சீடத்துவம்- நம்பிக்கையில் உறுதி, நற்செய்தியில் துணிவு! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள்-பெருவிழா
தி.பணி 12: 1-11
2 திமொ 4: 6-8, 17-18
மத்தேயு 16: 13-19
சீடத்துவம்- நம்பிக்கையில் உறுதி, நற்செய்தியில் துணிவு!
முதல் வாசகம்.
திருத்தூதர் பணிகள் 12:1–11-ல், அரசன் ஏரோது திருஅவையைத் துன்புறுத்தத் தொடங்கினான். அவர் யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொலை செய்தான். இது யூதர்களுக்கு மகிழ்ச்சியளித்ததால், பேதுருவையும் கைது செய்து சிறையில் அடைத்தான். பாஸ்கா விழா முடிந்தபின் அவரை மக்களின் முன் நிறுத்தி விசாரிக்கத் திட்டமிட்டான்.
ஆனால், திருஅவையினர் பேதுருவுக்காக இடைவிடாமல் இறைவனை நோக்கி மன்றாடியதன பலனாக, அன்றிரவு, பேதுரு இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டு வீரர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தபோதும், ஆண்டவரின் தூதர் தோன்றி, அவரை விடுவித்தார் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
மேலும், தூதர் அவரை எழுப்பி, உடை அணிந்து தம்மைப் பின்தொடருமாறு கூறினார். பல காவல்களைத் தாண்டி, நகரின் இரும்புக் கதவு தானாகவே திறந்தது. பின்னர் தூதர் மறைந்தார். அப்போதுதான் பேதுரு இது கனவல்ல, உண்மையாகவே ஆண்டவர் தம்மை ஏரோதின் கையிலிருந்தும், யூதர்களின் தீய திட்டங்களிலிருந்தும் விடுவித்தார் என்பதை உணர்ந்தார்.
இரண்டாம் வாசகம்.
திருத்தூதர் பவுல் தன் வாழ்வின் இறுதி நேரம் நெருங்கிவிட்டதை உணர்ந்து, தன்னை இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பலியாகக் கருதுகிறார். அவர், "நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை நிறைவு செய்தேன்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" என்று நம்பிக்கையுடன் கூறுகிறார். இதற்காக, நீதியின் ஆண்டவர் அவருக்கும், அவருடைய வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும் அனைவருக்கும் நீதியின் வெற்றிமாலையை வழங்குவார் என்ற உறுதியை வெளிப்படுத்துகிறார்.
அனைவரும் தம்மைக் கைவிட்டபோதிலும், ஆண்டவர் தம்முடன் இருந்து தமக்கு வலிமை அளித்தார் என்று பவுல் சாட்சியமளிக்கிறார். இறைவனுக்கே என்றென்றும் மாட்சி உண்டாகுக என்று புகழுரைத்து முடிக்கிறார் பவுல்.
நற்செய்தி.
இயேசு தமது சீடர்களிடம், "நான் யார் என்று மக்கள் கூறுகிறார்கள்?" என்றும், கிடைத்தப் பதில்களைத் தொடர்ந்து "நீங்கள் என்னை யார் என்று கூறுகிறீர்கள்?" என்றும் கேட்டார். அதற்கு பேதுரு அனைவரையும் முந்திக்கொண்டு , "நீர் வாழும் கடவுளின் மகனாகிய மெசியா" என்று நம்பிக்கை அறிக்கையை வெளிப்படுத்தினார்.
பேதுருவின் இந்த நம்பிக்கையைப் இயேசு பாராட்டி, அவரை "பாறை" என்று அழைத்து, அந்த விசுவாசத்தின் மேல் தமது திருஅவையைக் அமைப்பதாக வாக்களித்தார். மேலும், விண்ணரசின் திறவுகோல்களை அவரிடம் ஒப்படைத்து, கட்டுவதற்கும் அவிழ்ப்பதற்கும் அதிகாரம் அளித்தார்.
சிந்தனைக்கு.
