இறைவேண்டல் துணைகொண்டு இறைவனில் உறைவோம்!| ஆர்.கே. சாமி | Veritas Tamil

26 செப்டம்பர் 2025                                                                                                                  
பொதுக்காலம் 25ஆம் வாரம் – வெள்ளி
 
ஆகாய் 2: 1-9
லூக்கா   9: 18-22

 

 இறைவேண்டல் துணைகொண்டு இறைவனில் உறைவோம்!

 முதல் வாசகம்.

 முதல் வாசகத்தில், பாபிலோனியர்களால் நொருக்கப்பட்ட ஆலயத்தின் எதிர்கால மாட்சி முந்தையதை விடப் பெரியதாக இருக்கும் என்று ஆகாய் இறைவாக்குரைக்கிறார்.  அது மீண்டும் கட்டப்படுவதால் மட்டுமல்ல, மெசியாவே இந்த ஆலயத்திற்கு வருவார் என்பதாலாகும் என்கிறார்.

நாடு கடத்தப்பட்டவர்கள் எருசலேமுக்குத் திரும்பும்போது, ஆலயம் இடிந்து கிடப்பதைக் கண்டு அவர்கள் வருத்தமும் ஏமாற்றமடைகிறார்கள். சாலமோன் அரசர் கட்டிய அந்த ஆலயத்தின் மாட்சியும் தோற்றமும் மீண்டும் நிலைபெறுமா என்று, சிந்திக்கிறார்.  இக்காலக்கட்டத்தில்தான், இறைவாக்கினர ஆகாய், அரசர் மற்றும் குருக்களிடம் கடவுள் ஆலயத்தை அதன் முந்தைய, கௌரவமான நிலைக்கு மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், அதை மேம்படுத்துவார் என்று கூறுகிறார். 

ஆனாலும், இது வெள்ளி மற்றும் தங்கத்தால் கட்டிடத்தை அலங்கரிப்பதால் அல்ல, மாறாக,  கடவுளால் அருள்பொழிவு செய்யப்பட்ட மெசியாவை இந்த ஆலயத்திற்கு அனுப்பவுள்ளார் என்ற செய்தியை முன்னறிவிக்கிறார்.  

நற்செய்தி.


நற்செய்தியில், சிறிது நேர இறைவேண்டலுக்குப் பிறகு,  இயேசு தம்மைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தம் சீடர்களிடம் கேட்கிறார். சிலர் தன்னை திருமுழுக்கு யோவான்   உயிர்த்தெழுப்பப்பட்டவர் அல்லது ஒரு இறைவாக்கினர் என்று நினைக்கிறார்கள் என்று   பதிலளிக்கிறார்கள். "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?" என்று அவர்களிடம் கேட்டு இயேசு கேள்வியைத் தொடர்கிறார். பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மெசியா என்ற இந்த பதிலை ஏற்று,  இயேசு உடனடியாக தனது எதிர்கால துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுடன் இணைக்கிறார், இது சீடர்கள் எதிர்பார்க்காத ஒன்று.


சிந்தனைக்கு.


இன்றைய நற்செய்தியில் இயேசுவின் கேள்விக்கு, பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்ற பதிலை முனவைக்கிறார். இயேசுவோ அது வானகத் தந்தையின் வெளிப்பாடு என்கிறார். முதல் வாசகத்தில், ஆகாய் இறைவாக்கினர், மீண்டும் கட்டப்படவுள்ள ஆலயத்திற்கு கடவுள் அனுப்பும மெசியா வருவார் என்று அறிவித்தார்.

ஆக, யூத மக்கள் கடவுளால் வாக்குறுதியளிக்கப்பட்ட, அருள்பொழிவுச் செய்யப்பட்ட மெசியாவின் வருகைக்காக தொடர்ந்து காத்திருந்தனர்.  எனவேதான் ஒரு யூதராகிய  பேதுரு, இயேசுவை  ஒரு மெசியாவாக உணர்கிறார். ஆனாலும்,  பெரும்பாலான யூதர்கள் வரவிருக்கும மெசியா ஒரு விடுதலை வீரராக இருப்பார், அவர்  மக்களை அந்நிய சக்திகளிலிருந்து விடுவிப்பார் என்று எதிருப்பார்த்திருந்தனர். அவர்கள் வரவுள்ள மெசியாவை (மீட்பரை) ஓர் இராணுவ வீரராகக் கற்பனை செய்திருந்தனர். மிகச் சில யூதர்கள் மட்டுமே மெசியாவை மக்களைக் கடவுள் பக்கம் திருப்பும், உயர்த்தும் ஒரு நபராக எதிர்ப்பார்த்தனர்.  
நற்செய்தியைக் கூர்ந்து கவனித்தால், இயேசுவைப் பற்றிய பேதுருவின்  அறிக்கை, இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தது,  மற்றும் சீடர்களின் புரிதல் அனைத்தும் இயேசுவின் இறைவேண்டலின் தொடர்ச்சியாக நிகழ்ந்ததை அறியலாம். ஏனெனில், 'இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர்' என்று   லூக்கா கூறுகிறார். ஆகவே அங்கு மக்கள் கூட்டமில்லை, மாறாக, தந்தையாம் கடவுளும் மகனாம் (மெசியா) இயேசுவும், எதிர்காலத் திருஅவையின் பிரிதிநிதிகளாகச் சீடர்களும்தான் இருந்தனர்.

