நமது வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு விண்ணகம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil

30 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 26ஆம் வாரம் – செவ்வாய்
செக்கரியா 8: 20-23
லூக்கா 9: 51-56
நமது வாழ்க்கைப் பயணத்தின் இலக்கு விண்ணகம்!
முதல் வாசகம்.
கடவுள் "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடன்" ஒரு உறவை ஏற்படுத்துகிறார், மேலும் அவர்கள் மூலம் பலர் கடவுளுடன் நெருக்கமான உறவுக்குள் கொண்டு வரப்படுகிறார்கள். யூத நம்பிக்கையாளர்களுடன் கூட்டுறவு கொள்வதன் மூலம் பல்வேறு நாடுகளின் மக்கள் எவ்வாறு கடவுளிடம் ஈர்க்கப்படுவார்கள் என்பதை முதல் வாசகம் விவரிக்கிறது.
பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட பிறகு, விடுதலைப்பெற்று எருசலேமுக்குத் திரும்பியவர்களிடம் இறைவாக்கினர் செக்காரியா உரையாற்றுகிறார். அவர்கள் தூய நகரத்திற்குத் திரும்பிச் சென்று ஆலயத்தைக் கட்டியெழுப்புவதற்கான பாக்கியத்தைப் பெற்றிருப்பது மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல இனத்தார் ஆண்டவரகிய கடவுளை வழிபட எருசலேம் ஆலயத்திற்கு வருவார்கள் என்று முன்னறிவிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு கலிலேயாவில் தனது பணியைத் தொடங்கி முடித்த பிறகு அங்கிருந்து புறப்படுகிறார். கலிலேயாவிலிருந்து, யூதேயாவுக்கு (எருசலேமுக்கு) தனது பணியின் உச்சக்கட்டத்தை நோக்கி அவர் பயணிக்கையில், கலிலேயாவிலிருந்து யூதேயாவிற்கு மிகக் குறுகிய பாதையில் பயணிக்கிறார். அந்த வழி அவரை சமாரியா வழியாக அழைத்துச் செல்கிறது. அப்போது, இயேசுவும் அவரது சீடர்களும் எருசலேம் நகரத்தில் உள்ள யூத ஆலயத்தை நோக்கிச் செல்லும் யூதர்கள் என்பதால் சமாரியர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்நோக்குகிறார்கள். ஏனெனில், யூதர்கள் சமாரியர்களுக்கு ஆகாதவர்கள்.
இச்சூழலை அறிந்த அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் “ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?” என்று கேட்டார்கள். நற்செய்தி அறிவிக்கச் செல்லும் பயணத்தை த் தடையாக இருக்கும் சமாரியர்களை இயேசு தண்டிக்க வேண்டும் என்று சீடர்கள் விரும்புகிறார்கள். சமாரியர்களால் நிராகரிக்கப்பட்டதால், சீடர்களிடையே தோன்றிய குறுகிய மனப்பான்மை மற்றும் அவர்களின் பகை உணர்வுகள் குறித்து இயேசு அவர்களைக் கண்டிக்கிறார்.
சிந்தனைக்கு.
ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக, நாம் எல்லா நேரங்களிலும் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்கப் பணிக்கப்பட்டுள்ளோம். இப்பணியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம், சில சமயங்களில் பலத்த எதிர்ப்பையும் சந்திக்க நேரிடலாம்.
இப்பணியில், நாம் மற்றவர்களால் நிராகரிக்கப்படும்போது, அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு, பின்வாங்குகிறோம். லூக்கா 10:16 இல் "உங்களை நிராகரிப்பவர் என்னையும் என்னை அனுப்பியவரையும் நிராகரிக்கிறார்" எனும் இயேசுவின் வார்த்தையை நாம் மனதில் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். சமாரியாவில் நற்செய்தி ஏற்கப்படவில்லை என்பதால் இயேசு வருத்தப்பட்டு முடங்கிவிடவில்லை, வந்த வழி திரும்பவில்லை. சீடர்களின் அவசரத்தையும் கோபத்தையும் இயேசு கடிந்துகொள்வதோடு, தம் பயணத்தைத் தொடர்கிறார்.
ஒரு நீரோடையில் பெரிய கற்கள், பாறைகள் குறுக்கே கிடந்தாலும், நீர் தங்குவதில்லை, அதன் வழிதேடி ஓடிக்கொண்ட இருக்கும். அவ்வாறே, இயேசுவும் செயல்பட்டுக்கொண்டிருந்தார். மீட்பு யூதர்களுக்கு மட்டும் உரித்தான தனியுடமை அல்ல. அது உலக மக்களில் எல்லா இனத்தாருக்குமானது. கடவுள் எல்லாருக்கும் தந்தை என்பதுபோல், இயேசு கிறிஸ்து எல்லாருக்கும் மீட்பராக மனுவுருவானார். ஆகவே, அவரது பயணம் எருசலேமுக்கு என்றிருந்தாலும், அவரது பயணத்தின் நோக்கம், விண்ணகம் நோக்கியதாக இருந்தது. நாமும, உலகில் வாழ்ந்தாலும், நாம் இவ்வுலகத்திற்கு உரியவர்கள் அல்ல, விண்ணகமே நமது தாயகம்.
எனவே, நமது பணிவாழ்வு கோழிகளைப்போல் இந்த மண்ணில் குப்பைகளைக் கிளறி, கிடைப்பதைத் தின்று வாழ்வதல்ல. அத்தகையக் குறுகிய பார்வைக்கும் வாழ்வுக்கும் உரியவர் நாமல்ல. முதல் வாசகத்தில், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட யூதர்கள் எருசலேம் திரும்பியதும் அவரவர் வீட்டைப் புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டினர். ஆலயத்தைக் கட்டி எழுப்பும் பணியில் சுணங்கினர். எனவே, இறைவாக்கினர் அவர்களை எச்சரித்து ஆலயப் பணிக்கு அழைத்தனர்.
நமது சீடத்துவம் என்பது உறுதியுடன் பணியைத் தொடர்வதை உள்ளடக்கியது. இயேசுவின் நோக்கம் எதிர்ப்பை அல்லது எதிர்மறை செயல்களை எதிர்ப்பதல்ல, மாறாக, அவற்றை மீட்டெடுப்பதாகும். இயேசு நிராகரிக்கப்பட்டதைப் போலவே, அவரைப் பின்பற்றும் நாமும் சில எதிர்ப்பையோ அல்லது விரோதத்தையோ சந்திக்க நேரிடும்போது, அவற்றால் நாம் சோர்ந்து போகாமல், முடங்கிவிடாமல் மற்றவர்களுக்குக் கடவுளின் மீட்பை வெளிப்படுத்த பயணத்தைத் தொடர வேண்டும். நிச்சயமாக, குள்ளநரி கூட்டம் குறுக்கிடும், தொல்லைத் தந்து முடக்கிடும், அதனையும் தாண்டி காலை முன் வைத்தால், வெற்றி நமதாகும்.
இறைவேண்டல்.
அன்புள்ள ஆண்டவரே, வாழ்க்கையில் நான் ஏற்றுள்ள நற்செய்திக்கான சீடத்துவப் பயணத்தைத் தொடர எனக்குத் தேவையான அருளையும் துணிவையும் அருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