இன்று நாம் திருஅவையின் இரு பெரும் தூண்களாகக் கருதப்படும் புனித பேதுரு மற்றும் புனித பவுல் ஆகிய இருவரின் பெருவிழாவை கிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். இருவரும் வெவ்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். பேதுரு ஒரு சாதாரண மீனவர்; பவுல் உயர்ந்த கல்வி கற்ற பரிசேயர். ஒருவர் இயேசுவை மூன்றுமுறை மறுத்தவர்; மற்றொருவர் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியவர். ஆனால் இறைவனின் அருள் அவர்களை மாற்றி, உலகையே மாற்றிய மகத்தான திருத்தூதர்களாக ஆக்கியது என்பது வரலாற்று உண்மை.
இன்றைய நற்செய்தியில், "நீங்கள் என்னை யார் என்று சொல்கிறீர்கள்?" என்ற இயேசுவின் கேள்விக்கு பேதுரு, "நீர் வாழும் கடவுளின் மகனாகிய மெசியா" என்று விசுவாச அறிக்கை செய்கிறார். இந்த உறுதியான நம்பிக்கையின் மீது இயேசு தமது நாம் கொண்டிருக்கும் திருஅவையை ஏற்படுத்தினார். நமது வாழ்க்கையிலும் இதே கேள்வி ஒலிக்கிறது. நமக்கு இயேசு யார்? ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நினைக்கும் ஓர் ஆண்டவரா? அல்லது வாழ்வின் மையமாக இருக்கும் ஆண்டவரா? இக்கேள்விகளுக்கு நாம் உண்மை பதிலைத் தர வேண்டும். ஏனெனில, ஒப்புக்கு இயேசு என் ஆண்டவர் என்று தப்பட்டம் அடிப்பதிலும், பெருமைக்கு கழுத்தில் சிலுவை அணிவதிலும் பயனில்லை.
இரண்டாம் வாசகத்தில் பவுல், "நல்ல போராட்டத்தைப் போராடினேன்; ஓட்டத்தை முடித்தேன்; விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்" என்று தன் வாழ்வைப் பற்றி பெருமிதத்தோடு கூறுகிறார். இறுதிவரை கிறிஸ்துவுக்கு உண்மையாக வாழ்ந்த ஒரு சீடனின் சாட்சி வாக்குமூலமாக நாம் இந்த அறிக்கையைக் காண வேண்டும். இது இயேசுவுக்காக வாழ்ந்த வாழ்வில் உச்ச மகிழ்ச்சியின் வெளிப்பாடு. இத்தகைய மகிழ்ச்சி இன்று நமக்குக் கிடைக்கிறதா? வாழ்க்கையின் சோதனைகளில் நம்பிக்கையை கிஞ்சிற்றும் இழக்காமல் வாழ முற்படுகிறோமா?
முதல் வாசகத்தில் பேதுருவை சிறையிலிருந்து இறைவன் விடுவிக்கிறார். மனிதனால் முடியாததை இறைவன் செய்கிறார். திருஅவை இடைவிடாமல் இறைவேண்டலில் இணைந்தது, அவர்களது இறைவேண்டலுக்கு இறைவன் பதிலளித்தார். குடும்பங்களிலும், திருஅவையிலும், சமுதாயத்திலும் நாம் ஒருவருக்கொருவர் மன்றாடும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆம், புனித பேதுரு நமக்கு உறுதியான நம்பிக்கையைக் கற்பிக்கிறார், புனித பவுலோ நமக்கு அர்ப்பணிப்பு மிகு பணியையும் தைரியமான நற்செய்தி அறிவிப்பையும் கற்பிக்கிறார். ஆகவே, திருஅவையில் செயல் மிகுந்த அன்புப் பணிக்கு நம்மை அர்ப்பணிப்பதே இன்றைய பெருவிழா நமக்குக் கற்பிக்கும் பெரும் பாடமாகப் பெற்று பணியைத் தொடர்வோம்.
இறைவேண்டல்.
அன்பு ஆண்டவரே, புனித பேதுருவின் உறுதியான நம்பிக்கையையும், பவுல் அடிகளின் அயராத நற்செய்திப் பணியையும் நான் என்னில் கொண்டிருக்கும் வரத்தை எனக்குத் தாரும். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452