல்படுகிறார். 

பொதுவாக, வானதூதர்கள் என்றால் அவர்கள் கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு கடவுளின் பணியை சீராகச் செய்யக்கூடியவர்கள் என்று அறிகிறோம் (திபா 103:20). அந்த வகையில் பார்க்கும்போது புனித மிக்கேல், கபிரியேல், இரபேல் ஆகிய மூன்று முதன்மைத் தூதர்களும் இறைவார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அவர் சொன்ன பணியைச் சிறப்பாக செய்தார்கள்.

மனிதர்களாகிய நாம் வானதூதர்கள் அல்ல.   ஆனால் கடவுளின் மாட்சியைப் பாடுவதில் நாம் இணைந்து, கடவுளின் அன்பின் நல்ல செய்தியை மற்றவர்களுக்குக் கொண்டு வர உதவினால், நாமும் "வானதூதர்கள்தான் " என்பதை மனதில்கொள்வோம். நற்செய்தியில் இயேசு நத்தனியேலுக்குக் கூறுவதைப்போல் நம்மாலும் பெரியவற்றைக் காண முடியும்.

ஆகையால்,   நாமும் கடவுளுக்குக் கீழ்படிந்து வாழ்வதோடு,  தீமையை எதிர்த்துப்  போராடுவோம், மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்போம், உடல் நோயால் வருந்தும் மக்களுக்கு ஆறுதலாக செயல்படுவோம்.  

இறைவேண்டல்.

ஆண்டவரே, உமது நற்செய்தியை எடுத்துரைப்பதிலும், பிறருக்கு உதவுவதிலும்  நானும் ஒரு ‘வானதூதரப்போல்’ செயல்பட எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.
  
 

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452