இன்றைய முதல் வாசகத்தில் (ஆகாய் 2:1-9), ஆண்டவராகிய கடவுளின் கோவில் எருசலேமில் மீண்டும் கட்டப்படுகின்றது. 'இந்த இடத்தில் நலம் நல்குவேன்' என்று ஆண்டவராகிய கடவுள் வாக்களித்த தாக ஆகாய் கூறுகிறார். ஆம், உலக மீட்பராகிய மெசியா இருக்கும் இடத்தில்  நலம் இருக்கும் என்பது வாக்களிக்கப்பட்ட ஒன்று.  இயேசு உள்ள இடத்தில் குணமளிப்பும் விடுதலையும் இருக்கும் என்பது கடவுளின வாக்குறுதி. 
ஆனாலும், மெசியா வந்து, சென்று ஈராயிரம் ஆண்டுகள் கழிந்தபோதும்,  "இயேசு யார் என்று நாம் சொல்கிறோம்?" என்ற கேள்விக்கு பதில் அளிப்பதில் நம்மில் பலர்  தடுமாறுகிறோம். இன்னும் அவரை ‘கடவுளாகப் பார்த்து, அவரிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும்’ ஒரு தபால் நிலையமாகவே எண்ணிக்கொண்டிருக்கிறோம். மற்றும், பலர் ‘அல்லேலூயா துதி மகிமை, எற்றும் ஆண்டவருக்கே செலுத்திடுவோம்’ என்று பாடிப்புகழ்வதில் மும்முரமாக உள்ளனர். அன்னை மரியா கூட, இப்படி பாடி புகழ்ந்திருப்பாரா என்பது ஒரு கேள்வியே. அவர், ‘அவர் சொல்வதையொல்லாம் செய்யுங்கள்’ என்றுதான் நமக்குப் பணித்துள்ளார். (யோவான் 2:5). மேலும், ஆண்டவர் இயேசுவும், “மனிதர் தரும் பெருமை எனக்கு தேவையில்லை.” (யோவான் 5:41) என்றுதான் கூறினார். 

நம் வாழ்நாள் முழுவதும்,  தொடர்ந்து நிறைவைத் தேடுகிறோம். நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம். வாழ்க்கையில் இன்பத்தை விரும்புகிறோமேயொழிய கிறிஸ்தவ வாழ்வுக்கான பொருளைக் கண்டறிவதில்லை.  இயேசு "தனிமையில் இறைவேண்டலில் இருந்தார்" என்பதும், "சீடர்கள் அவருடன் இருந்தார்கள்" என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கய அம்சமாகும். நம்மிடம் உலகப் பற்றைவிட இறையன்பு மேலோங்கியிருந்தால்தான்  மெசியாவாகிய ஆண்டவர் இயேசு விட்டுச் சென்ற பணிகளைத் தொடர  முடியும் என்பதை நினைவில் கொள்வோம்.  

நமது இதயமே ஆண்டவராகிய இயேசு மாட்சிபடுத்த விரும்பும் ஆலயம். இதை நாம்தான் அழகுப்படுத்த முற்சிக்க வேண்டும். அதைக் கள்வர் குகையாக்கினால், அதன் அழகுத் தோற்றம் எருசலேம் ஆலயம் போல் அழிவுற நாமே காரணமாகிவிடுவோம். 

இறைவேண்டல்.

அன்புள்ள ஆண்டவரே, உண்மையான, ஆழமான மற்றும் நிலையான இறைவேண்டல் மூலம் உம்மையும் தந்தையையும் நான் அறியும்படி,  என்னை உம்மிடம் ஈர்த்தருள்வீராக. ஆமென்.

 


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452